ஹிந்து ஆன்மிக நம்பிக்கையுள்ளவர் எவரும் சாதி பார்ப்பதில்லை!

செய்திகள்

நாயன்மார்களில் பெரும்பாலோர் ப்ராம்மணர்கள் இல்லை. ஆழ்வார்களில் பெரும்பாலோர் ப்ராம்மணர்கள் இல்லை.

இரு வகையினருக்கும் முழுமையான ஞானம் மறுக்கப்படவில்லை. அவர்கள் உயர்ந்த முன்வினைப்பயன். அல்லது இறைவனின் ஓர் ஏற்பாடு அப்படி இருந்திருக்க வேண்டும்.

ஞானம் பக்தி அடைந்து இறையுணர்வுடன் இருந்து இறைமயமாக வாழ சாதி குலம் தடை என்று யாரும் சொல்லவே இல்லையே. முடியாதே. கிடைக்கப் பேறு இருந்தால் அது யாரையும் அடையும். ப்ராம்மணர்கள் தடுத்து விட முடியுமா? தடுக்கத்தான் செய்வார்களா?

ஞானம் பக்தி தன்னுள் மீட்டுக்கொள்ளுதல் ஒவ்வொருவருடைய உரிமை. அவரவர் சொத்து. அரசியல் கட்சி மூலமாகவோ அரசு சலுகை கொடுத்தோ அதெல்லாம் அடையப்படத்தக்கது இல்லை. இதில் நமக்குத் தெளிவு கண்டிப்பாக வேண்டும்.

ஞானம் பக்தி எல்லாம் உணர்வு சார்ந்த அனுபவம். அது ஏதோ பாடம் இல்லை. அது ஏதோ சிலப் பூசைகள் செய்தால் செய்ய வைத்தால் வெளியிலிருந்து பெறப்படும் ஏதோ ஓர் அறிவு இல்லை.

தன்னுள் தான் இறைநிலையில் திளைக்க யார் தடுத்து விடுவார்கள்?

வழிபடுதல் வேறு. கருவறையில் பூசை செய்தல் வேறு. இதிலெல்லாம் உரிமை மற்றும் அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே இறைஞானம் கிடைக்கும்; இறைக்காட்சி கிடைக்கும் என்பதெல்லாம் கிடையாது. அதெல்லாம் பிதற்றல் தான்.

அரசருக்கு ஒரு நீதி, காவல் துறையினருக்கு ஒரு நீதி, இராணுவத்தினருக்கு ஒரு நீதி, ஆசிரியருக்கு ஒரு நீதி, வணிகருக்கு ஒரு நீதி , பணியாளர்களுக்கு ஒரு நீதி பலதரப்பட்டதாக இருக்கும்போது மக்களிடையேக் காணப்படும் பல வகையினர்களுக்கும் வெவ்வேறு நீதி இருப்பதில் தவறே இல்லையே.

மனித நேயம், மனிதாபிமான உணர்வு மற்றும் மனிதம் இதெல்லாம் வேறு. அது பொது அடிப்படை. மனித நேயம் இல்லாதவர்கள், மற்றவர்களைத் துன்புறுத்துபவர்கள், மற்றவர்களைப் புண்படுத்துபவர்கள் மற்றும் அவமதிப்பவர்கள் எங்கும் எல்லா இனத்தவர்களிடையே இருப்பர். இவர்களிடம் அவர்களிடம் எனத் தீர்மானித்து விட முடியாது.

இறைத்தன்மை வேறு மனிதத்தன்மை வேறு. நல்ல மனிதனாக ஆகித்தான் முழு இறைத்தன்மை தன்னுள் யாராக இருந்தாலும் மீட்டுக்கொள்ள இயலும். இதில் வேறுபாடு ஒன்றும் இல்லை.

நம் பிறவியின் நோக்கம் மீண்டும் பிறவாமை தான். அதை அடைய நாம் ஒவ்வொருவரும் சாதி மத பேதமின்றி முயற்சிக்க எந்தத் தடையும் இல்லை.

Tagged

Leave a Reply