அறப்பளீஸ்வர சதகம்! தாழ்வும் உயர்வாகும்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

தாழ்வும் உயர்வுபெறும்

வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
மேன்மையோர் செய்யில் அழகாம்!
விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
விழைமங்கை செய்யில் அழகாம்!
தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து
சாரிலோ பேர ழகதாம்!
சரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்
சமர்செய்து வரில்அ ழகதாம்?
நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
நாளும்அது ஓர ழகதாம்!
நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்
நகைசெய்தழ கன்றென் பர்காண்!
அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

உள்ளத்திலே ஆராயும் நல்ல தவத்தினர்க்கு அருள்செய்யும் தலைவனே!,
முதல்வனே!, அருமை தேவனே!, பெருமதிப்புச் செயலானாலும் இழிவுச் செயலானாலும் பெரியோர்கள் செய்தால்
அழகுதரும். காமநோயானாலும் காமக்கூட்டம் ஆனாலும் விரும்பத்தக்க
மங்கைப் பருவப் பெண் கொடுத்தால் அழகு ஆகும், மிக்க அறங்களைப்
புரிந்து தக்க தாழ்வாயினும் வாழ்வாயினும் பெற்றால் மிகுந்த அழகு ஆகும்,
போர்புரிந்ததால் உடம்பில் ஏதாயினும் காயமாவது பெருமையாவது
உண்டானால் அழகு ஆகும். மலைபோன்ற மதயானையின்மேல் ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் அச்செய்கை எப்போதும் ஓரழகாக இருக்கும், நாயின்மேல் ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் பார்த்தபேர் நகைத்து அழகாகாது என்று கூறுவர்.

பெரியோராற் கிடைக்கும் இழிவும். பருவமங்கையால் உண்டாகும் காமநோயும், அறஞ்செய்து பெற்ற தாழ்வும், போர்ப்புண்ணும், யானைமீது ஏறி வீழ்தலும் அழகையே தரும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply