அறப்பளீஸ்வர சதகம்: புலவர் வறுமை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

கவிஞர் வறுமை

எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை
இணையிலாச் சேடன் என்றும்,
ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்
இணையிலாக் கர்ணன் என்றும்,
அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனை
அதிவடி மாரன் என்றும்,
ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனை
ஆண்மைமிகு விசயன் என்றும்,
முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை
மொழிஅரிச் சந்த்ர னென்றும்,
மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்
முறையின்றி ஏற்ப தென்னோ?
அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே!
அமலனே! அருமை மதவேள்!
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

நெருப்பைப்போலத் தோன்றி வந்த நஞ்சுண்ட கழுத்தையுடையவனே!,
குற்றம் அற்றவனே!, அருமை தேவனே!, எழுதவும் படிக்கவும் வழியறியாத
பேதையை ஒப்பற்ற ஆதிசேடன் என்றும், கொடுத்தறியாத பெரிய
அழுக்கனை அவையிலே ஒப்பற்ற கொடையிற் சிறந்த கர்ணன் என்றும்,
அழகு இல்லாத மிகுந்த அருவருப்பான உருவமுடையவனைப்
பேரழகுடைய காமன் என்றும், படையேந்தவும் பழகாத
ஆண்மையற்றவனை வீரத்திற் சிற்ந்த விசயன் என்றும்,
முற்றிலும் பொய்புகன்று திரியும் வஞ்சகனைச் சொல்லில் அரிச்சந்திரன்
என்றும், இவ்வாறு பழைமையான இந்த உலகத்திற் பாவலர்கள் புகன்று
தகுதியின்றி இரப்பது என்ன காரணமோ?

முற்காலத்தில் வறுமை மிகவும் கொடியதாகையாற் புலவர்கள் ஒருவனுக்கு ‘இல்லாத சொல்லிப்’ புகழ்தல் இயற்கையாக இருந்தது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply