அண்ணா என் உடைமைப் பொருள்! (தொடர்)

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">

anna en udaimaiporul 1 - 4
anna en udaimaiporul 1 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 1
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணாவைப் பற்றி எழுத விரும்புவதன் காரணம்

ரா. கணபதி அண்ணாவைப் பற்றிப் பல விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் நிறையவே உண்டு. ஆனாலும், அது தவறு என்றே இது வரை கருதி வந்திருக்கிறேன்.

அண்ணாவைப் பற்றி எழுதுவது அண்ணாவுக்கு விருப்பம் இல்லாத செயல் என்பது மட்டுமே இதற்கான ஒரே காரணம்.

அண்ணா எந்தச் சூழ்நிலையிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை – அவரது மாபெரும் பணியாகிய தெய்வத்தின் குரல் உட்பட, எதிலுமே அவர் தன்னைப் பற்றிப் பெரிதாக எதுவும் எழுதியதில்லை. தன்னை முன்னிறுத்திக் கொள்வதோ தனது பணிகளுக்காக ஏதாவது அங்கீகாரம் தேடிக்கொள்வதோ அவருக்குப் பிடிக்காத விஷயங்கள்.

வாழ்க்கைத் தேவைகளுக்குப் பணம் வேண்டும். அதைத் தேடிக் கொள்வதற்கு அவரிடம் இருந்த ஒரே கருவி எழுத்துப் பணி மட்டுமே. எனவே, தனது எழுத்துக்கு அவர் பணம் பெற்றுக் கொண்டார். கிடைத்த தொகை அல்பம் என்பது மட்டுமல்ல, அந்தப் பணத்திலும் சொற்பமான அளவை மட்டுமே அவர் தனது தேவைகளுக்காகப் பயன்படுத்தினார்.

ஓர் எளிய உதாரணத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அண்ணா பற்றிய இரங்கல் கட்டுரை கல்கியில் வெளியாகி இருந்தது. அதில் வெளியிடுவதற்கு அவரது ஃபோட்டோ அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அண்ணாவின் எழுத்து ஆரம்பமானதற்குக் காரணமே கல்கி சதாசிவம்தான்.

Ra Ganapathy - 3

தெய்வத்தின் குரலுக்கான விஷயங்களை அண்ணா சேரிக்க ஆரம்பித்ததும் கல்கி பத்திரிகைக்காகத் தான். எனினும், கல்கி நிர்வாகத்தினரிடம் அவரது புகைப்படம் இருக்கவில்லை. கடைசியில், தினமணியில் பயன்படுத்தி இருந்த ஃபோட்டோவைத் தங்களது இரங்கல் கட்டுரையில் பயன்படுத்தினார்கள். காரணம், அண்ணாவுக்குப் புகைப்பட நாட்டம் கூடக் கிடையாது. மிகச்சில சந்தர்ப்பங்களில் மிகச்சிலர் மட்டுமே தன்னைப் புகைப்படம் எடுக்க அவர் அனுமதித்திருக்கிறார்.

அவரது இறுதி நாட்களில் அவரைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து வெளியிட வேண்டும் என்று இரண்டு அன்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டனர். ஒருவர் பெரியவா பக்தர். அண்ணாவுக்கு நன்கு பரிச்சயமானவர். அவர் அண்ணாவின் விரிவான பேட்டி தேவை என்று என்னிடம் கேட்டார். ‘‘என்னிடம் கேட்பானேன், அண்ணாவிடமே கேளுங்கள்’’ என்று கூறினேன். ‘‘அண்ணா அதை விரும்ப மாட்டார். நீ சம்மதம் வாங்கித் தா’’ என்று அவர் கேட்டார். நான் மறுத்து விட்டேன்.

பின்னர், அந்த மனிதர், ‘‘அண்ணாவிடம் சாதாரணமாகப் பல்வேறு விஷயங்கள் பற்றி உரையாடுகிறேன், அவருக்கே தெரியாமல் அந்த உரையாடலை வீடியோ ரெகார்ட் பண்ணிக் கொள்கிறேன்’’ என்று என்னிடம் தெரிவித்தார். ‘‘அது உங்கள் விருப்பம், ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை’’ என்று கூறி விட்டேன். எனினும், அவர் இந்த முயற்சியில் இறங்கவில்லை. காரணம் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் எனக்கு இல்லை.

இரண்டாவது நபர் ஒரு பத்திரிகையாளர். அண்ணாவைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் நான் அவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அண்ணாவைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்பது அவரது ஆவல். அதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

அண்ணாவின் பூத உடலைத் தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், தனது இயக்கம் நடத்தும் பத்திரிகையில் அண்ணாவைப் பற்றி ஓர் இரங்கல் கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். நான் எழுதவில்லை.

அண்ணா மறைவுக்குப் பின் அவரைப் பற்றிப் பொதுவெளியில் எழுத வேண்டும் என்று எனக்கு ரொம்பவே ஆசை. ஆனாலும் எழுதவில்லை.இவை அனைத்துக்கும் ஒரே காரணம் அண்ணாவுக்குப் பிடிக்காது என்பது மட்டுமே.

இதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு.

அண்ணா மறைந்த சில நாட்கள் கழித்து ஸ்வாமி ஓங்காராநந்தர் சென்னை வந்திருந்தார். அண்ணாவைப் பற்றி வேதநெறியில் (அவரது ஆசிரமப் பத்திரிகை) எழுதுமாறு அவர் எனக்கு உத்தரவிட்டார். உடனே ஆசைஆசையாக ஒருசில விஷயங்களை எழுதிக் கொடுத்தேன். அதன்பிறகு இரண்டு சந்தர்ப்பங்களில் எழுதியதும் உண்டு. ஆனாலும், அண்ணாவுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்கிறோம், இது தவறு என்ற மனசாட்சி உறுத்தல் நிறையவே இருந்தது.

எனினும், இப்போது விரிவாக எழுத விரும்புகிறேன். இதற்குக் காரணம் ஶ்ரீ மோகனராமன்.

ராமபிரானையும் கிருஷ்ணனையும் ஒப்பிட்டு அண்ணாவிடம் பெரியவா கூறிய கருத்துகளைச் சில மாதங்கள் முன்பு, பூஜ்ய மகா பெரியவா பார்வையில் கிரேடா தன்பர்க், திஷா ரவி என்ற தலைப்பில் வலைத்தளங்களில் எழுதி இருந்தேன். இதைத் தொடர்ந்து ஶ்ரீ மோகனராமன் அவர்கள், அண்ணா என்னிடம் கூறிய இதர விஷயங்கள் பற்றியும் எழுதுமாறு மெயில் அனுப்பி இருந்தார். அவர் சொல்லி சுமார் நான்கு மாதங்கள் கடந்து விட்டன. இருந்தாலும், எனது தயக்கத்தின் காரணமாக இதுவரை அதைத் தவிர்த்து வந்தேன்.

அண்ணா வாழ்வில் திரு மோகனராமன் மிக முக்கியமானவர். அண்ணாவின் கையெழுத்தை நேர்கோடு, சாய்கோடு, வளைகோடு, நெளிகோடு என்றெல்லாம் வகைப்படுத்தலாமே தவிர எழுத்துரு என்று ஒருபோதும் நினைத்து விட முடியாது. அண்ணாவைத் தவிர அவர் கையெழுத்தை வாசிக்க முடிந்த ஒரே நபர் மோகனராமன் மட்டுமே.

எழுபதுகளில் அண்ணாவிடம் வந்து சேர்ந்த மோகனராமன், அண்ணா எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் படிப்பவர்களுக்குப் புரியும் விதத்தில் அழகிய கையெழுத்துப் பிரதியாக எழுதிக் கொடுத்தார். ரொம்ப வருடம் அண்ணா அவரது இல்லத்தில் தங்கியும் இருக்கிறார். அவரும் அவரது மனைவியும் அண்ணாவைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவிப்பவர்கள். பெரியவாளுக்கு அண்ணா எப்படியோ, அதுபோலவே, அண்ணாவுக்கு மோகனராமன் என்பது என் கருத்து.

அண்ணா பற்றி எழுதுவது அண்ணாவுக்குப் பிடிக்காது என்பது எனக்கே தெரியும்போது, மோகனராமனுக்குத் தெரியாதா? அதில் தவறு இல்லை என்று அவர் நினைப்பதால் தானே என்னை எழுதச் சொல்கிறார்? அவரே தவறு இல்லை என்று நினைக்கும்போது எனக்குத் தயக்கம் தேவை இல்லை, அல்லவா? எனவே தைரியமாக எழுதுகிறேன்.

swami omkarananda

வேறுசில காரணங்களும் உண்டு.

வேதநெறியில் நான் எழுதிய கட்டுரையைப் படித்த ஓர் அன்பர், ‘’அண்ணாவைப் பற்றிப் பத்திரிகைகளில் வெளியான இரங்கல் செய்திகள் அனைத்தையும் படித்தேன். அவற்றில் அவரைப் பற்றிய தகவல்கள் குறைவாகவே இருந்தன. உனது கட்டுரையில் மட்டும்தான் அண்ணாவைப் பற்றி நிறைய செய்திகள் இருந்தன‘’ என்று தெரிவித்தார். அந்தக் கட்டுரையில் நான் எழுதிய விஷயங்கள் தவிர இன்னும் நிறைய விஷயங்களை எழுத வேண்டும் என்ற ஆசையும் உண்டு. எனவேதான் இந்த முயற்சி.

எனது கல்லூரி ஆசிரியர் ஒருவர் – சாயி பக்தர். அவர் வேதநெறி கட்டுரையைப் படித்ததும் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். ‘’அவருடைய புஸ்தகங்கள் படிச்சிருக்கேன்ப்பா. ஆனால், அவரது பெயர் ரா. கணபதி என்பதற்கு மேல் அவரைப் பற்றி எதுவும் தெரியாது. உன்னுடைய கட்டுரையைப் படிச்சதும்தான் அவர் எவ்ளோ பெரிய மகான்-னு புரிஞ்சுது‘’ என்று தொலைபேசியில் கூறினார்.

உணர்ச்சி வேகத்தில் அவரால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. இவரைப் போல ஏராளமான சாயி பக்தர்களும், பெரியவா பக்தர்களும் அண்ணாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? அண்ணாவுடன் சுமார் 15 ஆண்டு காலம் இருந்தவன் என்ற முறையில் எனக்கு அவரைப் பற்றிய பல விஷயங்களை பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது அல்லவா?

ஆனாலும், எனது தயக்கம் பல வருடங்கள் நீடித்தது. இடையில் திரு. கணேஷ் சர்மாவைச் சந்திக்க வேண்டி வந்தது. அவரிடம் இந்த விஷயம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், சிவன் சார் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை விளக்கினார். சிவன் சார் சீடரான ஓர் அன்பர் ஒருமுறை வெளியூர் சென்றிருக்கும் போது யாரோ ஒருவர் சிவன் சார் பற்றி அவரிடம் விசாரித்தாராம். இந்த மனிதருக்குக் குஷி தாங்கவில்லை.

சார் குறித்து அவரிடம் நீண்ட நேரம் உணர்ச்சி பொங்கப் பேசிக் கொண்டிருந்தாராம். பின்னர் ஊர் திரும்பியதும் சிவன் சார் தரிசனத்துக்காகப் போகிறார். மனசுக்குள் ஒரே உதறல். ‘சாரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது சாருக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காத விஷயம். அவரைப் பற்றி நான் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். நான் செய்தது சார் மனசுக்குப் பிடிக்காத செய்கை என்ற மனசாட்சி உறுத்தலுடன சாரைப் பார்ப்பதற்காகப் போகிறார். ‘நீ செய்தது தவறு’ என்று சார் திட்டவில்லை. மாறாக, ‘‘குருவின் பெருமைகளைப் பற்றிப் பேச வேண்டியது சிஷ்யனின் கடமை’’ என்று சார் அவரிடம் சொன்னாராம்.

அதுபோலவேதான் எனக்கும் அண்ணாவுக்குமான உறவு என்று என் மனம் நம்புகிறது. அண்ணா என்னைத் தன்னுடைய சிஷ்யன் என்று ஒருபோதும் சொன்னதே இல்லை. ஆனால், நான் அவரை என்னுடைய குருவாகத் தான் கருதுகிறேன். எனவே, சிவன் சார் சொன்னது போல, அண்ணாவைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் என் கடமை என்று என் மனம் நம்புகிறது. இது அண்ணாவுக்குப் பிடிக்காத விஷயம் என்றாலும், எனது கடமையைத் தான் நான் செய்ய விரும்புகிறேன்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அண்ணா செய்யச் சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் நான் செய்து விட்டேனா? அல்லது, செய்யாதே என்று சொன்ன விஷயங்களைச் செய்யாமல்தான் இருக்கிறேனா? இரண்டுமே இல்லை. பின்னர் அண்ணாவைப் பற்றி எழுதுவதில் மட்டும் ஏன் எனக்குத் தயக்கம் இருக்க வேண்டும்? எனவே, அவரைப் பற்றி எழுதலாம் என்று முடிவெடுத்தேன்.

இனி.. அண்ணா குறித்த நினைவுகளைத் தொடர்ந்து நீங்கள் படிக்கலாம். இதனைப் பகிர்ந்து கொண்டு, அன்பர்கள் பலருக்கும் அண்ணா குறித்த தகவல்கள் சென்று சேர உதவலாம்!

அண்ணா என் உடைமைப் பொருள்! (தொடர்) முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply