
மறைவும் வெளிப்படையும்
சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,
தீதில்கிர கச்சா ரமும்,
தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்
செப்பிய மகாமந்த் ரமும்,
புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணி
புனையும்மட வார்க லவியும்,
புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமது
புந்திக்கு ளேவைப் பதே
தன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார் கருத்தையும்
தன்பிணியை யும்ப சியையும்,
தான்செய்த பாவமும், இவையெலாம் வேறொருவர்
தஞ்செவியில் வைப்ப தியல்பாம்!
அன்மருவு கண்டனே! மூன்றுலகும் ஈன்றவுமை
அன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(நஞ்சு தங்கியதால்) கருமை
பொருந்திய கழுத்தை உடையவனே!, மூவுலகத்தையும்பெற்ற உமையம்மையார் காதலனே!,
அருமை தேவனே!, கிடைத்திருக்கும் செல்வமும், குற்றமற்ற நல்ல கோள்களின் பலனும், உண்டுவரும் மருந்தும்,
உயர்ந்த ஆசான் கூறியருளிய உயர்ந்த மறையும், (தனக்கு நேர்ந்த) இழிவாகிய மானக்கேடும், (தான் பிறர்க்குக்
கொடுத்த) கொடையும் புதிய
பொன்னாலான அணிகளை அணிந்த பெண்களின் சேர்க்கையும்,
புகழ்பொருந்திய பெருமையும்,
(ஆகிய) இவைகள் ஒன்பதினையும், தம்முடைய மனத்தில் வைத்திருப்பதே அறமாகும் என்று அறிஞர் கூறுவர். (பிறரிடம் கூறுதல் பிழை),
பகைவரின் நினைவையும், தன் நோயையும், (தன்) பசியையும், தான் இயற்றிய பாவத்தையும்,
(ஆகிய) இவைபோன்றவற்றை, மற்றொருவர் காதில் விழச்செய்வது (அறத்தின்) இயற்கையாகும். (மறைத்துவைப்பது நலமாகாது)
தான் செய்த பாவத்தைச் சொல்லவேண்டும். எனவே, தான்(செய்தநன்றியைச் சொல்லக்கூடாது என்று அறியலாகும். தானம் என்பது
அதனைக் குறிக்கும் என்றும் கொள்ளலாம் பாவத்தைக் கூறினால் மேலும்
பாவஞ்செய்தல் ஆகாது என்ற மனஉறுதி உண்டாகும்.
தான் பிறந்த ஆண்டு முதலானவற்றைக் கூறுவது தனக்கே
கெடுதியை உண்டாக்கும் பகைவரின் நினைவு முதலானவற்றைக்
கூறுவதனால் நன்மையாகும்.