அறப்பளீஸ்வர சதகம்: வசப்படுத்தல்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி

கொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்று
கோத்துவச விர்த்தி கொள்வார்;
குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்
கொண்டுவச விர்த்தி கொள்வார்;
படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்
பற்றிவச விர்த்தி கொள்வார்;
பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை
பழக்கிவச விர்த்தி கொள்வார்;
விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
வீசிவச வீர்த்தி கொள்வார்;
மிக்கபெரி யோர்களும் கோபத்தை அறிவால்
விலக்கிவச விர்த்தி கொள்வார்;
அடியவர் துதிக்கவரு செந்தா மரைப்பதத்
தையனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

திருவடியார்கள் வாழ்த்த வருகின்ற செந்தாமரை மலரனைய திருவடியை
உடைய தலைவனே!, அருமை தேவனே!,
கொடுந்தன்மையுள்ள பொலிகாளையை (அதன்) இரண்டு மூக்கிலும் ஒரு
கயிற்றைக் கோத்து வசப்படுத்துவர், உலகத்தில் மதயானைகளை
அங்குசங்கொண்டு (தாக்கி) வசப்படுத்துவர், உலகில் நஞ்சுடைய நாகத்தை மந்திரத்தாலும் தந்திரத்தாலும் பிடித்து வசப்படுத்துவர், தாவும் குதிரையை நீண்ட கடிவாளத்தைக் கொண்டு நடைபழக்கி வசப்படுத்துவர்,
நஞ்சுடைய தீயவரைச் சவுக்கைக் கொண்டு அடித்து வசப்படுத்துவர்,
பெரிய சான்றோர்களுங்கூடத் (தம்) கோபத்தை அறிவின் திறமையினால்
நீக்கிக்கொண்டு அடங்கி நடந்து (மனத்தை) வசப்படுத்துவர்.

எருது முதலானவற்றை வசப்படுத்த இங்குக் கூறிய முறையைக் கையாளுதல் உலகியல்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply