
சகுனம் – 1
சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறு
சூகரம் கீரி கலைமான்
துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகை
சொற்பெருக மருவும் ஆந்தை
வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்
விளங்கும்இரு நா உடும்பு
மிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்
வெற்றியுண் டதிக நலம்ஆம்;
ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலைதாக்கல்,
ஒருதுடை யிருத்தல், பற்றல்,
ஒருதும்மல், ஆணையிடல், இருமல், போ கேலென்ன
உபசுருதி சொல்இ வையெலாம்
அல்லல்தரும் நல்லஅல என்பர்; முதி யோர்பரவும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
பெரியோர்கள் வாழ்த்துகின்ற
தூயவனே!, அருமை தேவனே!, சொல்லுதற்கு அரிய கருடனும், குரங்கும், பாம்பும், மூஞ்சுறும், பன்றியும், கீரியும், கலைமானும், தூயதான கரிக்குருவியும், அட்டையும், எலியும், இழிந்த கோட்டானும், மிகுதியாகப் பேசப்படும் ஆந்தையும், வெல்லமுடியாத கரடியும், காட்டுப் பசுவும், பூனையும், புலியும் மேலாக விளங்கும் இரு நாவையுடைய உடும்பும், (என) மிகுதியாகக் கூறப்படும் இவை யாவும், வலத்தில் இருந்து இடப்பக்கம் போனால் வெற்றியுண்டாகும்; மிகுதியான நலமும் உண்டாகும்,
விரைந்து வழிப்பயணம் செல்வோரின் தலையில் இடித்தல், ஒருகாலில் நிற்றல், வந்து கையைப் பிடித்தல், ஒற்றைத் தும்மல், ஆணையிடுதல், இருமுதல், போகாதே என்று காதில் விழும்படி கூறுதல், இவை யாவும் துன்பமே தரும், நல்லன அல்ல என்பர்.