“Unification of India as one country is British contribution”
“பாரத தேசத்தை ஒரே நாடாக இணைத்தது நாங்கள்தான்!” – என்று பிரிட்டிஷார் பிரச்சாரம் செய்தார்கள். இது பொய்ப் பிரச்சாரம்.
பிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய மற்றுமொரு வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் இது. பிரிட்டிஷார் மூலம்தான் நம் தேசம் ஒன்றாகியது என்று நம்பும் அறியாமைவாதிகள் இன்னும்கூட நிறைய பேர் உள்ளார்கள். இன்றைக்கும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் தேசத்துரோக இடதுசாரிகள் இந்த தவறான கருத்தை கூச்சலாக கூறிக்கொண்டே உள்ளார்கள்.
பிரித்தாளுவதே கொள்கையாகக் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை ஒன்றாக இணைத்தார்கள் என்று கூறுவதை எவ்வாறு நம்புவது? பிரிட்டிஷாரைப் பற்றி சில போலி மேதாவிகள் இதுபோன்ற கருத்தோடு இருப்பது இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தாலேயே நடக்கிறது.
இந்திய மேதாவிகள் சிலர் பிரிட்டிஷார் மீதும் அவர்களின் மொழி மீதும் அவர்களின் கலாச்சாரம் மீதும் அளவுக்கு அதிகமான பக்தி கொண்டவர்கள் இந்தப் பிரச்சாரத்தை நம்பி பிரிட்டீஷாருக்கு ஊழியம் செய்தார்கள். மக்களிடம் ஏற்பட்ட ‘பிரிவினை’ அந்நாளைய ஆட்சியாளர்களுக்கு நன்கு உபயோகப்பட்டது.
“நாங்கள் வந்தபோது ஐநூறுக்கும் மேலான சமஸ்தானங் களோடும் பல்வேறு அரசர்கள் இடையே நடந்த யுத்தங் களோடும் இருந்த இந்தியாவை இணைத்த பெருமை எங்களுடையது” என்பது அவர்களின் வாதம்.
“நவீன ஐரோப்பா கண்டத்தை போலவே இந்தியா கூட தனிப்பட்ட தேசிய கலாச்சாரம், மொழி தொடர்பான சிறப்பு குணங்கள் கொண்ட அநேக தேசங்களின் கூட்டம். இங்கு பல இனத்தவர் வசித்து வருகிறார்கள்” என்பது அவர்களின் விளக்கம்.
“பரஸ்பர ஐக்கிய உணர்வுகளை விட பரஸ்பர வேறுபாட்டு குணங்கள் அதிகமாக உள்ள அநேக இனங்களின் கதம்பக் கூட்டம் இந்த நாடு. இது ஒரு நாடே அல்ல. பின்னமான பல தேசங்களின் கூட்டம். பல வேறுபட்ட ஜாதிகள் ஒன்றாக உள்ளன இங்கே!” என்பது அவர்களின் கொள்கை. இடதுசாரிகளும் அவர்களின் சகவாசத்தில் வளர்ந்த ஆங்கிலக் கல்வி பயின்றவர்களும் பாரத தேசம் ஒரு உப கண்டம் என்றும் அநேக தேசங்களின் சமூகம் என்றும் நினைப்பதற்கு இந்த கொள்கையே காரணமாயிற்று. இந்த நாட்டு மக்களை பிராந்தியம், மொழி, குலம், மதம் என்று பிரிப்பதற்கு இந்தக் கொள்கையே ஆதாரம் ஆயிற்று.
“பிரிட்டிஷாரே தேச ஒற்றுமைக்கு காரணம்! அவர்கள் வெளியேறி விட்டால் இந்த நாட்டை ஆள்வது நம்மால் ஆகாது!” என்ற எண்ணம் ஆங்கிலம் படித்த நம் மேதாவிகளுக்கு ஏற்பட்டது. இது போன்ற எண்ணம் கொண்ட சிலர் பிரிட்டிஷ் அடிமைகளாக, ஏஜெண்டுகளாக வேலை செய்தனர். அவ்வாறு நினைத்து பிரிட்டிஷாருக்கு உபகாரம் செய்தவர்களுக்கு ராஜ்பகதூர் போன்ற பட்டங்கள் கிடைத்தன.
ஆனால் உண்மை என்ன? பாரத தேசம் எல்லையற்ற காலம் முதல் ஒரே நாடு! “ப்ருத்வ்யாஸ்ஸமுத்ர பர்யந்தாய ஏக ராட்” – “சமுத்திரம் வரை வியாபித்த இந்த பூமி அனைத்தும் ஒரே நாடு” என்பது வேதவாக்கு.
பாரத தேச விஸ்தீரணத்தைக் குறித்து நம் ரிஷிகள் இவ்வாறு கூறியுள்ளார்கள்:
“உத்தரம் யத் சமுத்ரஸ்ய ஹிமாத்சேசைவ தக்ஷிணம்
வர்ஷம் தத் பாரதம் நாம பாரத் யத்ரா சந்ததி:”
– சமுத்திரத்திற்கு வடக்கில், இமாலய பர்வத்திற்கு தெற்கே பரவியுள்ள பூமியே பாரத வருஷம். இதன் சந்தானம் பாரதியர்கள்”.
நம் தேசியகவியும் கவிஞர்களின் குருவுமான காளிதாசர், குமாரசம்பவம் காவியத்தில் இவ்வாறு வர்ணிக்கிறார்:
“அஸ்த்யுத்தரஸ்யாம் திசி தேவதாத்யா
ஹிமாலயோ நாம நகாதிராஜ: !
பூர்வாபரௌ தோயநி தீவி காஹ்ய
ஸ்தித ப்ருதிவ்யா இவ மானதண்ட: !!
ராஜ நீதி நிபுணரான சாணக்கியர் பாரத தேச விஸ்தீரணத்தை விவரிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:
“ஹிமவத் சமுத்ராந்தர முதீசீனாம் யோஜன சஹஸ்ர பரிமாணம்” – சமுத்தித்திற்கு வடக்காக, இமாலய பர்வதங்கள் வரை ஆயிரம் யோஜனை நீளம் வியாபித்த பூமி.
நம்நாடு கலாச்சாரத்தின் படி ஒன்றேயானது. இயல்பான எல்லைகள் கொண்ட பூமி. சின்னச் சின்ன சிற்றரசர்கள், சிறிய ராஜ்யங்களாக இருந்தபோதிலும் நம் நாட்டின் முக்கியமான சக்கரவர்த்தி களுக்கு தேசத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வமும் வேகமும் எப்போதும் இருந்தது என்ற உண்மையை மறக்கலாகாது. ராஜசூய யாகம் அசுவமேத யாகம் போன்றவற்றின் இலக்கு பாரததேசம் முழுமையையும் ஏகசக்ராதிபத்தியத்தின் கீழ் கொண்டு வருவதே! மிக உயர்ந்த ஒரே கேந்திர அதிகாரியான சக்கரவர்த்தியின் முன்னால் சிறிய ராஜ்யங்கள் அனைத்தும் பணிபுரிந்து வர வேண்டும் என்பதே இந்த யாகங்களின் நோக்கம். சிறிய அரசர்கள் அக்கிரமம், அதர்மம் செய்யாமல் ஒரு பாதுகாப்புக் கவசமாக இந்த சக்கரவர்த்தி இருப்பார்.
ஜகத்குரு சங்கராச்சாரியார் நாட்டில் நிறுவிய நான்கு பீடங்களான சிங்கேரி, பூரி, துவாரகா, பதரி… நம் நாட்டின் பூகோளத்தை எடுத்துக்காட்டுகின்றன.
விசாலமான பாரத தேசத்தில் 108 சக்தி பீடங்கள் உள்ளன. பிரதானமானவை பதினெட்டு. இவை உள்ள இடங்களை கவனித்தால் உண்மையான பாரதபூமி எது என்பது புரியும். உதாரணத்திற்கு ஹிங்குளா – பாகிஸ்தானில் உள்ளது.
இந்தியர்கள் சம்பிரதாயமாக குளிக்கும்போது சொல்லும் “கங்கே ச யமுனே சைவ…” என்ற சுலோகம் பாரத தேசம் கணக்கில்லாத காலம் முதல் ஒன்றே என்பதை தெரிவிக்கிறது. புகழ்பெற்ற “காசி – ராமேஸ்வரம் யாத்திரை” நாட்டின் ஒற்றுமையை விளக்குகிறது.
