அண்ணா என் உடைமைப் பொருள் (14) எனக்கும் அவள்தான் உனக்கும் அவள்தான்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 14
எனக்கும் அவள்தான் உனக்கும் அவள்தான்
– வேதா டி. ஸ்ரீதரன் –

இந்தக் காலகட்டத்தில், எழுமலையைச் சேர்ந்த ஶ்ரீ இளங்கோவனும் நானும் வேறு சிலருடன் சேர்ந்து பள்ளிகளுக்கான பாடநூல்கள் தயாரித்து வெளியிடும் பதிப்பகம் ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தீர்மானித்தோம்.

பல்வேறு ஆலோசனைகள் முடிவடைந்த நிலையில், பதிப்பகத்துக்கு என்ன பெயர் வைப்பது என்ற கேள்வி எழுந்தது. எங்களுக்கு குருமகராஜ், சாரதா, ஸ்வாமிஜி ஆகிய மூன்று பெயர்கள் தோன்றின. இருந்தாலும், அண்ணாவிடம் கேட்போம். அவர் சொல்லும் பெயரையே வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அண்ணாவிடம் கேட்டால் அவர் சாரதா என்ற பெயரைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று நான் வேடிக்கையாகக் கூறினேன்.

பின்னர் அண்ணாவிடம் போய்க் கேட்டேன். அண்ணா சிரித்துக் கொண்டே, ‘‘நீ யோசிச்சிருப்பியே! அதைச் சொல்லு முதல்லே’’ என்றார். நாங்கள் யோசித்து வைத்திருந்த  மூன்று பெயர்களையும் சொன்னேன்.

உடனே அண்ணா, ‘‘சாரதையே வை. ஆசார்யாளுக்கும் அவ தான். சிருங்கேரிக்கும் அவ தான். காஞ்சிக்கும் அவ தான். நீ சொன்னியே குருமகராஜ் – அவருக்கும் அவ தான். எனக்கும் அவ தான். உனக்கும் அவ தான். பப்ளிகேஷனுக்கும் அவ பெயரே இருக்கட்டும்’’ என்றார்.

இதற்குச் சில நாட்கள் பின்னர், பதிப்பகத்துக்கு லோகோ தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை வந்தது. லோகோவில் கல்வியுடன் தொடர்புடைய ஏதாவது சம்ஸ்கிருத வாசகம் போட வேண்டும் என நான் விரும்பினேன். வித்யா ததாதி வினயம் என்ற வாசகம் வைக்கலாம் என்று தோன்றியது. ஆனால், எனக்கென்னவோ அது பிடிக்கவில்லை. அண்ணாவிடம் கேட்கலாம் என்று அவரிடம் போனேன்.

Ra Ganapathy1 - 2

அண்ணா அப்போது சுவரைப் பார்த்தவாறு துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். நான் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். என்ன விஷயம் என்று அண்ணா கேட்டார். ‘‘அண்ணா, பப்ளிகேஷன் லோகோவுக்கு ஏதாவது ஸான்ஸ்க்ரிட் கொடேஷன் வேணும்’’ என்றேன். தலையை மட்டும் திரும்பி என்னைப் பார்த்த அண்ணா, ‘‘வித்யா ததாதி வினயமே போடு’’ என்றார்.

வித்யா ததாதி வினயமே போடு என்று அண்ணா சொன்னது எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் என்ன யோசித்திருந்தேன் என்பது தெரிந்தே தான் அவ்வாறு சொன்னாரோ என்ற கேள்வி எழுந்தது. எனது யூகம் சரியே என்பது போலப் பிற்காலத்தில் நிறைய சம்பவங்கள் உண்டு.

அண்ணா என் உடைமைப் பொருள் (14) எனக்கும் அவள்தான் உனக்கும் அவள்தான்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply