
“நாம் எந்த சுகத்தை அடைய நினைக்கிறோமோ அது (அந்த சுகம்) இந்த லெளகிகமான விஷயங்களினால் கிடைக்காது. ஆகையால் திரும்பவும் இந்த விஷயங்களில் ஈடுபடுவது வீண்” என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.
அப்படியென்றால், “எதில் வாஸ்தவமான சுகம் கிடைக்கும்?” என்று கேட்டால், “பகவானுடைய நினைவு மனதில் இருந்தால், மனதில் ஸத்விஷயங்களைப் பற்றி நினைத்தால், அப்போதுதான் வாஸ்தவமான சுகம் நம் அனுபவத்திற்கு வரும்” என்பதே அதற்குப் பதில், எல்லோரும் இதை அனுபவித்துப் பார்க்கலாம்.
மற்ற எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு பகவானுடைய சன்னிதியில் ஒரு பத்து நிமிடங்கள் உட்கார்ந்து வேறு எதையும் சிந்திக்காமல், பகவானுடைய ரூபத்தை மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்போது மனதிற்கு ஒரு சொல்ல முடியாத இன்பம், ஒரு சொல்ல முடியாத ஆனந்தம் உண்டாகும் என்பதை நாம் நம் அனுபவத்திலேயே பார்க்கலாம்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்