
குணங்காணும் குறி
கற்றோர்கள் என்பதைச் சீலமுட னேசொலும்
கனவாக்கி னாற்கா ணலாம்;
கற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு
கால்நடையி னும்கா ணலாம்;
அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா
அடக்கத்தி னால்அ றியலாம்;
அறமுளோர் என்பதைப் பூததயை யென்னும்நிலை
யதுகண்டு தான் அறியலாம்;
வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு துடியினால்
விளையும்என் றேஅ றியலாம்;
வீரம்உடை யோரென்ப தோங்கிவரு தைரிய
விசேடத்தி னால்அ றியலாம்;
அத்தா! குணத்தினாற் குலநலம் தெரியலாம்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தலைவனே!, பெரியோனே!,
அருமை, தேவனே!, ஒழுக்கமுடன் பேசும் உயர்ந்த மொழியினாற்
படித்தவர்கள் என்பதை அறியலாம், நோக்கும் நோக்கத்தினாலும் காலின்நடையினாலும் கற்பு உடையபெண்கள் என்பதை
அறியலாம், எதனிலும் (தாமே பெரியவர் என்று) வராத அடக்கமான
பண்பினால் (தற்பெருமை) அற்றவர்கள் என உணரலாம் உயிர்களிடம்
இரக்கம் என்னும் நிலையைக் கண்டுதான் அறநெறியாளர் என உணரலாம்,
கிளைத்துவரும் செழிப்பினால், விதையிலிருந்து வளரும்
பயிரை விளையும் என்று உணரலாம், மேம்பட்டு வரும் அஞ்சாமைச்
சிறப்பினால், வீரம் உடையோர் என உணரலாம்.
(க-து.) ஒருவருடைய செயலினால் அவர் பண்பை அறியலாம்.