அறப்பளீஸ்வர சதகம்: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

கூடிற் பயன்படல்

செத்தைபல கூடியொரு கயிறாயின் அதுகொண்டு
திண்கரியை யும்கட் டலாம்!
திகழ்ந்தபல துளிகூடி ஆறாயின் வாவியொடு
திரள்ஏறி நிறைவிக் கலாம்!
ஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூல் ஆயிடின்
உடுத்திடும் கலைஆக் கலாம்!
ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால்
உயர்கவிகை யாக்கொள் ளலாம்!
மற்றும்உயர் தண்டுலத் தோடுதவி டுமிகூடின்
மல்கும்முளை விளைவிக் கலாம்!
மனமொத்த நேயமொடு கூடியொருவர்க்கொருவர்
வாழின்வெகு வெற்றி பெறலாம்!
அற்றகனி யைப்பொருத் தரிபிரமர் தேடரிய
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

(மரத்திலிருந்து) அறுபட்ட பழத்தைத் (திரும்பவும் மரத்திலே)
சேர்த்த திருமாலும் பிரமனும் தேடியும் காணற்கு அரிதான தூயவனே!,
அருமை தேவனே!, பல வைக்கோல் தாள்கள் சேர்ந்து ஒரு கயிறு ஆனால், அக் கயிற்றைக் கொண்டு வலிய
யானையையும் கட்டஇயலும், விளங்கும் பல நீர்த்திவலைகள் கூடி ஆறு ஆனால் குளத்தையும் திரண்ட (பல) ஏரிகளையும் நிறையச் செய்யலாம், சமமான நுண்ணிய பல பஞ்சு கூடி நூலானால் அணியும்
ஆடையாக்கலாம், உயர்ந்து வளர்ந்த கோலோடு துணியும் சேர்ந்தால்
உயர்ந்த குடையாகக் கொள்ளமுடியும், மற்றும் மேம்பட்ட அரிசியும் தவிடும் உமியும் கூடியிருந்தால் (வளம்) மிகுந்த
முளையைத் தோற்றுவிக்கலாம், உள்ளம் கலந்த அன்புடன்‌ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ்ந்தால் பெரு வெற்றியை அடையலாம்.

அற்ற கனியைப் பொருத்தல் : பாண்டவர்கள் காட்டில்
வாழும்போது ஒரு முனிவர்க்குப் பயன்படும் நெல்லிக்கனி ஒன்றை
அருச்சுனன் பாஞ்சாலிக்காக அறுத்துவிட்டான். பிறகு, உண்மையுணர்ந்து
கண்ணனை வேண்டினர். அவர் பாண்டவர்கள் ஒவ்வொருவரும்
உண்மையான மனத்தில், ‘உற்றது கூறின் அற்றது பொருந்தும்’ என்றனர்.
அவர்கள் அவ்வாறே கூறியவுடன் அப் பழம் மரத்திற் பொருந்தியது.

ஒற்றுமையாக எதனைச் செய்தாலும் வெற்றியுண்டு

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply