முரளிதரன் என்ற பெயர் ஏன்?

கட்டுரைகள்

கண்ணன், வாய் உதட்டில் குழலை வைத்து இடது கையால் அதைப் பிடித்துக் கொண்டு, வலது கை விரலால் வாசித்து, ஒரு காலை மற்றொரு காலின் மீது குறுக்கே வைத்து, பசு மாட்டுடன் நின்று குழல் ஊதும் காட்சி நம் கண் முன் நிற்கும். இந்தக் குழலோசைக்கே தனிச் சிறப்பு உண்டு. சூர்தாஸ் இதைப் பற்றி ஒரு ஸ்துதியில் பாடுகிறார்.

வனத்தில் கிருஷ்ணன் குழல் ஊதுகிறான். அதைக் கேட்டு பசுக் கள் எல்லாம் ஓடி வருகின்றன. அனைவரும் பரவசம் அடைகிறார் கள். தேவர்கள் உள்பட ஆனந்தம் அடைகிறார்கள். தலைக்கு மேல் இரண்டு கைகளையும் தூக்கிக் கும்பிடு கிறார்கள். கடலைக் கடைந்து அமிர்த கலசம் எடுத்து எல்லோருக்கும் மதுபானம் செய்வதற்காக மோஹினி வேடம் பூண்டு வந்திருப்பது போல் இருந்தது. அந்த ராக ரஸம் அதாவது அதர ரஸத்தை அனுபவிக்கலாமே ஒழிய வாயால் சொல்லமுடியாது. எப்படி வாய் பேசமுடியாதவன் இனிப்பை உண்டு, ருசியை வாயால் சொல்ல முடியாமல் தலையைத்தான் அசைக்க முடியுமோ, அப்படி குழலின் நாதத்தைக் கேட்டு ரசித்து தலையை அசைத்து அனுபவிக்கத் தான் முடியும்; சொல்ல முடியாது! ஒரு தோழி மற்றொரு தோழியிடம் சொல்லுகிறாள்…

கேள் தோழி, குழலோசை கேட்ட மாத்திரத்திலேயே என் மனம், உடல் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். நான் என்னையே இழந்து விட்டேன். என் கர்வம் எல்லாம் பறந்து போயிற்று. இனி கண்ணனைப் பார்க்காமல் ஒரு நிமிஷம் கூட என்னால் இருக்க முடியாது. ஒரு மணி ஒரு யுகமாக இருக்கிறது. கண்ணனுக்கு முரளி, அதாவது புல்லாங்குழல் மிகவும் பிடித்து இருக்கிறது. கேள் தோழி … அது அவனைப் பலவிதமாக ஆட்டி வைத்தாலும், அது அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

குழலின் சொல்படி அவன் தலையை அசைக்கிறான். குழல்தான், கண்ணனுடைய உதட்டுப் படுக்கையில் ஏறி, அவன் கையின் மென்மையான விரல்களை அசைக்கிறது. ஆனந்தமான முரளி கானம் கேட்கிறது. கண்ணன், குழலுக்கு அடிமையே ஆகிவிட்டான் போலும்! புருவத்தை நெறித்து, நம்மீது கோபப்படுகிறான். ஒரு நிமிஷம் சந்தோஷமாக இருந்து தலை அசைக்கிறான். என்னென்று சொல்லுவேன் குழலின் பாக்கியத்தை! என்று கோபியர்கள் வருந்துகிறார்கள். குழலை வெறுத்தாலும், அதன் புகழ் பாடுகிறார்கள். இது குழலைப் பற்றிய நிந்தா ஸ்துதியாக சூர்தாஸ் காட்டுகிறார்.

Leave a Reply