ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் –பகுதி -19
தெலுங்கில்: பி,எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
ப்ரமர கீட ந்யாய: – புழுவைக் குளவியாக்குவது.
ப்ரமர: – குளவி, வண்டு. கீட: – புழு, பூச்சி.
சம்ஸ்கிருத நியாயங்களில் அதிகம் புகழ் பெற்ற நியாயம் ‘பிரமர கீட நியாயம்’. ஆறு மாதங்கள் சகவாசம் செய்தால் அவன் இவனாகி விடுவான் என்று ஒரு பழமொழி உள்ளது. அப்படிப்பட்ட பொருளையே இந்த பிரமர கீட நியாயம் அளிக்கிறது.
குளவி மண் உருண்டையை எடுத்து வந்து அழகான கூடு கட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். கட்டி முடித்த பின் பச்சையான (லார்வா) புழு ஒன்றை அந்த கூட்டில் வைத்து மற்றொரு மண் உருண்டையால் மூடிவிடும். பின் அந்த கூட்டைச் சுற்றி வந்து ஜும் மென்று ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும். கூட்டிலிருக்கும் புழு அதை கேட்டு வளர்ந்து தானும் ஒரு குளவியாக மாறி கூட்டை உடைத்துக் கொண்டு வெளி வரும். இதனை வேதாந்த மொழியில் கூறுவதே இந்த பிரமர கீட நியாயம். குளவி, கூட்டைச் சுற்றி வந்து ஓசை எழுப்புவதால் புழு அந்த ஓசையின் மேல் மனதை செலுத்தி குளவியாக மாறுகிறது என்பது இதன் விளக்கம்.
குருநாதர் சீடனை தன்னைப் போன்றவனாக மாற்றும் முயற்சியே இந்த பிரமர கீட நியாயம். குருகுலம் என்ற கூட்டில் வைத்து வேத அத்யயனம் மூலம் ஞானத்தை சீடனுக்கு போதித்து அவனை மற்றொரு ஞானியாகத் தயார் செய்யும் செயலே இந்த நியாயத்தில் உள்ள சூட்சுமம்.
பிரமர கீட நியாயம் பல செய்திகளை நமக்கு நினைவு படுத்துகிறது. வரலாற்று ஆசிரியர்களுக்குப் புலப்படாத வரலாறு கொண்ட பாரத தேசத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கலைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன என்று கேட்டால் இந்த பிரமர கீட நியாயத்தின் வழியேதான் என்று கூறலாம். பரம்பரையாக குருவிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் கற்றுத் தேர்ந்த கலைகளையும் கல்வியையும் சீடனும் மகனும் அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தந்து தன்னைப் போன்றவனாக தேர்ச்சி பெறச் செய்து சமுதாயத்திற்கு அளித்த காரணத்தால்தான் பல கலைகள் பாதுகாக்கப்பட்டன.
மன ஒருமைப்பாட்டோடு, தன்னை மறந்து பணி புரிந்தால் உயர்ந்த பலன் கிட்டும் என்பது இந்த நியாயத்திலிருந்து கிடைக்கும் நீதி. நம் மனது எதனை தீவிரமாக எண்ணுமோ அதுவே நாமாகி விடுவோம் என்று இந்த நியாயம் போதிக்கிறது. அப்படியின்றி மனதின் சிறிது பகுதியை வேறு காட்சியில் செலுத்தி, சிறிது பகுதியை மட்டுமே தெய்வ தியானத்தில் செலுத்தினால் மன ஒருமைப்பாடு, ஏகாக்ர சித்தம் இல்லாத காரணத்தால் இறைவனின் காட்சி உடனே கிடைக்காது என்பது இந்த நியாயத்தின் உட்பொருள்.
பகவத்கீதை (5/17) ஆத்ம ஞானம் பெற வேண்டுமானால் மோட்சத்தின் மீது நாட்டம் இருந்தாலும் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி குறிப்பிடுகிறது.
ஆத்ம ஞானம் என்ற இலக்கை சாதிக்க நினைப்பவர்கள் ஆத்மாவிடமே மனதை ஒப்படைத்து அதனிலேயே நிஷ்டையோடு லயித்து அதனையே சரணடைந்து வாழ வேண்டும் என்று கீதை போதிக்கிறது.
புழு (ஜீவன்) குளவியையே (இறைவனையே) சிந்தித்து தன் வடிவத்தை குளவியாக மாற்றிக் கொள்வதே இந்த பிரமர கீட நியாயம். நாரத முனிவர் போதித்த நவவித பக்தி மார்கங்களில் ஒன்று ஆத்ம நிவேதனம். அதாவது தன்னை மறந்து ஆத்மாவில் ஐக்கியமாவது.
“ஆப ஸத்ருஸ் ஹம் சப் ஹோ” என்ற பக்தி கீதத்தில், “அமூர்த மூர்த மூர்திமந்த” -என்னை நீயாக மாற்று என்று இறைவனை வேண்டிக் கொள்வது இதற்காகத்தான்.
உலகில் பல மகான்கள் இது போன்று தீவிரமாக சாதனை புரிந்து இறைவனின் சாட்சாத்காரம் பெற்றதோடு அன்றி இறைவனிடம் லீனமானார்கள்.
நம் வீட்டில் இஷ்ட தெய்வத்தின் படத்தை வைத்து கொண்டு அதனையே பார்த்தபடி காலையில் எழுந்திருப்பது, அந்த தெய்வத்தின் லீலைகளையும் குணங்களையும் சிந்திப்பது என்று பழக்கப்படுத்திக் கொள்வதே இந்த நியாயத்தின் பிரயோஜனம்.
பிரகலாதனின் மதியில் நாரத முனிவர் ஹரிபக்தி என்ற விதையை நட்டார். சுபத்திரையின் கருவில் இருந்த சிசு அர்ஜுனன் போதித்த யுத்த வியூஹத்தை அப்படியே நினைவில் கொண்டான். பிரமர கீட நியாயத்திற்கு இவை எடுத்துக்காட்டுகள். பிரம்மஞானியான மதாலசா தன் பிள்ளைகளை தொட்டிலில் இட்டு “சுத்தோசி, ஞான ரூபோஸி, முக்தோசி மா ருத” என்றாள். அந்தப் பிள்ளைகள் ஞானிகளாகி சுக முனிவர் போல கிளம்பிச் சென்று விட்டார்கள் என்ற வரலாறும் இந்த நியாயத்தை நினைவுபடுத்துகிறது.
ஜப்பானில் ஒரு ஆச்சரியமான முயற்சி நடந்தது. ரோஜாச் செடியின் மீது ஆராய்ச்சியாளர்கள் ஒரு சோதனை நடத்தினார்கள். “ரோஜா! உனக்கு பயம் இல்லை. உனக்கு யாரும் தீங்கு செய்ய மாட்டர்கள்” என்று சில நூறு முறை அந்த செடியிடம் திரும்பத் திரும்ப சொனனார்கள். வியப்பாக அந்த ரோஜாச் செடிக்கு முட்களே முளைக்கவில்லை.
இந்த நியாயத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டைப் பாப்போம். பரோடாவில் டாக்டர் ஷைலஜா மெஹ்தா என்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளார். 2009 ல் நடந்த ஒரு வியப்பான சம்பவம் வாட்சப் ஊடகத்தின் மூலம் பலருக்கும் தெரியவந்தது. அதில் வரும் தாய்தான் நம் குளவி. அவருடைய ஆறு வயது சிறுமிக்கு இதய ஆபரேஷன் செய்ய வேண்டி வந்தது. அந்தச் சிறுமிக்கு தாயார் மிகவும் தைரியத்தை எடுத்துரைத்து வந்தார். “உன் இதயத்தில் கடவுள் இருக்கிறார். அவர் உன்னைக் காப்பற்றுவார்” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். தினமும் நெற்றியில் விபூதி இடுவார். இதய ஆபரேஷனுக்கு முன்னர் சிறுமி மிகவும் நம்பிக்கையோடு, “டாக்டர்! எனக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி என்று அனைவரும் சொல்கிறார்கள், எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? இதயத்தில் கடவுள் உள்ளார் என்று என் அம்மா கூறுகிறாள். நீங்கள் இதயத்தை ஓபன் செய்யும் போது கடவுளைப் பார்ப்பீர்கள் அல்லவா? கடவுள் எப்படி இருக்கிறார் என்று எனக்குச் சொல்வீர்களா?” என்று கேட்டாள். மருத்துவர்கள் வியந்து போயினர். அந்தச் சிறுமியின் நம்பிக்கைக்குத் தகுந்தாற்போலவே ஆபத்தானது என்று நினைத்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தாய் செய்த உபதேசம் சிறுமிக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்தது. இது பிரமர கீட நியாயத்திற்கு எடுத்துக்காட்டு.
ஸ்ரீராமகிருஷ்ண மிஷின் (பாக்கியநகரம்) கர்பிணிப் பெண்களுக்கு அளிக்கும் ‘ஆர்யஜனனி’ போதனை மூலம் உத்தம சந்ததி ஏற்படும்படி செய்து வரும் முயற்சிக்குத் துணையாக்கம் இந்த நியாயம்தான் போலும்.
இதுவரை நாம் பார்த்தவை நேர்மறை எடுத்துக்காட்டுகள். இதற்கு மாறாக எதிர்மறை எடுத்துக்காட்டுகளும் இல்லாமல் இல்லை.
பாலைவன மதத்தின் வெறியர்கள் அறியாத சிறு வயதில் இருக்கும் பிள்ளைகளை ஒன்று திரட்டி அவர்கள் மனதில் விஷ எண்ணங்களை விதைக்கும் செயலை அதே வேலையாகச் செய்து வருவதால் ஹிந்து மத வெறுப்பாளர்கள் உருவாகுகிறார்கள். நம்மவர்களின் மீது கல் எறிவதை புனிதச் செயலாக நினைப்பவர்கள் தயாராகி வருகிறார்கள். இப்படிப்பட்டதே விக்ரக வழிபாட்டுக்கு எதிராக சர்ச் கற்றுத் தரும் பாடங்களும். இவை அனைத்தும் எதிர்மறை சிந்தனைக்கு எடுத்துக்காட்டுகள்.
பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை நல்ல பாடங்களோடு தாய் சொல்லிக் கொடுத்து வளர்த்தால் அவர்கள் பண்பாடுள்ளவர்களாக உருவாகுவார்கள் என்று மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கை கற்றுத் தரும் பாடம் இது. பிரமர கீட நியாயம் என்பது அறிவியல் பூர்வமான கல்வி முறை. மன ஒருமைப்பாட்டோடு கூடிய சிந்தனையை ஏற்படுத்தும் வழிமுறை. குருமார்களும் பெற்றோரும் அன்போடு தம்மை போன்றவர்களை உருவாக்கும் செயலே இந்த பிரமர கீட நியாயம்.
சுபம்!