அண்ணா என் உடைமைப் பொருள் (42): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை(4)

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna en udaimaiporul 2 - 4
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 43
-வேத டி. ஸ்ரீதரன் –

பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை, தீண்டத் தகாதவர்கள் – 4

பெரியவாளை காந்திஜி சந்தித்த சம்பவம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியே தெரியவில்லை என்றே பலரும் கருதுகிறார்கள். உண்மையில், காந்தியுடன் தான் பேசிய விஷயங்கள் பற்றிய விவரங்களைப் பெரியவாளே சொல்லி இருக்கிறார். இது பெரியவா வாழ்க்கைச் சரித்திரத்திலும் வெளியாகி உள்ளது.


நிற்க –
விமர்சனம் என்ற பெயரில் முன் வைக்கப்படும் உளறல்களுக்கு பதில் சொல்வதில்லை என்று இந்தப் பகுதியின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு விதிவிலக்காக, பெரியவா-காந்தி சந்திப்பு பற்றிச் சொல்லப்பட்ட ஒரு விமர்சனத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இதை முன்வைத்திருப்பவர் ஒரு பிரபல எழுத்தாளர். அவர் கீதையை முழுமையாக உணர்ந்தவராம். மேலும், அவர் ஒரு செவ்விலக்கியப் படைப்பாளியாம். (அப்படித்தான் அவர் தன்னைப் பற்றி எழுதி இருக்கிறார்.)
பெரியவா-காந்தி சந்திப்பு பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


இக்காலகட்டத்தில்தான் காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி காந்தியைச் சந்திக்க விரும்பி தூதனுப்பினார். அப்போது சந்திரசேகரருக்கு 31 வயதுதான். அவரோ அவரது மடமோ புகழ்பெற்ற ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் காந்தியைச் சுற்றி இருந்த பிராமணர்கள் காந்தி சந்திரசேகரரைச் சந்திக்க வேண்டுமென ஆசைப்பட்டார்கள்.
காந்தி சந்திரசேகரரைத் தவிர்த்ததாகத் தெரிகிறது. காரணம் வெளிப்படை. காந்தி தீண்டாமை குறித்துப் பேசிவந்த கருத்துக்கள் சந்திரசேகரருக்குப் பிடிக்கவில்லை. அது இந்துமதத்தை அழித்துவிடும், அதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை என சந்திரசேகரர் சொல்லியனுப்பியிருந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் பிறவி இழிவு கொண்டவர்கள், அவர்களை உயர்சாதியினர் பார்ப்பதும் தீண்டுவதும் பெரும் பாவமே ஆகும் என வாதிட்டார்.


இது பச்சைப் பொய் என்பதை விளக்க வேண்டிய தேவை இல்லை.
காந்திஜி சமுதாயத்தின் பல்வேறு முக்கியஸ்தர்களுடன் தீண்டாமை பற்றி விவாதம் நடத்தினார். அவர்களில் பெரியவாளும் ஒருவர். பெரியவாளைப் பற்றிய அறிமுகம் அவருக்கு ராஜாஜி, சத்திய மூர்த்தி, ஹிந்து ரங்கஸ்வாமி ஐயங்கார் ஆகியோர் மூலம் ஏற்பட்டதே.

சனாதன தர்மத்தின் மிக முக்கியமான பீடங்களில் ஒன்றான காஞ்சி மடத்தின் அதிபதியை சுதந்திரப் போராட்டத்தின் ஒப்பற்ற தலைவராகிய காந்தி சந்தித்ததால், இயல்பாகவே, நாட்டு மக்களில் பலர் இந்தச் சந்திப்பை மிக மிக முக்கியமான நிகழ்வாகக் கருதினார்கள். ஆனால், காந்திஜியோ பெரியவாளோ இந்தச் சந்திப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை.

பெரியவா வலியுறுத்தியது அவரவர் ஜாதி ஆசாரங்களை மட்டுமே. அதற்கு உகந்த சமுதாயச் சூழல் அமைய வேண்டும் என்பதாலேயே ஒருவர் மற்றவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். யாரும் இழிவானவர்கள் என்று அவர் ஒருபோதும் கூறியதில்லை.


பாலக்காட்டில் நெல்லிச்சேரியில் காந்தி தங்கியிருந்த இடமருகே பாலக்காட்டு காங்கிரஸ்காரரின் இல்லத்துக்கு சந்திரசேகரர் வந்தார். காந்தி சூத்திரர் ஆதலால் சந்திரசேகரர் அவருக்கு முறையான ‘தரிசனம்’ கொடுக்க விரும்பவில்லை. சந்திப்பை காங்கிரஸ்காரரின் தொழுவத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார். அதை காந்திக்கு ராஜாஜி சிரித்துக்கொண்டே தெரிவித்தபோது காந்தி ‘தொழுவம் சுத்தமாக இருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை’ என்றார்.


காந்திஜியைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவ்வளவு மெனக்கெட்டு தூது அனுப்பிய பெரியவா, அவருக்கு முறையான தரிசனம் கொடுக்க விரும்பாததற்கு என்ன காரணம் என்பதைச் சொல்ல வேண்டிய கடமை இத்தகைய எழுத்தாளர்களுக்குக் கிடையாது. கீதையை முற்றிலும் உணர்ந்தவர்கள் உண்மை பேச வேண்டிய கட்டாயம் இல்லையோ, என்னவோ!

அதேநேரத்தில், பெரியவாளின் மனதுக்கு மிகவும் பிடித்த இடம் மாட்டுத் தொழுவமே என்பதையும், எத்தனையோ சான்றோர்கள் அவரை மாட்டுத் தொழுவத்தில் தான் தரிசித்திருக்கிறார்கள் என்பதையும் அன்பர்கள் அனைவரும் அறிவார்கள்.

kanchi mahaperiyava1
kanchi mahaperiyava1

வேத ரக்ஷணம் என்பதன் மறு வடிவம் கோ ரக்ஷணம் என்றே வாழ்ந்து காட்டியவர் பெரியவா நமது சாஸ்திரங்களில் உத்தமம், மத்திமம், அதமம் என்ற அளவுகோல்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும். சாஸ்திரப்படியான செயல்களில் உயர்நிலையில் இருப்பது எது, நடுநிலை எது, கீழ்நிலை எது என்பதே இவ்வாறு சுட்டிக் காட்டப்படும். குளியல்களைப் பொறுத்த வரை பரம உத்தமமான குளியல் என்பது பசுவின் குளம்படி தூசியில் குளிப்பதே என்பதைப் பெரியவா சுட்டிக் காட்டியிருக்கிறார்.


சந்திப்பு 15 நிமிடத்துக்கும் குறைவாகவே நடந்தது. ராஜாஜியும் பாலக்காட்டைச் சேர்ந்த இரு காங்கிரஸ்காரர்களும் கலந்துகொண்டார்கள். உரையாடலில் இருவரும் இந்துஸ்தானியில் பேசிக்கொண்டார்கள். சந்திரசேகரர் கண்ணீருடன் இந்துமதத்தை அழிக்கவேண்டாம் என காந்தியைக் கேட்டுக்கொண்டார். இந்தக் கோரிக்கையை விடுப்பதற்காகவே அவர் பல நூறு கிலோமீட்டர் நடந்து தஞ்சாவூரில் இருந்து வந்திருந்தார்.


செவ்விலக்கியம் இப்படித் தான் இருக்கும் என்பது புரிகிறது.
காந்திஜி, பெரியவா – இருவருமே அந்தச் சந்திப்புக்காகப் பாலக்காடு வரவில்லை. இருவருமே அந்தப் பகுதியில் இருந்ததால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிந்தது.

சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. பெரியவா ஸம்ஸ்கிருதத்திலும், காந்திஜி ஹிந்தியிலும் பேசிக் கொண்டார்கள்.

பெரியவா, காந்தி இருவரும் மட்டும் தனித்துப் பேசினார்கள். ராஜாஜி வெளியே அமர்ந்திருந்தார்.


காந்தி மிக்க பணிவுடன் ‘ஒரே ஒரு சுருதி நூலில் ஒரே ஒரு வரியையாவது ஆதாரமாகக் காட்டுங்கள். நான் யோசிக்கிறேன்’ எனக் கேட்டுக்கொண்டார். சந்திரசேகரர் கீதையைச் சுட்டிக்காட்ட காந்தி கீதையின் அந்த வரி தவறாக விளக்கப்படுகிறது, ஏனென்றால் அந்தப் பொருளுக்கு முற்றிலும் மாறாகவே மொத்த கீதையும் உள்ளது என்று சொன்னார்.
சந்திரசேகரரால் மேலே பேசமுடியவில்லை. காந்தி ‘உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் ஒரு மௌல்வியைச் சந்திக்கவேண்டும்’ என்று சொல்லி சந்திப்பை முடித்துக்கொண்டார்.


சுமார் 100 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் பற்றிப் பல்வேறு பத்திரிகைகளில் வெளியான செய்தியைக் கூட மூடி மறைத்து ஒரு பொய்த் தகவலை இந்த எழுத்தாளர் சொல்லி இருப்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
1927 ல் நடந்த இந்தச் சந்திப்பு குறித்த முழுமையான விவரங்கள் வெளியானது 1980களில் தான் என்றாலும், சந்திப்பு நடந்த தினத்திலேயே, அது பற்றிய சில விவரங்கள் வெளியாகின.

காந்திஜி பெரியவாளுடன் பேசிக் கொண்டிருப்பதை எவ்வளவு உயர்வாகக் கருதினார் என்பதை அவை விளக்குகின்றன.
பெரியவாளுடன் காந்திஜி உரையாடிக் கொண்டிருந்த போது அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. காந்தியின் இரவு உணவுக்கான நேரம் வந்தது. (அவர் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துக் கொள்பவர். அவரது நேரம் தவறாமை உலக அளவில் பிரசித்தி பெற்றது என்பதை அனைவரும் அறிவோம்.)

rajaji gandhiji
rajaji gandhiji

மாட்டுத் தொழுவுக்குள் பிரவேசித்த ராஜாஜி, இரவு உணவுக்கான நேரம் அது என்பதை அவருக்கு நினைவூட்டினார். அப்போது, காந்திஜி, ஸ்வாமிகளுடன் பேசிக் கொண்டிருப்பதே தனக்கு நிறைவாக இருக்கிறது என்றும், எனவே, இரவு உணவு வேண்டாம் என்றும் சொல்லி விட்டார்.

இது அன்றைய காலத்திலேயே பிரபலமாகப் பேசப்பட்ட விஷயம். பெரியவா-காந்தி சந்திப்பு பற்றிய செய்திகள் அனைத்திலுமே, காந்திஜி தனது உணவைப் புறக்கணித்துப் பெரியவாளுடன் பேசிக் கொண்டிருந்த விஷயம் தான் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், இந்தச் சம்பவம் பற்றி காந்திஜி தனது கடிதங்களில் எழுதியுள்ள விவரங்கள் 1985 அக்டோபர் 15 அன்று ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் வெளியாகி உள்ளன. கிஷோரிலால் மசுர்வாலா, கங்கா பென் ஆகிய இருவருக்கும் காந்திஜி எழுதியுள்ள கடிதங்களில், பெரியவாளின் கருத்துகள் தன்னுடைய கருத்துகளில் இருந்து வேறுபட்டிருப்பதாகவும், எனினும், தான் அவற்றைப் பெரிதும் மதிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், பெரியவாளை அவர் சாந்தி ஸ்வரூபர் என்றும் வர்ணித்துள்ளார். பெரியவாளின் சாந்திக்குக் காரணம் அவரது ஞானமே என்பதைக் குறிப்பிடும் வகையில் துளசிதாசரின் செய்யுள் ஒன்றையும் மேற்கோள் காட்டியுள்ளார். பெரியவா-காந்தி சந்திப்பு நிகழ்ந்தது 1927 அக்டோபர் 15-ம் தேதி. இந்தக் கடிதம் அக்டோபர் 17-ம் தேதி எழுதப்பட்டுள்ளது.


சந்திரசேகரரிடம் காந்தி கொஞ்சம் உதாசீனமாகவே நடந்துகொண்டதாக அன்று பிராமணர்கள் நினைத்தனர். அது உண்மையும் கூட. காந்தி பக்தரான கல்கி போன்றவர்கள்கூட சந்திரசேகரரை கடுமையாக, நேரடியாகத் தாக்கி எழுதியமைக்கும் இந்நிகழ்வு ஒரு தூண்டுகோல். தீண்டாமையை ஒழிப்பது வழியாக காந்தி இந்துமதத்தை அசுத்தமாக்குகிறார் என சந்திரசேகரர் சொன்னதற்கு ‘நீங்கள் ஒன்றும் ஜகத்குரு [உலகின் குரு] அல்ல, ஒரு மடாதிபதி மட்டுமே. அந்த இடத்தில் இருந்தால் போதும்’ என கல்கி பதில் எழுதினார்.

கல்கி ஸ்மார்த்தர். அன்றைய பிராமணர்களால் வழிபடப்பட்டவர். ஆகவே இந்த தாக்குதல் சந்திரசேகரரை அதிர்ச்சி அடையச்செய்தது. அதன்பின் தீண்டாமைக்கு ஆதரவாக நேரடியாகப் பேசுவதைக் கட்டுப்படுத்திக்கொண்டார். அல்லது அந்த அமைப்பு அவரை கட்டுப்படுத்தியது. ஆனால் கடைசிக்காலம் வரை அவர் சாதிநோக்கும் தீண்டாமை நோக்கும் கொண்டவராகவே நீடித்தார். அவரது நூல்களே சான்று.

சந்திரசேகரர் பின்னரும் பல உரைகளில் அவரது தீண்டாமைச் சிந்தனையை முன்வைத்துப் பேசினார். அவை அச்சாகியும் உள்ளன. தீண்டாமை சட்ட விரோதமாக ஆனபின் அந்த உரைகள் பலவும் திருத்தி எழுதப்பட்டன. இன்று காந்தியை சந்திரசேகரர் சந்தித்தது ஸ்மார்த்த பிராமணர்களின் நூல்களில் பலவாறாகத் திரித்து எழுதப்படுகிறது. காந்தி அவரைச் சந்தித்து காலில் விழுந்து ஆசிபெற்றார் என்றுகூட எழுதியிருக்கிறார்கள்.


செவ்விலக்கியப் படைப்பாளி, அல்லவா? அவரால் இப்படித்தான் எழுத முடியும்!
இந்த எழுத்தாளர் எழுதியுள்ள வரலாற்றுக் கதைகளில் இந்தியாவின் க்ஷத்திரிய பாரம்பரியமும், ஆன்மிக, தெய்விக விஷயங்களில் பிராமணர்களின் பங்களிப்பும் மிகவும் கொச்சையாகவே வர்ணிக்கப்பட்டிருக்கும்.

ஒருவரது மனதில் இருக்கும் குணங்களும் எண்ணங்களும் தானே அவரது எழுத்தில் வெளிப்பட முடியும்?

கல்கி பற்றியும், காலில் விழுவது பற்றியும் இந்த மனிதர் சொல்லி இருக்கும் விஷயங்களும் இவரது எண்ணங்களின் பிரதிபலிப்பே. இத்தகைய கருத்துகள் கொச்சையானவை, அருவருப்பானவை.
நமஸ்காரம் செய்வது பணிவின் வெளிப்பாடு. இந்தியப் பண்பாட்டின் ஒப்பற்ற அம்சங்களில் ஒன்று அது.
இந்தியப் பாரம்பரியத்தில் கல்விக்கான அடிப்படைத் தகுதியே பணிவு தான்.

மனித வாழ்வின் நோக்கம் இறைவனை அடைவதே. அதற்கான வழி சரணாகதி. பணிவின் முதிர்ச்சியே சரணாகதி. அதைக் கற்றுத் தருவதே கல்வியின் நோக்கம். அதனால் தான் வித்யா ததாதி விநயம் (பணிவைத் தருவதே கல்வி) என்று சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில், ஸ்தாபனங்களைப் பொறுத்தவரை, அவற்றின் சமுதாய அந்தஸ்து கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். எனவே, ஒரு பீடாதிபதியை நமஸ்காரம் செய்வதும் செய்யாததும் அவரவர் ஸ்தாபனத்தையும், அதில் அவர் வகிக்கும் ஸ்தானத்தையும் பொறுத்த விஷயம்.

மேலும், நாம் நமஸ்கரிப்பதால் பீடாதிபதிகளுக்குப் பெருமையும் அல்ல, நாம் நமஸ்காரம் பண்ணினால் தான் அவர்களது ஆசிச் சக்தி நமக்குக் கிடைக்கும் என்பதும் அல்ல.
அவர்களை நமஸ்கரிப்பதால் நமக்குப் பணிவு வளர்கிறது என்பதே முக்கியம்.

அதிலும், ஆதி சங்கரர் ஸ்தாபித்த பீடங்களில், பீடாதிபதிகளுக்குச் செய்யப்படும் நமஸ்காரம் நாராயணனுக்கு உரியது என்பதே சம்பிரதாயம். அதனாலேயே நாம் சங்கர மடங்களின் பீடாதிபதிகளை நமஸ்கரிக்கும் போது, அவர்கள் நாராயண என்று சொல்கிறார்கள். நாராயணனின் பிரதிநிதியாக நின்று நமது நமஸ்காரத்தை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதே இதற்கு விளக்கம். ஶ்ரீமுகங்களில் தங்களது கையெழுத்துக்குப் பதில் நாராயண ஸ்மிருதி என்று எழுதுவதற்கும் இதுவே காரணம்.
நான் நமஸ்காரத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன் – இந்த எழுத்தாளர் சொல்லி இருக்கும் ‘‘காலில் விழும் கலாசார’’த்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.


மேலும், பெரியவா உரைகள் எதையும் யாரும் திருத்தி எழுதவில்லை என்பதையும், ஆரம்ப நாட்கள் முதல் அவரது கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
பெரியவாளுக்குச் சொந்தக் கருத்து என்று எதுவுமே இல்லை என்பது தான் அவரது மிகப் பெரிய விசேஷம். முழுக்க முழுக்க சாஸ்திர வழிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டவர் அவர். அந்த வழிகளையே நமக்கும் அவர் எடுத்துச் சொன்னார். எனவே, அவரது கருத்துகள் காலத்துக்கு ஏற்ப மாற்றம் அடையாதவை.
அதேநேரத்தில், சாஸ்திரம், சட்டம் – இரண்டுக்கும் இடையே வேறுபாடு என்று வரும்போது பெரியவா நூறு சதவிகிதம் சட்டத்தை மதித்தே செயல்பட்டிருக்கிறார்.

ஜனநாயக ரீதியில் அரசின் திட்டங்களை விமர்சனம் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களிலும், அவர், அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட குடிமகனாக மட்டுமே தனது கருத்துகளைக் கூறுவதுண்டு. ஒரு சாதாரணக் குடிமகனைப் போல மிகுந்த பணிவுடனேயே அத்தகைய கருத்துகளை அவர் முன் வைத்திருக்கிறார் என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் காட்ட விரும்புகிறேன்.

அதேநேரத்தில், பீடாதிபதியாக நின்று அவர் பேசும் சமயங்களில் அவரது வாக்கு ஒவ்வொன்றும் உத்தரவாக வெளிப்பட்டதும் உண்டு.

அது தான் பெரியவா – மஹதோ மஹீயானாகிய அது அணோர் அணீயானாகவும் இருக்கிறது.

பெரியவா இவ்வாறு கருத்துச் சொன்னதற்கும் அடிப்படைக் காரணம் அவரது பீடாதிபத்தியக் கடமையே தவிர, சுய விருப்பத்தின் பேரில் அவர் பேசியதில்லை. புதுப் பெரியவா பீடாதிபதியானதைத் தொடர்ந்து, இத்தகைய கருத்துகளைச் சொல்வதையும் அவர் படிப்படியாகக் குறைத்து விட்டார்.

இதைப்பற்றி அண்ணாவிடம் சொல்லும் போது அவர், ‘‘இப்பத் தான் நிஜ ஸந்நியாஸியாட்டம் எல்லாத்திலேர்ந்தும் ஒதுங்கி இருக்கேன்‘’ என்று ஒருசில தடவை குறிப்பிட்டிருக்கிறார். தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதியில் அரசும் மதமும் அத்தியாயத்தின் முன்னோட்டப் பகுதியில் இத்தகைய ஒரு சம்பவத்தை அண்ணா எழுதியும் இருக்கிறார்.


இதே எழுத்தாளர், இன்னோரிடத்தில், அறியாமையில் உள்ள ஜனங்கள் பெரியவாளை துறவி என்றும் ஞானி என்றும் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கீதையை முற்றும் உணர்ந்தவரான இந்த எழுத்தாளருக்கு மகா பெரியவாளை ஞானி என்று சொல்வது அறியாமையாகத் தான் தெரியும். ஆனால், பெரியவா ஒரு துறவி என்பது கூடவா புரியாது?

anna alias ra ganapathy3 - 3

பாவம், பரிதாபத்துக்குரியவர்!

யாருடைய விமர்சனத்துக்கும் பதில் சொல்வது எனது வேலை அல்ல. அதேநேரத்தில், உண்மை தெரிந்தவர்கள் என்று தங்களைச் சித்தரித்துக் கொள்ளும் இத்தகைய மனிதர்களும் இருக்கிறார்கள், இதுபோன்று நல்லவர் வேடம் போட்டுத் திரியும் பலருடைய கருத்துகள் நம்மைச் சுற்றி உலா வருகின்றன என்பதை உங்கள் அனைவருக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதிலும், இன்றைய சமூக வலைதள யுகத்தில் இத்தகைய ஏராளமான கருத்துகள் நம்மை வந்தடைகின்றன.

அண்ணாவுடன் இருந்தவன் என்கிற முறையில் இதை உங்கள் அனைவருக்கும் சுட்டிக் காட்ட வேண்டியது என்னுடைய கடமை என்று நான் நினைக்கிறேன்.

அதற்காகவே இந்த எழுத்தாளரின் கருத்துகளை உதாரணம் காட்டினேன் – அவரையோ அவரது உளறல்களையோ ஒரு பொருட்டாக மதித்து அல்ல.

இது தேவையில்லை என்று உங்களில் சிலர் நினைக்கலாம். அதேநேரத்தில் இதைப் பிழையான செய்கை என்று கருத மாட்டீர்கள் என்று நம்பியதாலேயே இதை எழுதினேன்.

அண்ணா என் உடைமைப் பொருள் (42): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை(4) முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply