54. பலவீனமாக இருக்காதே!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“நாயமாத்மா பலஹீனேன லப்ய:” – முண்டகோபநிஷத்.
“இந்த ஆத்மா பலவீனமானவருக்கு கிடைக்காது”.
ஆத்மாவை அறிவது வாழ்வின் பரமார்த்தம் என்பது வேத மதம். சாஸ்வதமான இந்த ஆன்மீக ஞானம்
பலவீனமானவர்களுக்குக் கிடைக்காது என்று போதிக்கிறது வேதம். உடல் உறுதி, மன தைரியம் இவ்விரண்டும் ஆன்மீக சாதகனுக்குத் தேவை.
ஆனால் அனைத்து வலிமைகளும் புஷ்டியாக இருக்கும் வரை வெறும் போகங்களை அனுபவிப்பதற்கே வாழ்வை செலவிடுகிறோம். அதன் மூலம் நம் புலன்களின் சக்தியும் மானசீக சக்தியும் பலவீனமடைகின்றன. அதற்குப் பிறகு என்ன சாதனை செய்ய முடியும்? ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து தியானம் செய்யலாம் என்றால் கால் வலி, மூட்டு வலி என்று முனகுகிறோம். எந்த நூலைப் படித்தாலும் புரிந்துகொள்ள முடிகிறதா? நினைவில் நிறுத்த முடிகிறதா? எந்த தர்மச் செயலாவது மேற்கொள்ள முடிகிறதா?
ஆத்ம ஞானத்திற்குத் தேவையான கர்ம யோகத்தை செய்வதே உண்மையான வாழ்க்கை. இந்த உண்மையை கவனிக்காத மனிதனுக்கு வாழ்வின் இறுதிக்குச் சென்றாலும் அமைதி கிட்டாது.
உடலே நிலையானது என்று எண்ணி புலன்களை திருப்தி செய்தபடியே காலத்தை கழிப்பவனுக்கு சத்தியம், தர்மம் போன்ற சொற்கள் கூட ருசிக்காது. ‘ஆத்மா’ வை நோக்கி பார்வையைச் செலுத்தி சாதனை செய்பவருக்கும், அதற்காக வாழ்வின் சக்தியை செலவிடுபவருக்கும் ஆனந்தமான ஆத்ம சக்தி விழிப்படைகிறது. அந்த சைதன்யத்தில் வாழ்க்கை வலிமை கொண்டு சிறந்த ஆயுளும், அமைதியானதும் திருப்தியானதுமான அனுபூதியும் பெறுகிறார்.
மானசீக பலவீனம் கூட ஆன்மீக கல்விக்குத் தடையே! அதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, “க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம்” என்று எச்சரிக்கிறார்.
பாஹ்யமான சிறு மாற்றம் கூட நம் உள்ளத்தை அசைக்க இயலாத யோக சாதனையை நம் முன்னோர் வெளியிட்டுள்ளனர்.புத்தியும் பலன்களும் வலிமை பெறுவது அதன் முதல் பயன்.சிறிது சிறிதாக ஆத்ம தத்துவத்தை வெளிப்படுத்திக் கொள்வது முக்கிய பயன். ஒரு சிறந்த வரிசைக் கிரமத்தை இதன் மூலம் ஏற்படுத்தினர்.
இந்த வழிமுறையை வாழ்க்கை விதானமாகக் கொண்ட நம் சனாதன தர்மம் தற்சமயம் சிறிது சிறிதாக போக கேளிக்கையே பரமார்த்தம் என்று எண்ணும் சிந்தனையில் சிக்கி ஆத்ம சக்திகளை உறக்க நிலையில் வீழ்த்தி வருகிறது.
ஆன்மீக சாதனைக்கு உடலில் பலம் உள்ளபோதே முயற்சிக்க வேண்டும். அங்குமிங்கும் பராக்கு பார்ப்பது பலனளிக்காது. நசிகேதன், சுக மகரிஷி, பிரகலாதன் போன்றோர் இதற்கு உதாரணங்கள்.
‘நிக்ரஹச் செல்வமான’ புலனடக்கம் எனும் யோக சக்தியோடு கூட சுருக்கம், பலவீனம் இல்லாத வலிமையான முதுமையை வாழ்ந்து பூரண ஆயுளை சாதித்தார்கள் நம் முன்னோர். அவர்கள் முதுமையை வாழ்க்கையின் இறுதிக் கட்டமாக பார்த்தார்கள். முதுமை என்றால் பலவீனப்படும் ‘ஜரா’ அல்ல. அது வயோதிகம் மட்டுமே. அவ்வாறுன்றி நோய்வாய்ப்பட்டு வருந்தும் நிலைக்கு உள்ளாகக் கூடாது. அதற்கு சிறுவயது முதல் சரியாக புலனடக்கத்தோடு கூடிய யோக வாழ்க்கை வழிமுறை தேவை. அது உடலையும் அறிவையும் வலிமையாக்கும். அதன் மூலம் ஆத்ம ஸ்வரூபத்தை புரிந்து கொள்வதற்குத் தேவையான தாரணை, ப்ரக்ஞை, தவம் போன்றவை தடையின்றி நடக்கும்.
ஆத்ம ஞானம் என்பது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட விஷயம் அல்ல. வாழ்க்கையை சரியாக புரிந்து கொள்வதே ஆத்ம ஞானம். அதனைப் பெற்ற வாழ்க்கையே உண்மையான அமைதிக்கு வழிவகுக்கும்.
அந்த திசையில் மனிதனின் மூளையை நடத்தி உய்வடையும் வாழ்க்கையை சாதித்துப் பெறும் நம் சனாதன ஜீவன விதானத்தை எடுத்துக் கூற வேண்டிய தருணம் இது.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 54. பலவீனமாக இருக்காதே! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.