தினசரி ஒரு வேத வாக்கியம்: 53. வெறுப்பில்லாமல் வாழ்வோம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

.jpg" style="display: block; margin: 1em auto">

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

53. வெறுப்பில்லாமல் வாழ்வோம்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“மா வித்விஷா வஹை” – கேனோபநிஷத் 

“பரஸ்பரம் துவேஷம் இல்லாமல் இருப்போம்!”

இது குருவும் சீடர்களும் கூறிக் கொள்ளும் சாந்தி பாடமாக புகழ்பெற்ற கூற்று.

கல்வி கற்றதற்கு பயன் வெறுப்பின்றி இருப்பதே!  ஒருவர் மேல் மற்றவருக்கு தனிப்பட்ட கருத்து இருப்பதே துவேஷம். அந்த துவேஷத்தையே வெறுக்கும் பண்பாடு நம்முடையது. வெறுக்கும் குணத்தை வென்று விட்டால் அனைத்தையும் வென்றது போலத்தான். ஒவ்வொரு சிறந்த மார்க்கத்திற்கும் அடிப்படை இதுவே! 

துவேஷம் என்ற எதிர்மறை குணத்திற்கு அசூயை, கோபம், பகை, இம்சை, எதிர்ப்பு இவையனைத்தும் பிள்ளைகள். இந்த கிழங்கைக் கிள்ளி எறிந்தால் போதும். வேற்றுமை எண்ணங்கள் என்னும் மரம் வேரோடு அழிந்து விடும்.

அதனால்தான் நம் தேசம் துவேஷ குணத்தை துவேஷிக்கிறது. படையெடுத்து வந்த எதிரிகளை போரில்எதிர்கொள்வது துவேஷமாகாது. தானாக பகையை வளர்த்துக் கொண்டு தாக்குவது துவேஷம். நம் இருப்பையும் ஆத்மாவையும் அழிக்க நினைக்கும் தீயவர்களிடம் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சி துவேஷமல்ல. 

நாமாகவே பிறரை அழிக்க நினைத்தால் அதுவே வெறுப்பு. அத்தகைய வெறுப்பு நம் பாரத பூமியில் இல்லை. நம் தேசக் காற்றிலும் இல்லை. நம் தர்மத்திலும் இல்லை அதனால்தான் பாரததேசம் அனைவரையும் தாயைப் போல் ஆதரித்து ஏற்றது. சகித்துக் கொண்டது. அமைதியாக பொறுத்துக் கொண்டது. அனைத்திலிருந்தும் நல்லவற்றை ஏற்று நன்மையைப் பகிர்ந்தது. ஆக்கிரமித்தவர்களைக் கூட அரவணைத்துக் கொண்டது.

பக்தி மார்க்கத்தில் கூட வெறுப்பின்மையே முக்கிய குணம்  என்கிறார் கீதாசார்யன். “அத்வேஷ்டா சர்வபூதானாம் மைத்ர: கருண ஏவச”.

ஒரு விஷயம் நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம் அபிப்பிராய பேதம் இருக்கலாம் ஆனால் அது வெறுப்புக்கு வழிவகுக்கக் கூடாது. ஒருவரின் வழிமுறை ஆபத்தானதாகவோ அறியாமையாகவோ நமக்குத் தோன்றலாம் அதிலிருந்து நம்மையும் நம் வாழ்வாதாரத்தையும் காத்துக் கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால் துவேஷத்தோடு பகைமையை வளர்த்துக் கொள்ளலாகாது. 

ஒரு வர்க்கத்தில் சிலரின் புரிதலின்மையும் தீய வழி முறையும் சமுதாய நலனுக்கு தீங்கு விளைவிக்கலாம். அதிலிருந்து கவனமாக சமுதாயத்தை காக்கும் முயற்சி செய்வதில் தாமதிக்கக் கூடாது. ஆனால் அந்த வர்க்கத்தினர் அனைவரின் மீதும் வெறுப்பை வளர்த்துக் கொள்வது சரியல்ல.

uppu moottai
uppu moottai

வெறுப்பு ஒரு வர்க்கத்தையோ ஒரு அமைப்பையோ சேர்ந்தது அல்ல. அது தனி மனிதனைச் சேர்ந்தது. மனிதனுக்கு மனிதன் வேறுபாடு இருக்கும். ஜாதி, மொழி, மதம், குலம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு மனிதனிடம் இருக்கும் தனிப்பண்பு மற்றொரு மனிதனுக்கு ஒத்துவராது என்று தோன்றலாம். அதற்காக அது வெறுப்பாக மாறக்கூடாது.

நட்பு, கருணை இவற்றையே உள்ளத்தின் இயல்புகளாக கொண்டு நம்மை வெறுப்பவரிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு தகுந்த விதத்தில் பதில் வினையாற்றி எதிர் கொள்ள வேண்டும். நம் தேசம் பண்டைக்காலம் முதல் போதித்து வரும், கடைப்பிடிக்கத் தகுந்த வழிமுறை இது.

பிடித்த விஷயத்தை அன்போடு ஆதரித்தால் அது நம் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் பிடிக்காத விஷயத்தை விட்டு விலக வேண்டுமே தவிர அதை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் அந்த வெறுப்பு கூட ஒரு இயல்பாக மாறி நம் மனதை கீழ்மையாக மாற்றிவிடும். 

அன்பு, இரக்கம் இவை சாதிக்கக் கூடியவற்றை வெறுப்பு என்றுமே சாதிக்க இயலாது. அடுத்தவரின் மதம், தர்மம் போன்ற வழிமுறைகள் எதுவும் பயனற்றது என்றும் தம்முடையதே சிறந்தது என்றும் தீய போதனை செய்து ஆக்கிரமிக்கும் சுபாவம் கொண்ட மதங்கள் பல உள்ளன. அந்த சுபாவங்கள் துவேஷ பீஜத்திலிருந்து முளைவிட்ட விஷ விருட்சங்கள்.

ஆனால் பிறரை ஆக்கிரமிப்பதற்கு நம் தர்மத்தில் தடை உள்ளது. சொந்த தர்மத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதைக் கூட நாம் அங்கீகரிப்பதில்லை. ஏனென்றால் ஆக்கிரமிப்பது, பிற மதத்தை ஏற்பது இவ்விரண்டுமே வெறுப்பினால் பிறப்பவையே! 

இதில் முதலாவது… பிறர் மீது உள்ள துவேஷத்தால் நிகழ்வது. இரண்டாவது நம் மீது நமக்குள்ள துவேஷத்தால் நிகழ்வது. இரண்டுமே ஆபத்தானவை. வெறுப்பு குணம் தர்மத்திற்கு பிரதான எதிரி. அதுவே பாரதிய தரிசனங்கள் தெரிவிக்கும் முக்கிய கருத்து.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 53. வெறுப்பில்லாமல் வாழ்வோம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply