அறப்பளீஸ்வர சதகம்: பயன்படாதவை!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

ஒன்று இல்லாமற் பயன்படாதவை

கோவில் இல் லாதவூர், நாசியில் லாமுகம்,
கொழுநன் இல் லாத மடவார்,
குணமதில் லாவித்தை, மணமதில் லாதமலர்,
குஞ்சரம் இலாத சேனை,
காவல்இல் லாதபயிர், பாலர்இல் லாதமனை,
கதிர்மதி யிலாத வானம்,
கவிஞர்இல் லாதசபை, சுதிலயை இலாதபண்,
காவலர் இலாத தேசம்,
ஈவதில் லாததனம் நியமம்இல் லாதசெபம்,
இசை லவணம் இல்லா தவூண்,
இச்சையில் லாதபெண் போகநலம், இவை தம்மின்
ஏதுபலன் உண்டு? கண்டாய்!
ஆவியனை யாட்கிடம் தந்தவா! கற்பதரு
ஆகும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

உயிரனைய உமையம்மைக்கு மெய்யில் இடப்பங்கை அருளியவனே!, கற்ப தரு என உலகிற்குப் பயன்படுகிற எமது தேவனே!. திருக்கோயில் இல்லாத ஊரும், மூக்கு
இல்லாத முகமும், கணவன் இல்லாத
பெண்களும், நற்பண்பையூட்டத கல்வியும்,
நறுமணம் இல்லாத பூவும், – யானை இல்லாத படையும்,
வேலியில்லாத பயிரும், மழலைச் சிறுவர் இல்லாத இல்லமும், ஞாயிறுந் திங்களும் உலவாத‌வானமும், புலவர்கள் இல்லாத அவையும், இசையுந் தாள
அளவும் இல்லாத சங்கீதமும், அரசன் இல்லாத
நாடும், கொடையில்லாத பொருளும், ஒழுங்கு இல்லாத வழிபாடும், இசை ஏற்ற அளவு உப்பில்லாத உண்டியும், விருப்பமற்ற மங்கையின் இன்பமும், ஆகிய
இவற்றால், என்ன நன்மை யுண்டு? கண்டாய் :

கோயில் இல்லாத வூர் முதலானவை பயனற்றவை.

Leave a Reply