தினசரி ஒரு வேத வாக்கியம்: 56. தர்மத்திற்கு மூலம் வேதம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

56. தர்மத்திற்கு மூலம் வேதம்! 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“வேதோSகிலோ தர்ம மூலம்” – மனுஸ்மிருதி 
“தர்மத்திற்கு மூலம் வேதம்”

தர்மத்திற்கு மூலங்கள் – வேதம், ஸ்மிருதி, சீலம், ஆச்சாரம், சத் புருஷர்களின் மனம் சந்தோஷிப்பது. இவை அனைத்திலும் வேதம் முக்கியம் என்பது மனுவின் உத்தேசம்.

மனுஸ்மிருதி மட்டுமின்றி,  கௌதம ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி போன்றவற்றிலும் இந்த வாக்கியம் காணப்படுகிறது.

நம் சனாதன தர்மத்திற்கு மூலம் வேதமே. அதனை ஆதாரமாகக் கொண்டே தர்ம சாஸ்திரங்கள் (ஸ்மிருதி),  புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் தோன்றின. காவியம், நாடகம், சங்கீதம், நாட்டியம், சிற்பம் போன்ற கலைகள், வைத்தியம் போன்ற கல்விகள் அனைத்தும் கூட வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்தன.

வேதக் கல்வியை  அக்ஷரம், ஸ்வரம் முதலியவற்றோடு  பயிற்சி செய்தல், பயிற்றுவித்தல் ஆகிய  வாழ்க்கை முறையை மேற்கொண்டு ஒரு பிரிவினர் அர்ப்பணிப்போடு தலைமுறை தலைமுறையாக உழைத்து வருகிறார்கள். அந்த பொறுப்பை அவர்கள் எடுத்துக்கொண்டாலும் வேதம் போதித்த தர்மத்தை சாமானிய மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மகரிஷிகள் ஸ்மிருதிகளையும் புராணங்களையும் வலுவாக வடிவமைத்தனர். அவற்றோடு கூட ஆகம சாஸ்திரங்கள், மந்திர சாஸ்திரங்கள் கூட வேதங்களை மூலமாக கொண்டு வளர்ந்தன.

“வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத்மஜே|
வேத: ப்ராசேதசாதாசீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா ||

“வேத வேத்யனான பரமபுருஷன் தசரத புத்திரனாக அவதரித்தான். ‘ப்ராசேதசன்’ என்ற பெயர் கொண்ட மகரிஷி (வால்மீகி) மூலம் வேதம் நேராக ராமாயணமாக வெளிப்பட்டது” என்ற புகழ்பெற்ற ஸ்லோகம் உள்ளது. ‘ராமாயணம் வேத சமம்’ என்பது ராமாயணத்தில் உள்ள வாக்கியம். 

மகாபாரதத்தை ‘பஞ்சம வேதம்’ (ஐந்தாவது வேதம்) என்று குறிப்பிடுகிறோம். பாகவதத்தை, “நிகமகல்பதரோர் கலிதம் பலம்” 

– “வேதம் என்ற கல்ப விருட்சத்திலிருந்து உதிர்த்த பழம்” என்று விளக்கினார்கள்.

Samavedam3
Samavedam3

“இதிகாச புராணாப்யாம்வேதம் சமுபப்ரும்ஹயேத்” – “இதிகாச புராணங்களின் மூலம் வேதம் நன்றாக பரப்பப்பட்டது. வேதம் சித்தாந்த வடிவில் கூறிய தர்மங்களை கதை வடிவில் விளக்கி அளிப்பதற்கே புராண இதிகாசங்கள் தோன்றின”. 

நாட்டியம், சங்கீதம் இவற்றைக் கூட, “சதுர்வேத சமுத்பவம்” என்று கூறினர். சங்கீத சாஸ்திர அறிஞரான தியாகராஜர் சங்கீதத்தை “சாமவேத ஜனிதம்” என்று தெளிவாகக் கூறுகிறார்.

ஆனால் இந்த விஷயங்களை சரியாக பரிசோதிக்காத மேல் நாட்டவர் நம் தேசத்தில் வேதத்தின் மீது மதிப்பு அதிகம் இருப்பதால் ஒவ்வொன்றும் வேதத்தை மூலமாகக் கொண்டு உள்ளதாகக் கூறுவது வழக்கமாகிவிட்டது என்று எழுதினார்கள். ஆனால் பாவம் அவர்களின் மத நூல்களுக்கு வேதம் என்று பெயர் வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டே அவர்களின் நூல்களின் வாக்கியங்கள் கூட வேதத்தில் உள்ளன என்று கூறிக்கொண்டு வியாபாரம் செய்யும் தரத்திற்கு இறங்கி உள்ளார்கள்.

ஆனால் ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டுமென்றால் முதலில் அதன் மீது கௌரவமான எண்ணம் வரவேண்டும். அந்த பாவனையோடு ஒரு நடுநிலை கண்ணோட்டத்தோடு பயின்றால் கட்டாயம் நம் தேசத்தின் ஒவ்வொரு சம்பிரதாயத்திற்கும், கல்விக்கும் தெளிவான மூலநூல் வேதமே என்பது தென்படும். அவ்வாறு விளக்கமளித்த சாஸ்திர நூல்கள் கூட நிறைய வந்துள்ளன. அவற்றை பொறுமையாக ஆராயவேண்டும்.

arkyam to surya bhagwan
arkyam to surya bhagwan

நம் தேசத்தில் கல்வியும் சாஸ்திரங்களும் வெறும் புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டவை அல்ல. தேசத்தின் இயல்பு, சம்பிரதாயம், விஞ்ஞானம் போன்றவற்றையும் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அந்த வித்யை தெளிவாகப் புரியும்.

அவ்விதம் கவனித்து தெளிவுபடுத்தும் அறிஞர்கள் மேல் நாடுகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பரிசோதனையில் நம் மந்திரங்கள், புராணங்கள் போன்றவற்றின் விஞ்ஞானம் அறிவியல் உண்மைகளே என்பது நிரூபணமாகி வருகிறது. ஆனால் நம்மவர்கள் மேல் நாட்டு மோகத்தில் விழுந்து அவற்றை அலட்சியப்படுத்துகிறார்கள்.

தாய் நாட்டின் புராதன சிறப்பை மதிக்காவிட்டால் முன்னேற்றம் சாத்தியமாகாது. இந்த தேசம் கணக்கற்ற காலத்திலிருந்தே வேத பூமி. வேதமந்திரங்கள்  முதல் நாட்டுப்பாடல் வரை விரிந்து பரந்த தர்மம் நம்முடையது. எல்லைகளற்று விளங்குவதால்தான் நம் சனாதன தர்மம் அசையாமல்விரிந்து படர்ந்துள்ளது.

இந்த விருட்சத்தின் கிளைகள் இலைகள் மலர்கள் பழங்கள் அனைத்திற்கும் வேத தர்மம்தான் மூலம். இதோடு சேர்த்து மரத்தையே விழுங்கி விடலாம் என்ற எண்ணும் புழுக்களை கவனமாக அடையாளம் கண்டு விலக்குவதில் நம் புத்திசாலித்தனத்தை காட்ட வேண்டும்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 56. தர்மத்திற்கு மூலம் வேதம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply