நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-  திருநெடுந்தாண்டகம்

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

சாரநாதன், ஸ்ரீரங்கம்

நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-
திருநெடுந்தாண்டகம் 14/12

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் என்ற விழாவாக, அன்று மாலை திருமங்கை ஆழ்வாரின் முப்பது பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்ற பிரபந்தம் சந்தனு மண்டபத்தில் அரையர் ஸ்வாமிகளால் தாளத்துடன் சேவிப்பர்!

தாண்டகம் என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும் ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத்தேற்றக்கு பெரியபெருமாளே ஊன்றுகோல் என்பதை ஆழ்வார் இந்த பிரபந்தத்தில் விளக்குகிறார்!

மேல்நாட்டு வேதாந்தியை (நஞ்சீயர்) வாதத்தில் வென்று, அவரை திருத்திப்பணி கொண்டு திரும்பிய தம் திவ்ய குமாரர் பராசர பட்டரிடம், வேதாந்தியை எப்படி வென்றீர் எனக்கேட்க, பட்டர் திருநெடுந்தாண்டகம் பாசுரங்களில் உள்ள ப்ரமாணங்களைக் கொண்டு வென்றதாக விண்ணப்பித்து தம்முடைய வாதங்களையும் சமர்ப்பித்தார் பெரியபெருமாளிடம்!

இந்த வைபவத்தையே நம்பெருமாள் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் திருநாளாக அன்வயிக்கிறார்!

மற்ற திவ்யதேசங்களில் திருஅத்யயன உற்சவம் அமாவாஸ்யைக்கு அடுத்த பிரதமையன்று திருப்பல்லாண்டுடன் தொடங்குவர். ஶ்ரீரங்கத்தில் மட்டும் ஒருநாள் முன்னரே, அமாவாஸ்யையன்று “திருநெடுந்தாண்டகத்துடன்” *தொடங்குவர் – ஶ்ரீபராசர பட்டரின் பெருமையைக் கொண்டாடும் விதமாக!!

“மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்;
விளக்கொளியாய், முளைத்தெழுந்த திங்கள் தானாய்;
பின்னுருவாய், முன்னுருவிற் பிணி மூப்பில்லாப்,
பிறப்பிலியாய், இறப்பதற்கே எண்ணாது எண்ணும்;
பொன்னுருவாய், மணியுருவில் பூதமைந்தாய்ப்,
புனலுருவாய், அனலுருவில் திகழுஞ்சோதி;
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை,
தளிர்புரையும் திருவடி என் தலைமேலவே!”

-திருநெடுந்தாண்டகம் (முதல் பாசுரம்)

தேக ஆத்மா அபிமானத்தைப் போக்கி, நான்கு வேதங்களையும் தந்து, அஞ்ஞானத்தை அகற்றி, ஜ்ஞான விளக்கேற்றி, நீர்மை குணத்தோடு ஸர்வ சுலபனான எம்பெருமான் என்னுள்ளத்தில் எழுந்தருளி, தம் குளிர்ந்த திருவடிகளை என் சென்னியில் சாற்றினான்!

Leave a Reply