தினசரி ஒரு வேத வாக்கியம்: 64. ஒன்றுபடுவோம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

64.  ஒன்றுபடுவோம்! 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“உத்புத்த்யத்வம் ஸமனஸ:”– ருக் வேதம் 
“ஓ நண்பர்களே! எழுங்கள்! விழித்தெழுங்கள்!”

ஒன்றேயான எண்ணம் கொண்டவர்கள் சஹ்ருதயர்கள். (சமனஸ:) அப்படிப்பட்டவர்கள் அனைவரையும் எழுப்புகிறது இந்த மந்திரம். இதுவே உண்மையான முழக்கம். நிஜமான துயிலெழுப்பல். 

ஒரே விதமான ஆலோசனை, ஒரே விதமான பதில் வினையாற்றல் என்ற சமமான எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும். ஒவ்வொருவரும், ‘நமக்கென்ன வந்தது?’ என்று போகாமல் தம் எண்ணங்களையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கும் அதன் மூலம் உலக நன்மையை சாதிப்பதற்கும் உழைக்கவேண்டும். 

சமுதாய நிர்மாணம், சங்க சக்தி குறித்து மேற்சொன்ன மந்திரம் தெரிவிக்கிறது. ஏதாவது ஒரு லட்சியத்தை சாதிக்க வேண்டுமென்றால் அதேபோன்ற எண்ணமுள்ள சிலரோடு சேர்ந்து இயங்க வேண்டும். அப்போது அந்த லட்சியத்திற்கு வலிமை உண்டாகும்.

ஆயின் உலகிற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளவர்கள் கூட ஒன்றுகூடி வலிமை பெற்று ஒரு இயக்கமாக ஆனால்? அதையும் ‘ஸமனஸ:’ என்று ஏற்க முடியுமா? மேற்சொன்ன சஹ்ருதயர்கள் என்ற கருத்து அவர்களுக்கும் பொருந்துமா? என்ற கேள்வி எழுகிறது.

‘ஸ’ என்ற எழுத்து சமமான என்ற பொருளை மட்டுமின்றி நல்ல என்ற பொருளையும் குறிக்கிறது. சமமான, நல்ல மனம் கொண்டவர்களே ஸஹ்ருதயர்கள் என்பதை அறிய வேண்டும். அதுமட்டுமல்ல. மனப்பூர்வமாக முயற்சிப்பவர்களால் மட்டுமே நல்ல செயல்களை சாதிக்க முடியும்.

சமமான எண்ணம் கொண்டு, மனதார முயற்சிப்பவர்கள் நல்லதோ கெட்டதோ அசாத்தியமானதை சாதிப்பார்கள் என்று நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. 

உலகிற்கு தீங்கு விளைவிப்பவர்கள் கூட ஒற்றுமையோடு எத்தகைய செயல்களை சாதித்து வருகிறார்கள் என்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அவர்களின் தீய செயல்கள் அழிவுக்கு காரணமாகின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்களின் வெற்றிக்கும் ஒன்றுபட்ட கருத்து கொண்டவர்களின் ஒற்றுமையே காரணமாகிறது.

அப்படிப்பட்ட செயல்களைத் தடுத்து உலக நன்மைக்கு பாடுபட வேண்டும் என்று நினைத்தாலும் ஒருமித்த மனம் கொண்டவர்களின் ஒற்றுமை மிகவும் தேவை.

நம் தார்மீக பரம்பரை வெற்றிகரமாக பரவ வேண்டும் என்றாலும் கூட இந்த மந்திரமே நம் முழக்கமாக இருக்க வேண்டும். அப்போது அது ‘ஸுமனஸ், ஸமனஸ்” – நல்ல உள்ளங்கள், ஒருமித்த கருத்துகள் என்றாகும். 

உலக நலனைக் கோரி நம் சனாதன தர்மம் நிலை நாட்டப்பட வேண்டும் என்ற தவிப்பு உள்ள ஒருமித்த மனமுள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சோம்பல், உதாசீனம் இவற்றை உதறிவிட்டு பாடுபடவேண்டும். இவற்றை நீக்கிவிட்டு எழுங்கள் என்று போதனையே ‘உத் புத்த்யத்யம்’ என்ற சொல்லில் உள்ள அழைப்பு!

Samavedam3
Samavedam3

தற்போது நல்ல லட்சியங்களும் சிந்தனைகளும் (பாசிட்டிவ் Attitudes) கொண்டவர்கள் மனத்தூய்மையோடு மனதார ஒன்றிணைந்த சக்தியாக சேர்ந்து விழிப்படைந்து இயங்க வேண்டிய தேவை உள்ளது. அந்த இயக்கம் ஆவேசம் கொண்டு கொதித்து எழத் தேவையில்லை. 

லட்சியத்தில் இருக்கும் தூய்மையே செயல் முறையிலும் இருக்க வேண்டும். நாசத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமான ‘ஒருமித்த மனத்தவரின் ஒற்றுமை’ என்னும் ஆற்றலை நல்ல மார்க்கத்தில் முன்னேற்றம் என்ற செயல்பாட்டில் பயன்படுத்துவதே உலகமெங்கும் தற்போதைய கடமை.

மனிதரில் ஒவ்வொருவருக்கும் ஓரளவாவது செயலாற்றும் திறன் இருக்கும். பாலம் கட்டுவதில் அணிலின் பங்கு போல தனக்கிருக்கும் சிறிய ஆற்றலை தாழ்வாக நினைத்து  மறைக்காமல் தன் பங்கு கடமையைச் செய்தால் இயக்கம் வலுவடையும். 

மேலும் நம் சனாதன தர்மத்தின்படி ஸ்வதர்மத்தை கடைப்பிடிப்பதே மிகச் சிறப்பானது. அவரவர் தர்மம் அவரவருக்கு உயர்ந்தது. ஆனால் தம் தர்மமே சிறந்தது என்றும் அதுவே பிரபஞ்சமெங்கும் வியாபிக்க வேண்டும் என்றும் நினைத்து புனிதப் போர் என்ற பெயரில் சிலரும், மதமாற்றம் என்ற பெயரில் வேறு சிலரும் ஒன்று கூடும் இந்த தருணத்தில் நம் தர்மத்தில் இருந்து நம்மவர்களை விலக விடாமல் இருக்கச் செய்வதற்கு நாம் ஒன்றுபட வேண்டும்.

நம் மதத்தின் சிறப்புகளை நம்மவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒன்றுபட்ட எண்ணமுள்ள நம்மவர்களை ஒன்று திரட்ட வேண்டும். அமைதியான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பேராற்றல் உருவாகட்டும்!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 64. ஒன்றுபடுவோம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply