அண்ணா என் உடைமைப் பொருள் (22): அரவிந்தருக்கு எல்லாமே வாசுதேவனா தெரிஞ்சது!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 22
அரவிந்தருக்கு எல்லாமே வாசுதேவனா தெரிஞ்சது
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணாவின் உழைப்பையோ, பெரியவாளின் ஆழத்தையோ பார்த்து வியப்பது எல்லோருக்கும் சாத்தியம் தான். ஆனால், தெய்வத்தின் குரலுக்கு இன்னொரு பரிமாணம் உண்டு. அதை யாரும் யூகித்துக் கூடப் புரிந்து கொள்ள முடியாது!

தனி மனிதர்கள் மீது தெய்வத்தின் குரல் ஏற்படுத்திய தாக்கம் தான் அது!!

ஒரே ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அண்ணாவின் அன்புத் தம்பியரில் ஒருவர் சமுதாய சேவை செய்யும் ஓர் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு அந்த அமைப்பு கூடுதல் பணிகளை ஒப்படைக்க விரும்பியது. இதனால் அந்த அமைப்புக்காக அவர் அதிக நேரம் செலவு செய்ய வேண்டி நேரிடும். அவருக்கு அதில் நாட்டமில்லை.

anna alias ra ganapathy4 1 - 1

இதற்குக் காரணம், தெய்வத்தின் குரல். அந்த நூலை ஆழ்ந்து படிக்கப் படிக்க, சாஸ்திரப்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும், வேத ரக்ஷணத்துக்காக நேரம் செலவிட வேண்டும் முதலிய சிந்தனைகள் அவருக்குள் பெரிதாக எழுந்தன. எத்தனையோ பேர் பொது வாழ்வில் இருக்கிறார்கள், ஏதேதோ சேவைகள் செய்கிறார்கள். ஆனால், வேதங்களை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்லும் பணிகளைக் கவனிப்பதற்குப் போதிய ஆட்கள் இல்லை. எனவே, அத்தகைய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் எழுந்தது.

அதேநேரத்தில் அந்த அமைப்பினர் அனைவரும் மிக நல்லவர்கள். அதிலிருந்து விலகினால் அதன் உறுப்பினர்கள் மனம் கஷ்டப்படும். யாரையும் நோகடிப்பது அவர் நோக்கமல்ல. எனவே, இந்த விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்ற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. அவர் அண்ணாவுக்கு ஃபோன் பண்ணி, தனது இக்கட்டான சூழலைக் குறிப்பிட்டார். ‘‘நான் என்ன முடிவு எடுக்கறது, அண்ணா? எனக்கு வழிகாட்டுங்கள்’’ என்று வேண்டினார்.

anna alias ra ganapathy7 - 2

அண்ணா அவரிடம் நேரடியாக எந்த முடிவும் சொல்லவில்லை. மாறாக, ‘‘இறைவன் எங்கும் இருப்பவன், உனக்குள்ளும் இருக்கிறான். நீயே இந்த விஷயம் பற்றி யோசித்துப் பார். உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதையே செய்’’ என்று கூறினார். இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை விளக்குவதற்கு அவரிடம் அரவிந்தரின் ஜெயில் வாசத்தை உதாரணம் காட்டினார், அண்ணா.

‘‘அந்த ஜெயில்ல இருந்த வார்டனைப் பார்த்தா வாசுதேவன்தான் தெரியறான், கூட இருக்கற கைதிகளைப் பார்த்தா வாசுதேவன் தான் தெரியறான். ஜெயில் கம்பி கூட அவருக்கு வாசுதேவனாத்தான் தெரிஞ்சதாம். கோர்ட்ல மாஜிஸ்ட்ரேட் இடத்தில வாசுதேவன் தான் உக்காந்திண்டிருக்கான். லாயர் வாசுதேவன், கூடி இருக்கறவா எல்லாருமே வாசுதேவன். அதையேதான் உனக்கும் சொல்றேன். நீயும் வாசுதேவன் தான். உனக்குள்ளே இருக்கற வாசுதேவனே உனக்கு வழிகாட்டுவான். உனக்கு என்ன தோணறதோ, அதையே பண்ணு’’ என்று சொல்லி விட்டார்.

மறு நாள் அந்த அன்பர் அண்ணாவுக்கு ஃபோன் பண்ணினார். ‘‘எனக்குப் புரியறது, அண்ணா. நான் அனுஷ்டானம் பண்றேன்’’ என்று சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டார். சாஸ்திர ரீதியிலான அனுஷ்டானங்கள் மட்டுமல்ல, வேத ரக்ஷணத்துக்கான பல்வேறு பணிகளிலும் அவர் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.


எத்தனையோ சமுதாயப் பெரியவர்களையும், சாதகர்களையும், வேதாந்த விசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இவர்கள் அனைவரிடமும் தெய்வத்தின் குரலின் தாக்கம் இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.

அண்ணாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களில் ஒருவர், ‘‘சனாதன தர்மத்தின் சாராம்சத்தைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றவர்’’ என்று அண்ணாவைப் பற்றிக் குறிப்பிட்டார். பரம சத்தியம்.

அண்ணா என் உடைமைப் பொருள் (22): அரவிந்தருக்கு எல்லாமே வாசுதேவனா தெரிஞ்சது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply