அண்ணா என் உடைமைப் பொருள் (48): ஐரோப்பிய சிந்தனை– பெரியவா!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna en udaimaiporul 2 - 4
anna en udaimaiporul 2 - 3

அண்ணா என் உடைமைப் பொருள் – 48
ஐரோப்பிய சிந்தனை – பெரியவா
– வேதா டி. ஸ்ரீதரன் –

கம்யூனிசம் பற்றித் தெரிந்து கொள்வதற்காக கார்ல் மார்க்சின் கருத்துகளைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன்.

எல்லோருக்கும் எல்லா வளமும் சரிசமமாக – இது தான் கம்யூனிசம் உருவாக்க விரும்பும் மனித சமுதாயம்.

இதை அமலுக்குக் கொண்டு வரும் பொருட்டு வர்க்கப் போராட்டம், சோஷலிச சர்வாதிகாரம் முதலிய சில அணுகுமுறைகளை முன்வைக்கிறான், கார்ல் மார்க்ஸ்.

எல்லோருக்கும் என்றால் என்ன, எல்லாம் என்றால் என்ன, வளம் என்றால் என்ன, சமம் என்றால் என்ன?

தனிநபர்களால் ஆன குடும்பம், குடும்பங்களால் உருவாகும் சிறுசிறு ஜனக் கூட்டம், இந்தக் கூட்டங்களை உள்ளடக்கிய பெருந்திரளான சமுதாயம்….

இத்தகைய சமுதாயத்தில் எத்தனை விதமான மனிதர்கள் வாழ்கிறார்கள்? அவர்களின் தேவைகள் என்னென்ன? இந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பொருட்கள் என்னென்ன, பணிகள் என்னென்ன?

இந்த ஜனங்களுக்கு மத்தியில் பரஸ்பர உறவு என்ற ஒன்று இருக்கிறதே, அது எப்படித் தோன்றியது, அதற்கு அடிப்படையாக இருக்கும் அன்பு என்ற அம்சம் எப்படி வந்தது?

இந்த மனிதர்களுக்கு மனம் என்ற ஒன்று இருக்கிறதே, அது இல்லாமல் தனிமனிதனின் இயக்கமே இல்லையே, அந்த மனதுக்குத் தேவைப்படும் விஷயங்கள் என்னென்ன?

இது போன்ற அம்சங்கள் இருக்கின்றன என்பதையே மார்க்ஸ் அறிந்திருக்கவில்லை, அவனைப் பொறுத்த வரை மனிதன் என்பவன், இயந்திரங்களின் உதிரி பாகத்தைப் போன்றவன்.

இந்த லட்சணத்தில், மார்க்ஸ், உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக விளங்கும் சமுதாயத்தைப் படைக்கப் போவதாகச் சொல்கிறான். அந்தச் சமுதாயத்தில் பெண்கள், ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பொதுவான சொத்தாக (common and communal property) இருப்பார்களாம். ஆம், கம்யூனிச சமுதாயத்தில் தனிக் குடும்பமே கிடையாதே! எனவே, பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லாமே பொதுச் சொத்து தான்

பெரிய பொருளாதார சித்தாந்தம் என்று சொல்லப்பட்ட கம்யூனிச சிந்தனை இது தான்.

இப்போது என் மனதில் ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது.

மார்க்ஸிய சிந்தனை ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல் என்பது என்னைப் போன்ற ஒரு சராசரி மனிதனுக்கே புரிகிறதே! ஆனால், இத்தகைய ஒரு சிந்தனைக்கு ஐரோப்பியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு இருந்தது எப்படி? எத்தனையோ சிந்தனையாளர்கள் மார்க்ஸின் பின்னால் அணிவகுத்தார்களே, மார்க்ஸியத்தை அறிவியல் பூர்வமானது என்று கொண்டாடினார்களே, அது எப்படி சாத்தியமாயிற்று?

இந்தப் பைத்தியக்காரத்தனத்தைப் பெரிய அறிவாற்றல் என்று அவர்களால் போற்ற முடிந்தது எப்படி?

சிந்தனையாளர்களாகிய அவர்கள் யாருக்குமே சிந்திக்கும் ஆற்றல் இல்லையா?

இதுவே எனக்குள் எழுந்த கேள்வி.

ஐரோப்பிய சரித்திரத்தில் இதற்கான பதிலைத் தேட ஆரம்பித்தேன். அது எனக்குச் சில விஷயங்களைப் புரிய வைத்தது.

kanchi periyava
kanchi periyava

ஐரோப்பிய சரித்திரத்தைப் புரட்டினால், கம்யூனிசமே தேவலை என்று நினைக்கத் தோன்றும். அத்தனை அத்தனை கிளர்ச்சிகள், போர்கள், வன்முறை வெறியாட்டங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள்….

இவற்றுக்கான காரணங்களை அரசியல், மதம், தத்துவம் என்று மூன்று விதங்களில் புரிந்து கொள்ளலாம்.

  1. அரசியல்

ரோமானிய சாம்ராஜ்யம் தான் மனித குலத்துக்கு ஜனநாயகம் என்கிற ஆட்சித் தத்துவத்தைக் கொடுத்தது என்று நமக்குப் பாடநூல்களில் சொல்லித் தருகிறார்கள். ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால்…. என்றெல்லாம் போதனை செய்கிறார்கள்.

இரண்டுமே தவறானவை.

ஆட்சிமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை எதுவுமே தெரியாத அந்நாடுகளைச் சேர்ந்த ஆட்சியாளர்கள், அவ்வப்போது பல்வேறு விதமான பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். இவற்றுக்கு எதிர்ப்புகளும் ஏற்பட்டன, மக்கள் ஆதரவும் இருந்தது. இவற்றால் பல்வேறு குழப்பங்கள், கிளர்ச்சிகள், புதிய புதிய அணுகுமுறைகள் என்று காலப்போக்கில் பல வலி மிகுந்த மாற்றங்களை அந்நாடுகள் சந்தித்தன.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது பரிசோதனைகளையே. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்நாடுகள் பல்வேறு விதமான சமுதாய அமைப்பையும், நிர்வாக அணுகுமுறையையும் ஏற்படுத்தின. இவை அனைத்துக்கும் பரிசோதனைக் களமாக இருந்தது அந்நாட்டு மக்கள் சமுதாயம்.

  1. மதம்

ஐரோப்பாவில் ஏராளமான மத நம்பிக்கைகள் இருந்தன. இவற்றுக்குள்ளே பொதுமையும் உண்டு, வேற்றுமைகளும் உண்டு, அடிதடிகளும் உண்டு.

புதிய மதமாகிய கிறிஸ்தவம் தோன்றியதும் சமுதாயச் சூழல் மாறியது.

கத்தோலிக்க மதம், அரசாட்சி உட்பட்ட பல்வேறு விஷயங்களைத் தனது பிடிக்குள் கொண்டு வந்தது. தனது வலிமையான நிர்வாக அமைப்பின் மூலம் அது ஆட்சி நிர்வாகத்தையும் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் கட்டுப்படுத்தியது.

மிகவும் பிரமாண்டமான அமைப்பாக அது உருவெடுத்ததால், அதற்கான பொருளாதாரத் தேவையும் மிகுதியாக இருந்தது. தனது பொருளாதாரத் தேவைக்காக மக்களின் வளங்களைச் சுரண்டத் தலைப்பட்டது.

எனவே, மதம் என்பது ஆட்சியில் எந்த அளவு தலையிடலாம், சமுதாயத்தில் அதன் பங்களிப்பு என்ன, மதத்துக்கு சமுதாய மக்கள் எவ்வளவு தூரம் அடிபணியலாம், மனித குணங்களை வளர்த்தெடுப்பதில் மதத்துக்கு மட்டும் தான் பொறுப்பு உள்ளதா – இதுபோன்ற பல்வேறு அம்சங்களில் அவ்வப்போது மோதல்கள், அதிகார வரம்புகளைத் தாண்டுதல், சுரண்டல்கள் ஏராளமாக நடைபெற்றன.

ஒவ்வொரு முறையும் புதிய புதிய அணுகுமுறைகள், பரிசோதனைகள், தலைகீழ் மாற்றங்கள்….

இத்தனை பரிசோதனைகளுக்கும் களமாக இருந்தது அந்த மக்கள் சமுதாயம்.

  1. தத்துவம்

ஏறக்குறைய நமது நாட்டில் இருந்தது போன்ற நால் வருண அமைப்பு தான் பண்டைய ஐரோப்பாவிலும் இருந்தது. நமது நாட்டில் அதன் வடிவம் வேறு, ஐரோப்பாவில் அதன் வடிவம் வேறு.

அரசர்கள், நில உடைமைதாரர்கள் முதலியோர் கைகளில் ஆட்சிப் பொறுப்பு இருந்தது. இரண்டாவது பிரிவினர், வியாபாரிகள். இரு பிரிவினருக்கும் பணிபுரியும் ஏவலர்கள் மூன்றாவது பிரிவினர்.

இம்மூன்று பிரிவுகளும் பிறப்பின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன

சமுதாயத்தின் நான்காவது பிரிவாக சர்ச் இருந்தது. இது மதம் சார்ந்தது. மத போதனைகள் மனிதர்களிடையே நன்னெறியை வளர்க்கத் துணைபுரிந்தன.

மக்களின் கல்வி என்பது பெரும்பாலும் குடும்பத்தையும் தொழில் அமைப்பையும் சார்ந்தே விளங்கியது. நாளாவட்டத்தில் அரசாங்கமும் சர்ச்சும் கல்விக் கூடங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கின. எனினும், சில நூறு வருடங்களுக்கு முன்பு வரை கல்வி என்பது வாழ்க்கைத் தேவைகள் (livelihood) சார்ந்ததாக மட்டுமே இருந்தது.

இவை தவிர, புதியதாக ஒரு வர்க்கமும் தோன்றியது. இது பிறப்பின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ அமையவில்லை. இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைச் சிந்தனையாளர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள். இவர்கள் எதிர்காலக் கனவுகளில் மிதந்தார்கள். புதியதோர் உலகம் படைக்க வேண்டும் என்று இவர்கள் விரும்பினார்கள். சமுதாய அமைப்பின் ஒவ்வோர் அம்சத்தையும் இவர்கள் கேள்விக்கு உட்படுத்தினார்கள்.

காலப்போக்கில் இந்த வர்க்கம் பெரும் பலம் கொண்டதாக வளர்ந்தது. ஐரோப்பிய நாடுகளின் ஆட்சிமுறை, கல்வி, பல்வேறு அமைப்புகளின் அதிகார வரையறை முதலியவற்றைத் தீர்மானித்ததில் இந்த வர்க்கத்தின் பங்களிப்பு அதிகம். கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தாலும் சர்ச்சாலும் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் போதிக்கப்படும் விஷயங்களை முடிவு செய்தவர்கள் இவர்களே.

இந்த வர்க்கத்தினர் ஆங்காங்கே சிறிய-பெரிய குழுக்களாக இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒரு மையப்புள்ளி இருப்பார். அவர் தனது அறிவுக்கு எட்டிய விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார். அவரது அறிவுத் தரம், அவர் முன்வைக்கும் கருத்தினால் சமுதாயத்துக்கு ஏற்பட முடிகிற நன்மைகள் முதலியவற்றைப் பற்றி யாரும் பெரிதாக அக்கறைப்பட மாட்டார்கள்.

ஒரு கருத்தை முன்வைப்பவரும், அவரைச் சார்ந்தவர்களும் எழுப்பும் கூச்சலைப் பொறுத்து அந்தக் கருத்து மக்கள் மத்தியில் வலிமை பெறும்.

இத்தகைய ‘‘வலுவான’’ கருத்துகள் மக்கள் சமுதாயத்தின் மீது பரிசோதனை செய்யப்படும்.

இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவன் தான் மார்க்ஸ். இந்த வர்க்கத்தைச் சேர்ந்த அனைவருமே சிந்தனையாளர்கள் என்று கருதப்பட்டதால் மார்க்ஸும் இயல்பாகவே சிந்தனையாளன் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டான்.

அவனுக்குப் பின்னால் பெரிய கும்பல் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து, ரஷ்யா முதலான நாடுகளின் ஆட்சியாளர்கள், மார்க்ஸிய தத்துவத்தை மக்கள் மீது பரிசோதித்துப் பார்த்ததில் சில கோடிப் பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

ஐரோப்பிய சிந்தனைப்படி பார்த்தால், புதிய கருத்துகள் அவ்வப்போது தோன்றும். அவை மக்கள் மீது பரிசோதிக்கப்படும். சில கருத்துகள் நீடித்து நிலைக்கும். பிற கருத்துகள் மறைந்து விடும். மனித குல முன்னேற்றம் என்பது இப்படித் தான் நிகழ்கிறது.

ஒட்டுமொத்த விளைவு

காலப்போக்கில் ஏற்பட்ட விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் ஐரோப்பிய சமுதாயத்தில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தின.

இதுபோன்ற ஏராளமான அம்சங்களால் ஏற்பட்ட ஒட்டுமொத்த விளைவுகளில் இரண்டை மட்டும் இங்கு குறிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம்.

  1. அரசு நிர்வாகம் என்பது மையப்படுத்த ஒன்றாக உருவெடுத்தது. அசுர பலத்துடன், மிகப்பெரிய ராணுவக் கட்டமைப்புடன், அழிக்கும் சக்தியுடன் அது திகழ்ந்தது. எனவே, மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தால், அரசு நிர்வாகம் அவர்களை நசுக்கும் அளவு பலமாக இருந்தது.

அரசாங்கம் சிறிய தவறு செய்தாலும் அதன் விளைவுகள் ஜனங்களைப் பெருமளவு பாதிக்கும் என்ற நிலை ஏற்பட்டது.

மக்களுக்கு நன்மை என்பதை அரசாங்கம் பல்வேறு மக்கள் குழுக்களின் வாயிலாகவே புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மையப்படுத்தப்பட்ட அரசில் மக்கள் குழுக்களின் பிரதிநிதிகள் அவசியம்.

இவர்கள் அவ்வப்போது கூடி விவாதித்து மக்களுக்கு நன்மையான விஷயங்களை முடிவு செய்து அவற்றை அமல்படுத்துவார்கள்.

இது தான் மக்களாட்சி என்ற கருத்து வேரூன்றியது. இது தான் நல்ல நிர்வாகம் என்ற சிந்தனை மேலோங்கியது. இதர சிந்தனைகள் கீழ்த்தரமாகக் கருதப்பட்டன. ஆசிய நாடுகள் முதலியவற்றில் இத்தகைய சிந்தனை இல்லாததால், அந்தச் சமுதாய மக்கள் கீழ்த்தரமானவர்களாகக் கருதப்பட்டார்கள்

  1. ஓர் இயந்திரம் இருக்கிறது. நாளாவட்டத்தில் அதில் நாம் புதிய புதிய மாற்றங்களைச் செய்கிறோம். காலப்போக்கில், அதன் உற்பத்தி கூடுகிறது, செலவுகள் குறைகின்றன, தரம் கூடுகிறது, சிரமங்களும் விரயங்களும் குறைகின்றன. இது தொழில்நுட்ப முன்னேற்றம் எனப்படுகிறது.

அதுபோலவே, மனிதர்களின் வசதிகள், செல்வ வளங்கள் முதலானவற்றைக் கூட்டுவதற்காக அவ்வப்போது ஏதாவது கருத்துகள் எழும். இவை புதிய சிந்தனை என்று போற்றப்படும்.

புதிய கருத்துகள் மக்கள் சமுதாயத்தின் மீது பரிசோதனை செய்யப்படும்.

மனித குலத்தின் முன்னேற்றம் என்பது இவ்வாறு தான் ஏற்படுகிறது என்பது ஐரோப்பிய மக்களின் நம்பிக்கை. இதுபோன்ற காரணங்களால், அவ்வப்போது ஏதேதோ கருத்துகள் தோன்றும், அவை மக்கள் மீது பரிசோதிக்கப்பட வேண்டும் என்று ஆகி விட்டது. இவற்றால் ஏற்படும் மாற்றங்களை முன்னேற்றம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

மனித வாழ்வின் இலக்கு என்று அவர்கள் சமுதாயத்தில் எதுவுமே நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, வாழ்க்கை எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதில் அந்தச் சமுதாயத்தினருக்குத் தெளிவில்லை.

ஒவ்வொரு கருத்தும் அந்தச் சமுதாயங்களை ஒவ்வொரு திசையில் அலைக்கழித்தது.

தற்போதும் அதே நிலை தான் நீடிக்கிறது.

periyava veena
periyava veena

பெரியவா உபதேசங்கள்

அறம், பொருள், இன்பம், வீடு என்பது நமது தர்மத்தின் மிக அடிப்படையான கருத்து. இங்கே வாழ்வின் குறிக்கோள் என்பது வீடுபேறு மட்டுமே. அதற்கான பாதையில் காமமும் உண்டு, செல்வமும் உண்டு. வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் அதனதன் அளவில் முக்கியமானதே. அதேநேரத்தில், மனித வாழ்வின் நோக்கம் வீடுபேறு அடைவது மட்டுமே.

மனிதனின் வாழ்க்கைக்கான பாதையை இதுவே நிர்ணயிக்கிறது.

வீடுபேற்றை நோக்கிய பயணம் என்பதே முன்னேற்றம், இதர திசைகளில் போவது தடுமாற்றம்.

இந்தப் பாதையை நிர்ணயித்தவர்கள் மகரிஷிகள். அவர்கள் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கொண்டவர்கள். சுயநலம் இல்லாதவர்கள். எனவே, அவர்கள் தான் மனித குலத்தை வழிநடத்தும் தகுதி உடையவர்கள். புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் மூலம் அவர்களால் கிரகிக்கப்பட்ட உண்மைகளையே நாம் சாஸ்திரங்கள் என்கிறோம்.

இரண்டு வருடங்களாக கொரோனா சூழல் நிலவுகிறது. இதற்கான தீர்வு என்று மேற்கத்திய வைத்திய முறை புதிய தடுப்பூசிகளை உருவாக்கி அதை ஆயிரக்கணக்கான மனிதர்களின் மீது பரிசோதித்துப் பார்க்கிறது. ஆனால், இந்தியாவின் சித்த, ஆயுர்வேத மருத்துவர்களோ, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வைத்திய சாஸ்திர நூல்களைப் புரட்டிப் பார்த்து கொரோனாவுக்கான தீர்வைக் கண்டறிகிறார்கள்.

சாஸ்திரம் தரும் உண்மைகள் சத்தியம். சத்தியம் என்பது எக்காலத்துக்கும் பொருந்தும். சத்தியம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது. அதைச் சந்தேகிப்பதும், பரிசோதித்துப் பார்ப்பதும் அறிவீனம்.

சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவதே நம் கடமை. இதை ஏற்று நடப்பதற்குப் பெயர் தான் சிரத்தை. சிரத்தை என்றால் சாஸ்திரக் கருத்துகள் மீது வைக்கப்படும் நம்பிக்கை.

இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் என்று கொண்டாடப்படுபவர்கள் ஆசார்யாள், ராமாநுஜர் முதலானோர். இவர்கள் எழுதிய பாஷ்யங்களே இவர்களது சிறப்பு. இந்த பாஷ்யங்கள், ஐயாயிரம் வருஷத்துக்கு முற்பட்ட வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்துக்கான விளக்கங்களே.

இங்கே சிந்தனை என்பது புதியதாக ஏற்பட்டு, சமுதாயத்தில் பரிசோதனைகள் செய்யப்பட்டு, உருமாற்றம் அடைந்து, விரிவடைந்து வளர்வது அல்ல.

ரிஷிகளால் ஏற்கெனவே அறிதியிட்டுச் சொல்லப்பட்ட சத்தியத்தை மனிதர்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பதே இந்திய சிந்தனை. இதுவே இந்தியாவில் சம்பிரதாயங்கள் என்ற வாழ்க்கைப் பாதைகளை உருவாக்குகிறது. இங்கே ஆசார்யர்கள் முதல் அரசன் வரை சமுதாயத் தலைவர்கள் அனைவரும் தர்மம் என்கிற தத்துவத்தைக் காப்பதையே தங்கள் கடமையாகக் கொண்டிருந்தார்கள். அந்தத் தத்துவத்தை விளக்குபவையே சாஸ்திரங்கள்.

இதைத் தான் பெரியவா சொல்கிறார்:

‘‘எனக்கென்று தனிக் கருத்து எதுவும் கிடையாது. கருத்துச் சொல்வதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது, என்ன உரிமை இருக்கிறது? சாஸ்திர வழிகளை மக்களுக்குக் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே பீடங்கள். ஒரு ஜட்ஜ், சட்டப் புத்தகத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்வதைப் போலவே, நாங்களும், சாஸ்திரத்தில் உள்ள விஷயங்களைத் தான் மக்களுக்கு எடுத்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.’’

ஆம், இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

அண்ணா என் உடைமைப் பொருள் (48): ஐரோப்பிய சிந்தனை– பெரியவா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply