குடந்தை, நாகை, காஞ்சி ஆகிய இடங்களில் மூன்று காரோணங்கள் உள்ளன. இவற்றில், இந்தத் தலம் குடந்தை காரோணம் என அழைக்கப்படுகிறது. மேலும், இந்தத் தலத்தில் மூர்த்தியாக குரு, சந்திரனால் பூஜிக்கப்பட்ட வியாழ சோமேசுவரரும், இறைவி தேனார்மொழி சோமசுந்தரி என்னும் சோமநாயகி அம்மனாகவும் எழுந்தருளியுள்ளனர்.
இவற்றோடு, அருணகிரிநாதரால் பாடப்பெற்ற வள்ளி தேவசேனாபதியாக முருகன் காலில் பாதரட்சையுடன் காட்சி அளிக்கிறார். இங்கு கார்த்திகை தினத்தன்று பக்தர்களுக்கு சடாரி தரிசனம் நடைபெறுகிறது.
சிறப்புப் பெற்ற இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக பல இடங்களில் உடைமைகள் இருந்தாலும், அவற்றுக்கான வாடகை உள்ளிட்ட வருவாயை சிலர் கோயிலுக்கு செலுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்தக் கோயிலின் தீர்த்தமான சந்திரபுஷ்கரணி ஆக்கிரமிக்கப்பட்டு, அது இருப்பதே தெரியவில்லை. இந்தக் கோயிலின் குடமுழுக்கு கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆன நிலையில், கோயிலின் பல இடங்களில் விரிசல்களும், கோயில் கோபுரம், விமானம் அருகே செடிகள் முளைத்தும் காணப்படுகின்றன.
நவராத்திரி விழாவையொட்டி, கோயில் கொலு மண்டபத்தில் இருந்த கொலு பொம்மைகளை மண்டபத்திலிருந்து கோயிலின் முக்கிய இடத்தில் வைத்து சோமநாயகி அம்மனுக்கு நவராத்திரி விழா நடைபெற்றது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் கொலு மண்டபம் இடிந்து தரைமட்டமானது. நவராத்திரி விழா முடிந்த பிறகும், இந்த மண்டபத்தில் கொலு பொம்மைகள் இதுவரை வைக்கப்படாமல் இருந்ததால், பழங்காலத்து பொம்மைகள் தப்பின.
கொலு மண்டபத்தின் அடிப்படைச் சுவர் (தாய்ச் சுவர்) சேதமடைந்து எந்த நேரத்திலும் விழலாம் என்ற நிலை உள்ளது. மேலும், மடப்பள்ளி நடவானப் பகுதியிலும் ஆங்காங்கே விரிசல்கள் காணப்படுகின்றன.
கொலு மண்டபம் இடிந்து விழுந்ததையடுத்து, கோயில் நிர்வாக அதிகாரி கோ. கிருஷ்ணகுமார் மற்றும் அறநிலையத் துறையினர் கோயிலுக்கு வந்து இடிந்து விழுந்த பகுதியைப் பார்வையிட்டனர்.