இந்தியர்கள் பவித்திரமாகப் போற்றும் நகரங்கள்… “அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா வைஷாலி த்வாரகாஸ் சைவ பூரி தக்ஷசிலா கயா !!” இவற்றின் தரிசனத்தை எண்ணுவது என்பதே மோக்ஷபுரி யாத்திரை. இவை அனைத்தும் இந்தியா என்பது ஒரே நாடு என்ற கருத்தை உறுதி செய்கின்றன.
ஹிந்துக்கள் பூஜையின்போது கூறும் சங்கல்பம் நம் தேசம் ஒன்றே என்பதை தெரிவிக்கிறது. ”பாரத வர்ஷே பரத கண்டே…” என்கிறோம். இந்தப் பழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல. பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் கூட இதே சங்கல்பத்தை கூறுவார்கள்.
இந்தியாவில் எங்கே வசிப்பவராக இருந்தாலும் காசிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். கங்கையை பவித்திரமாக கருதுவார்கள். இந்தியாவில் உள்ள எந்த ஒரு இடத்திற்கும் மற்ற இடங்களோடு பிரிக்க இயலாத, பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது.
வந்தேமாதரம் என்றாலே பாரத பூமி அனைத்தையும் தாயாக நினைத்து வணங்குவதே! இந்த மந்திரத்தை குமரி முதல் இமயம் வரை மக்கள் ஜபம் செய்தார்கள். பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கம் பிரிட்டிஷார் கற்றுக்கொடுத்தது அல்ல அல்லவா? கல்கத்தாவில் பிறந்த இந்த மந்திரம் கேரளாவிலும் சொல்லப்பட்டது அல்லவா!
இந்தியா ஒரே நாடு என்பதற்கு சான்று வேறென்ன வேண்டும்?
பிரித்தாளும் பிரிட்டிஷார் பாரத நாட்டை துண்டாக்கிய பின்பே நம் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார்கள் போலும்! ஒரு வரலாற்றாசிரியர் நாட்டுப் பிரிவினைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் தீட்டப்பட்டது என்று எழுதியுள்ளார். ஆங்கிலேயர்கள் ஒருவேளை கட்டாயம் இந்தியாவை விட்டுச் செல்ல நினைத்தால் அவர்கள் இந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா என்று பிரித்த பின்பே செல்வார்கள் என்றார்.
துரதிருஷ்டகரமான விஷயம் என்னவென்றால் அன்றைய நம் தலைவர்கள் ஆங்கிலேயரின் சதித் திட்டத்திற்கு நன்கு உதவினார்கள்.
ஆனால் நாடு முஸ்லிம் இந்தியா, முஸ்லிம் அல்லாத பிற இந்தியா என்று துண்டாடப்பட்டது. ஹிந்துக்கள் லட்சக்கணக்கான பேர் கொல்லப்பட்டார்கள். பிறர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவே! மௌண்ட்பேட்டன் தன் வேலையை பார்த்துக் கொண்டு போனார்! பிரிவினைக்கு அவர் செய்த சதிகள் பலப்பல.
மௌண்ட்பேட்டனின் ஆசை இந்த நாட்டைத் துண்டாடுவதே! அதற்காகவே 560 சமஸ்தானங்களையும் உசுப்பிவிட்டார். “உங்களுக்கு விருப்பமான வழியில் நடந்து கொள்ளுங்கள். பாரதத்தோடு சேரலாம். அல்லது பாகிஸ்தானோடு சேரலாம். அல்லது சுதந்திரமாக இருக்கலாம்” என்று கூறிய ஆங்கிலேய ஆட்சியாளர் “நாட்டை ஒன்றாக்கினார்கள்” என்று நாம் நினைப்பது எத்தனை அநியாயம்!
பலகாலமாக ஒன்றாக இருக்கும் இந்த நாட்டை மீண்டும் இணைத்தது சர்தார் பட்டேல்!
“Vivisect me first then vivisect the country” – முதலில் என்னைத் துண்டாக்குங்கள். பின்னர் நாட்டை துண்டாக்குங்கள் என்றார் காந்திஜி.
“Partition- it’s a fantastic nonsense” என்றார் நேரு. நாட்டுப் பிரிவினை என்பது பைத்தியக்காரர்களின் சிந்தனை!
இவ்விதமாக தற்பெருமை பீற்றிக் கொண்டவர்கள்தான் நாட்டுப் பிரிவினைக்கு அனுமதி அளித்தார்கள். சுயநல அரசியலுக்காக அன்னை பூமியை துண்டுகளாக்கி பங்கு பிரித்துக் கொண்டார்கள்.
உலகில் எங்குமே பார்க்க முடியாத கிருஷ்ணசாரமிருகம் நடமாடும் இடம் இது. இதனைத்தும் ஒரே நாடு. பா – ரத நாடு! ஞானத்தின் மீது ஆர்வமுள்ள ருஷிகள் வாழும் நாடு!
பெற்ற தாயை கூட்டுச் சொத்தாக நினைத்து அவளை கண்ட துண்டமாக வெட்டிய தீய புதல்வர்கள் இந்த நாட்டிற்கு தலைவரானார்கள். நாட்டுப் பிரிவினையை – இந்து, முஸ்லிம் என்ற அண்ணன் தம்பிகள் தம் சொத்தை பிரித்து கொள்கிறார்கள் என்று சாமர்த்தியமாக எண்ணினார்கள் அந்த தலைவர்கள். ஆனால் இந்துக்களுக்கு பிரத்தியேக ஹிந்து நாடு கிடைக்கவில்லை.
முஸ்லிம்களை சந்தோஷப்படுத்துதல்: 1857 ல் நடந்த முதல் சுதந்திரப் போர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இதயத்தில் கடப்பாரையால் குத்தியது போல் ஆனது. முஸ்லிம்கள் ஹிந்துக்கள் என்று வேற்றுமை இன்றி அனைவரும் ஆங்கிலேயரை எதிர்த்தனர்.
அதற்காகவே பிரிட்டிஷார் தம் அம்புப் பையில் இருந்து டிவைட் அண்ட் ரூல் என்ற அஸ்திரத்தை வெளியே எடுத்தார்கள். முஸ்லிம் தலைவர்களின் மூளையைச் சீண்டினார்கள். “நாங்கள் வருவதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் நீங்கள்தான்! நடுவில் யார் இந்த இந்துக்கள்?” என்று முஸ்லிம்களை தூண்டிவிட்டார்கள்.
ஹிந்து தலைவர்களிடம் நீங்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வந்தால்தான் சுதந்திரம் குறித்துப் பேசுவோம் என்றார்கள்.
அப்போது சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வந்த காங்கிரஸ் தலைவர்கள் முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் வேலையைத் தொடங்கினார்கள். பிரிட்டிஷார் வீசிய வலையில் சிக்கினார்கள். அதில் நாட்டு மக்களையும் சிக்க வைத்தார்கள்.
1923 ஆம் ஆண்டு காகிநாடாவில் காங்கிரஸ் சபை கூடியது. அதில் வந்தேமாதரம் முழு கீதத்தையும் பாடுவதற்காக பிரமுக சங்கீத வித்வான் ஸ்ரீவிஷ்ணு திகம்பர் புலாஸ்கர் வந்திருந்தார். ஆனால் காங்கிரஸ் தலைவராக இருந்த மௌலானா முகம்மத் அலீ அதற்கு மறுப்பு தெரிவித்தார். பாடகர் வந்தேமாதரம் பாடுவதை நிறுத்தவில்லை. அலீ மேடையிலிருந்து இறங்கி பாட்டு காதில் விழாத தொலைவுக்குச் சென்றார் என்று வரலாறு கூறுகிறது.
அதுமுதல் முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் செயலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டது. வந்தேமாதரம் மந்திரம் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாயிலும் ஒலித்து வந்த மகா மந்திரம். அதனை விட்டு விடுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தயாரானார்கள்.
1922 லேயே வந்தே மாதர கீதத்தை நீக்கிவிட்டு முஹம்மத் இக்பால் எழுதிய சாரே ஜஹான் சே அச்சா கீதத்தை எடுத்துக் கொள்ளும் முயற்சி தொடங்கிவிட்டிருந்தது. வந்தே மாதர கீதத்தை துண்டாக வெட்டிப் போட்டார்கள். “கோடிகோடி கண்ட…” விலிருந்து இருக்கும் பொருள் நிரம்பிய கீதத்தை துண்டாக்கி முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவதற்குப் பயின்றான் பாரதிய ஹிந்து.
1937ல் வந்தேமாதரமும் 1947ல் பரதகண்டமும் துண்டாக்கப் பட்டன.
தேசியக்கொடிக்கும் சமாதானப்படுத்தும் நிறங்கள் பூசப்பட்டன. 1931ல் எழுவர் சேர்ந்து…. சர்தார் படேல், மௌலான ஆசாத், டா. அம்பேத்கர், நேரு, தாராசிங், டாக்டர் பட்டாபி சீதாராமையா, காரேகர்… அங்கத்தினர்களாக இருந்து அமைக்கப்பட்ட கொடிக் கமிட்டி, காஷாயக் கொடியே தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது. அதில் அங்கத்தினராக இல்லாத காந்திஜி அதனை ‘வீடோ’ செய்து தற்போது உள்ள மூவர்ணக் கொடியை வரைந்து அதில் நீல நிற தர்மச் சக்கரத்தை வரைந்தார்.
முஸ்லிம்களுக்காக சேர்த்த பச்சை நிறம், கிறிஸ்தவர்களுக்காக வெள்ளை, ஹிந்துக்களுக்கு ஆரஞ்சு என்பது வெளியே தெரியாமல் வேறு வேறு அர்த்தங்களை கற்பித்தார்கள். சிவபவானி பிரார்த்தனையை நீக்கிவிட்டு “ரகுபதி ராகவ ராஜாராமையும் ஈஸ்வர அல்லா தேரே நாமையும் கலந்து முஸ்லிம்களை மகிழ்விப்பதற்கு கடுமையாக முயற்சி செய்தது காங்கிரஸ்.
பசுவதையை விருப்பம்போல் எதேச்சையாக நடத்தும் விதமாக நேரு 1938ல் ஜின்னாவுக்கு வரம் கொடுத்தார். முஸ்லிம்களை மகிழ்விப்பதற்கு செய்த செயல்களின் உச்சகட்டம் இது!
தம் தாய் மதத்திலிருந்து வேறாகி, மதம் மாறிய முஸ்லிம்கள் தம்மை வேறு ஜாதி என்று அறிவித்துக் கொள்ளும் இரு ஜாதிக் கொள்கையை கண்டுபிடித்து பிரச்சாரம் செய்த பெருமை ஜின்னாவையே சேரும்!
1944ல் காந்திஜி பத்தொன்பது நாட்களில் ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஷ்யாம் பிரசாத் முகர்ஜி போன்ற தேசியவாதிகள் ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் கேட்கவில்லை.
அதன் விளைவே ஜின்னா எடுத்து வந்த Direct Action. 1946, ஆகஸ்ட் 16 ம் தேதி ஹிந்துக்கள் மீது ஜிகாத் பிரகடனம் செய்தார் ஜின்னா. அன்று அரசாங்கம் விடுமுறை அறிவித்தது.
பெங்கால், சிந்து பகுதிகளில் பணியிலிருந்த 70% போலீசார் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் மரண வேள்வி நடந்தது. பத்தாயிரம் ஹிந்து ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டார்கள். இந்துக்களை மிகக் கொடூரமாக வெட்டிக் கொன்றார்கள்.
“ஹிந்து ஆண்களை கொடூரமாகக் கொன்றார்கள். எந்த ஹிந்து ஆணை எந்த முஸ்லிம் வெட்டிக் கொன்றானோ அவனே அந்த ஹிந்து ஆணின் மனைவியை உடனுக்குடன் மதம் மாற்றி அங்கேயே திருமணம் புரிந்த நிகழ்வுகள் ஊகிக்கவே இயலாத கொடுமைகள். முல்லாக்களும் மௌல்விகளும் இந்த மதமாற்றங்களுக்கும் திருமணங்களுக்கும் ஏற்பாடுகள் செய்தது இன்னும் கொடுமை” – ஆச்சார்யா கிருபளானி இந்த கொடுமையைப் பார்த்து நொந்து போனார்.
இந்த கொடூர கொலைகளை பற்றி அங்கிருந்த ஆங்கிலேய கவர்னருக்கு புகார் அளித்தபோது, அந்த அதிகாரி கூறிய சொற்கள் காதால் கேட்கக் கூசுபவை. “முஸ்லிம் ஸ்திரீகளை விட ஹிந்து ஸ்திரீகள் மிக அழகாக இருப்பதால் அவ்வாறு அவர்கள் நடந்து கொள்வது இயல்பு தானே!”. இதுதான் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு அளித்த ஆதரவின் லட்சணம்.
இந்த உண்மைகளை மறைத்து வைத்ததால்தான் பிரிட்டிஷாரிடம் விசுவாசம் காட்டுவதும் அவர்களே ஒன்று படுத்தினார்கள் என்ற பொய்யை நம்புவதும் நடக்கிறது.
ரத்தம் சிந்தாமல் அஹிம்சை வழியில் சுயராஜ்யம் பெற்றோம் என்று பச்சைப் பொய்யை நம் ரத்தத்தில் நிறைத்தார்கள். பெங்காலில் ஆரம்பமான Direct Action எனப்படும் ஹிந்து சம்ஹாரம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பரவியது.
பாரத தேசத்தைத் துண்டாக்க வேண்டுமென்று சதித்திட்டம் தீட்டிய சர்ச்சிலின் உண்மை சொரூபம் 1982ல் கிடைத்த சில கடிதங்கள் மூலம் பகிரங்கமானது. சர்ச்சிலும் ஜின்னாவும் ரகசிய பெயர்களால் எழுதி கொண்டதற்கிணங்க இங்கிலாந்து அரசரும் அரசியும் பாகிஸ்தானுக்கு அனுகூலமாக இருப்பதாக இந்த கடிதங்கள் தெரிவித்தன.
1948 ஜூனில் வர வேண்டிய சுதந்திரம், நம் தலைவர்களின் அவசரம் காரணமாக 10 மாதங்கள் முன்னர் தள்ளப்பட்டு குழப்ப நிலைக்கு வழி வகுத்தது. எந்தப் பகுதி எந்த தேசத்தில் சேரப் போகிறது என்பது தெரியாமல் அல்லகல்லோலமானது.
75 சதவிகிதம் இந்துக்கள் இருக்கும் லாகூர் பாரததேசத்தின் பாகமாக இருக்கும் என்றெண்ணிய ஹிந்துக்கள் பலவந்தமாக துரத்தப்பட்டார்கள். பெரும்பாலோர் கொல்லப்பட்டார்கள். நான்காயிரம் கோடி சொத்துக்களை விட்டுவிட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்தார்கள்.
அதேபோல் சிட்டகாங் மலைப்பகுதி கூட யூகிக்க இயலாத அளவுக்கு கிழக்கு பாகிஸ்தான் ஆனது.
எந்தவிதமான ரத்தமும் சிந்தாமல் சுதந்திரம் கொடுத்தோம் என்று வீரம் பேசினார் மவுண்ட்பேட்டன். ஆனால் நடந்ததோ வேறு!
“நானும் சிப்பாய்தான்! ஆனால் இதுபோன்ற மரணவேள்வியை எப்போதும் பார்த்ததில்லை. டில்லி நகரம் அடைக்கலம் வேண்டி வந்தவர்களால் நிரம்பி வழிந்தது. வழியில் அவர்களை சூறையாடினார்கள். பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார்கள்” என்று மவுண்ட்பேட்டன் போன்ற கொடூரனே கூறினான் என்றால் எப்படிப்பட்ட வேதனையான சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கும் என்பதை ஊகிக்கலாம்!
1949ல் நியூயார்க்கில் பேசுகையில் நேரு கூறினார், “இப்படிப்பட்ட கஷ்டமும் நஷ்டமும் நேரும் என்று தெரிந்திருந்தால் நாட்டுப் பிரிவினைக்கு உடன்பட்டு இருக்கமாட்டோம்”.
அதே நேரு 1960 ல் டாக்டர் மோஸ்லியோடு பேசுகையில் கூறினார், “உண்மையில் சுதந்திரப் போராட்டத்தால் நாங்கள் சோர்ந்து போனோம். பெரியவர்களாகி வந்தோம். மீண்டும் போராட்டம்… மீண்டும் சிறைக்கு போவது… எங்களால் இயலாததால் பிரிவினைக்கு உடன்பட்டோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” ( The British Raj by Leonard Mosley)
அதிகாரப் பேராசை என்ற மாயை அவர்களின் கண்ணை மறைத்தது. பாரதத்தாய் துண்டாக்கப்பட்டாள். தன் புதல்வர்களின் கஷ்டங்களைப் பார்த்து கண்ணீர் வடித்தாள்.
ஸ்ரீ ஹெச்டி சேஷாத்ரி எழுதிய இந்திய பிரிவினையின் வேதனைக் கதை The tragic story of Partition என்ற நூலில் இதயத்தை உருக்கும் பல வேதனைச் சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
தெலுங்கில் – பிஎஸ் சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்
(Source: ருஷிபீடம், ஆன்மீக மாத இதழ், ஜனவரி 2020)