நர்சி மேத்தா கி.பி. 1414 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் தலாஜா என்ற ஊரில் நாகர் பிராமண குலத்தில் பிறந்தார். அவரது தந்தை கிருஷ்ண தாஸ். தாத்தா விஷ்ணு தாஸ் ஜுனகாட் அரசரின் தலைமைக் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். நர்சி தனது மூன்றாவது வயதில் தந்தையை இழந்தார். 11 ஆவது வயதில் தாயையும் இழந்தார். 1428 ஆம் ஆண்டு மனக் பாயை மணந்தார். பிறகு பன்சீதர் என்ற அண்ணனோடு வாழ்ந்தார். குடும்பத்தில் அக்கறையின்றி, வருவாயுமின்றி இருந்த அவரை அண்ணி கடிந்து கொள்ள, ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறி 40 மைல் தொலைவிலிருந்த கோப்நாத் கிராமத்திற்குச் சென்றார். அங்கிருந்த பாழடைந்த சிவன் கோவிலில் பட்டினி கிடந்து உயிரை விடத் தீர்மானித்தார். கி.பி. 1428 சித்திரை மாதத்தில் ஏழு நாட்கள் அன்ன ஆகாரமின்றி தியானத்தில் இருந்தார். உடல் இளைத்து ஜன்னி கண்டு, சமாதி நிலையெய்தினார். அப்போது அவருக்கு ஒரு பேரனுபவம் ஏற்பட்டது. அதை அவரே ஒரு பாடலில் விவரிக்கிறார்.
“என் முன்னே சிவபெருமான் தோன்றினார். அவருக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சியை எனக்குக் காட்டுமாறு சிவனை வேண்டினேன். அவரும் என் தலையில் தன் பொற்கரங்களை வைத்தார். உடனே என் கண் முன்னே விரிந்தது கோபியரோடு கண்ணன் ஆடிய ராசக்ரீடை.”
நர்சி மேலும் சொல்லுகிறார்: “ருக்மிணிவேண்ட அக்காட்சிக்கு ஒளியூட்டிய ஒரு தீப்பந்தத்தை நான் பிடித்துக் கொண்டேன். கிருஷ்ணனும், ராதையும், பிற கோபியரும், ருக்மிணியும், சத்ய பாமையும் ஆடிய அந்த அற்புத ராசக்ரீடையைக் கண்டு உள்ளம் களிவெறி கொண்டேன். கண்ணன் என் ஊனும் உயிரும் உருக என் கண்முன்னே ஆடிய ஆட்டத்தை நான் கண்டபடியே என் வாழ் நாளெல்லாம் பாடி மகிழ்கிறேன்.”
இந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. நாளெல்லாம் பஜனை வழிபாடு என்றே கழிந்தன. நர்சி, ஜுனகாட் நகருக்குக் குடிபெயர்ந்தார். அங்கும் இறைவன் மீது பாரத்தைப் போட்டு விட்டு அவனது புகழைப் பாடிக் கொண்டிருந்தார். குன்வர் பாய் என்ற மகளும், சியாமல் தாஸ் என்ற மகனும் பிறந்தனர்.
13 ஆண்டுகளுக்குப் பின் அவரது மகள் குன்வர் பாய் கருவுற்ற போது, ஏழாவது மாதம் செய்ய வேண்டிய சீர்வகைகளைச் செய்யும் வசதி அவருக்கில்லை. ஆனால் குஜராத்தி சமூகத்தினரிடம் இது ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டாயம். அப்போது கிருஷ்ண பகவானும் ருக்மிணியுமே வந்து சம்பந்திகளுக்கு பொன்னும் பொருளுமாக சீர் வகைகளைச் செய்தனர் என்று நர்சி தன் நூலான “குன்வர்பாய் நுமாமேருன்’ இல் குறிப்பிடுகிறார்.
இப்படியே மகன் சியாமன் தாசின் திருமணத்தையும் கண்ணனே நடத்தி வைத்ததாக “சியாமன் ஷா விவாஹ்’ என்ற பாடல்களில் சொல்லுகிறார். மற்றொரு சமயம் துவாரகை செல்லும் ஒரு யாத்ரிகருக்கு அங்கு சியாமள்ஷா என்ற பெயருக்கு நர்சி ஓர் உண்டி கொடுத்தார். ஆனால் அந்த யாத்ரிகர் துவாரகையில் எவ்வளவோ விசாரித்தும் அங்கு அந்தப் பெயருடையவர் யாரும் இல்லை. அப்போது துவாரகாதீசனான கண்ணனே சியாமள் ஷாவாக வந்து அந்த உண்டித் தொகையைக் கொடுத்தான். இப்படி நர்சி மேத்தாவின் வாழ்க்கையில் எத்தனையோ அநுபவங்கள்.
அவர் பிறந்த சமூகமாகிய நாகர் பிராமணர்களே, அநாசார வழிகளைக் கடைப்பிடிப்பவர் என்று அவரை வெறுத்து ஜாதிப்ரஷ்டம் செய்தனர். அதை அவர் சட்டை செய்யவில்லை. அதனால் வெகுண்ட அந்தணர்கள் சைவனான ஜுனகாட் மன்னனிடம் நர்சி மேத்தா ஒழுங்கீனமான முறையில் உயர் ஜாதிப் பெண்களையும் சேர்த்துக் கொண்டு சேரி மக்களது வீடுகளில் நடனம் மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டினர். அரசனும் நர்சியை அழைத்து அவர் குற்றமற்றவராக இருந்தால் அவர் வணங்கும் கண்ணனே அவருக்கு மாலையிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். அப்போது நர்சி கண்ணனிடம் முறையிட்ட பாடல்கள் ஹர்-மாலா என்ற பெயரில் மிக உருக்கமானவை.
நர்சி பாடி முடித்ததும் அரண்மனைக் கோவில் கதவுகள் தாமே திறந்து இறைவனே வந்து நர்சி மேத்தாவுக்கு மாலையணிவித்து அவர் நிரபராதி என்று உலகறியச் செய்தான். இது நடந்தது கி.பி. 1456 ஆம் ஆண்டில். முஸ்லிம் படையெடுப்பு ஜுனகாட்டுக்கு வரவும், நர்சி அமைதியை விரும்பி மங்ரோல் என்ற ஊருக்குச் சென்று தனது பாடும் பணியைச் செய்து கொண்டு அங்கு வாழ்ந்தார். அவர் கி.பி. 1480 இல் தன் 66 – வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
நர்சி மேத்தாவின் பாடல்கள் மூன்று வகைப் பட்டவை கிருஷ்ண சரிதப் பாடல்கள் (பாகவதம், கீத கோவிந்தம் வழிப் பாடல்கள்), சுயசரிதைப் பாடல்கள், பக்தி தத்துவப் பாடல்கள் என, கிருஷ்ண ஜன்ம, பாலலீலா, நாக தமன், தான் லீலா, ராச லீலா, ராச ஸஹஸ்ரபதி, சுதாம சரிதம், மான லீலா, ருக்மிணி விவாஹ், கோவிந்த கமன், சுரத் ஸங்க்ராம், ச்ருங்கார மாலா, தசாவதார முதலியன முதல் வகை. மாமேருன், ச்யாமள் ஷா விவாஹ், ஹர்-மாலா சுயசரிதைப் பாடல்கள் ஞான பக்திப் பாடல்களெல்லாம் தனிப் பாடல்கள்.
நவீன குஜராத்திக் கவிதையின் தந்தை எனப் போற்றப்படும் நர்சியின் பாடல்கள் மிக எளிய, ஜன ரஞ்சகமான நடையில் பாடுவதற்காகவே எழுதப்பட்டவை. கர்ண பரம்பரையாக வந்த அவரது ப்ரபாதியா என்ற காலைப் பாடல்களை இன்றும் குஜராத் கிராமங்களில் பஜனையாக மக்கள் பாடுகிறார்கள்.
கண்ணன் பாடல் ஒன்றில் யசோதையாக இருந்து கொண்டு பாலகோபாலனை எழுப்புகிறார் நர்சி: கண்ணா எழுந்திரு கண்விழித்து எழுந்திரு
ஆநிரை அவற்றை மேய்த்திடக் கொண்டுசெல்
ஆயிரம் கோபர்கள் அருகிருந் தாலும்
அவர்களின் தலைவனாய் வேறொரு ஆளிலை.
பண்டங்கள் ஆருளர்? உடனே எழுந்திரு.
தீஞ்சுவைப் பாலும் தித்திக்க வைத்துளேன்
பாயினின்று எழுந்துவா பாலையும் பருகவா.
காளியன் தலைமேல் களிநடம் புரிந்தவா
தரணியின் பாரத்தைத் தாங்கிட எழுந்துவா.
யமுனைக் கரையில் ஆவினம் மேய்ந்திட
உலகம் வியப்ப உள்ளம் களிப்புற
வேய்ங்குழல் இசைக்க வேறுளர் யாரே?
கவிழும் படகினைக் காத்திட உனையலால்
திக்கு வேறில்லை தீன தயாளா
உன்புகழ் பாடியே உவப்பேன் நர்சியும்.
மழைக் காலம் முடிந்து சரத்ருது வந்தது. வானம் தெளிந்தது. ஏரி குளங்கள் நிறைந்து எங்கும் பசுமை. கோப கோபியருக்கு ஒரே மகிழ்ச்சி. பால் போல் நிலவு மின்னும் ஒரு பௌர்ணமி இரவில், யமுனைக் கரையில் கண்ணன் குழலூத, அவனோடு ராசக்ரீடை செய்தனர் கோபியர். விண்ணவர் யாவரும் வியந்து நோக்கினர்.
மரகதக் காடுகள் மலிந்த இடமாய்
பேரெழில் வாய்ந்தது பிருந்தாவனமாம்.
பெருமை வாய்ந்ததிம் மங்களத் திங்களும்.
சரத் காலச் சந்திரன் வானில்
தண்ணொளி பரப்ப தரணி மயங்கிட
யமுனைக் கரையில் ஏகாந் தத்தில்
கண்ணன் இசைக்கக் காற்றில் கலந்த
புல்லாங் குழலில் பொங்கித் ததும்பும்
மந்திர ஒலியும் மனதைக் கவர்ந்திட
கோபியர் கேட்டே களிமிகக் கொண்டனர்,
ராசக் கிரீடை நடமிட விரைந்தனர்.
கண்ணன் கோபியர் களிநடம் என்பது
காணக் கிடைக்கா காட்சி அல்லவோ?
இந்திராதி தேவர் இறங்கி வந்தனர்
கண்ணன் லீலையைக் காண விரைந்தனர்.
கண்ணன் கோபியர் கூடி மகிழ்ந்த
ராசக் கிரீடையர் இன்பக் கிரீடை.
தேனென இனித்தஇத் தெய்வக் காட்சியை
நரசியும் கண்டான் நல்லின்பமும் கொண்டான்.
“ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கு இருப்பவரன்றோ’ என்று பாரதி பாடிய பறையருக்கும் புலையருக்கும் ஹரியின் மக்கள் என்று பொருள்படும் “ஹரிஜன’ என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தி அவர்களுக்கு ஏற்றம் தந்தவர் நர்சியே. அக்காலத்துக்கு அது மிகப் பெரிய சமூகப் புரட்சி. அச் சொல்லையே மகாத்மா காந்தி எடுத்துக் கொண்டார். தன் பத்திரிகைக்கு “ஹரிஜன்’ என்றே பெயர் வைத்தார். உண்மையில் காந்திஜியின் வழிகாட்டிகளில் முக்கியமானவர் நர்சி மேத்தா என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக “வைஷ்ணவ ஜனதோ’ பாடலைத் தன் வாழ்க்கையின் லட்சியமாக அவர் அமைத்துக் கொண்டார். உண்மையான வைