வைகுண்ட ஏகாதசி விரத பலன்!

செய்திகள்

விரதங்களில் உயர்ந்ததான வைகுண்ட ஏகாதசி விரதம், அனுஷ்டிப்பவர்களை பிறப்பிறப்பில்லாத பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது. பரந்தாமனின் திருவடிகளை அடையச் செய்து, நித்திய வைகுண்டவாசத்தை அளிக்கிறது.

மது கைடபர்களின் வேண்டிக்கொண்டபடி, இந்த விரதத்தினை மேற்கொள்ளும் எல்லா அடியவர்களுக்கும் பரந்தாமன் சொர்க்க வாசலை திறந்து வைகுண்ட பதவியை அளிக்கிறார் என்பது ஐதீகம்.

மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் அனுஷ்டிக்கப்படும் ஏகாதசி விரதமே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. பெருமாளை எண்ணி இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள், ஏகாதசிக்கு முந்தின நாளான தசமியன்று ஏகாதசி விரதத்தை துவங்குவது சிறந்தது. முடியாதவர்கள் ஏகாதசி அன்று விரதத்தை துவங்கலாம்.

ஏகாதசிக்கு முந்தய நாளே விரதத்தை துவங்குவோர் அந்த நாளில் ஒரு வேளை சாப்பிடலாம் என்கின்றன ஆன்மிக நூல்கள். அதுவும் அதிக தாளிகை இல்லாத பத்திய உணவாக இருக்க வேண்டும்.

பகவான் திருநாமங்களை ஓதியபடி அந்த நாள் முழுக்க அமைதியான தியானத்தை மேற்கொள்ள வேண்டும். மறுநாள் ஏகாதசி தினத்தன்று, நீராடி, விரதம் தொடங்க வேண்டும்.

அன்று முழு நாள் உபவாசம் இருக்க வேண்டும். அடுப்பில் ஏற்றாததை சாப்பிடலாம் என்பதெல்லாம் தவறான கருத்து. வேண்டுமானால் துளசி தீர்த்தம் குடிக்கலாம். முதியவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

உபவாசம் மட்டுமின்றி ஏகாதசி தினத்தின் இரவு முழுக்கவும் திருமாலின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். ராமாயணம். பாரதம். கீதை போன்றவைகளைப் படிக்கலாம். உபன்யாசம், திருமால் நாமாவளிகளை கேட்கவும் செய்யலாம்.

இரவு முழுக்க எல்லா இந்திரியங்களும் பகவானின் அனுபவங்களில் திளைக்க வேண்டும் என்பதே இந்த வைகுண்ட ஏகாதசி விரதத்தின் நோக்கம். இந்த நாளில் முழுக்க முழுக்க தூங்கவே கூடாது என்பது முக்கிய விதி.

ஏகாதசி அன்று இரவில் விஷ்ணு கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட வேண்டும். முக்கியமாக அன்றைய தினம் மட்டுமே திறக்கப்படும் சொர்க்க வாசலைக் கடந்து பெருமாளோடு பரமபதத்தினை அடைவது சிறப்பானது.

இந்த வைகுண்ட ஏகாதசி வழிபாட்டினால் தீராத நோய்கள் தீரும், சகல செல்வங்களும் பெருகும். பகைவர்கள் பயம் ஒழியும் என்று கூறப்படுகிறது. காயத்ரியை மிஞ்சிய மந்திரமில்லை; ஏகாதசியை மிஞ்சிய விரதமில்லை என்ற வாக்கியமே இந்த விரதத்தின் பெருமையை எடுத்துக்கூறுகிறது.

ஏகாதசி விரதம் முடிந்த மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். இன்று எடுத்துக்கொள்ளும் விரதம் ‘பாரணை’ எனப்படுகிறது. பாரணை என்றால் விரதத்தினை முடிக்கும் முறை எனலாம்.

இந்த நாளில் காலையிலேயே 21வித காய்கறிகள் இடம் பெற்ற உணவைச் சமைத்து உண்ண வேண்டும். பரங்கிக்காய், அகத்திக்கீரை, நெல்லிக்காய் இந்த நாளில் அவசியம் சேர்க்க வேண்டும்.

பெருமைமிக்க இந்த வைகுண்ட ஏகாதசி விரதத்தினை முப்பத்து முக்கோடி தேவர்களும் ஏற்பதாக ஐதீகம். இதனாலேயே இந்நாளுக்கு ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி’ எனவும் பெயருண்டு

Leave a Reply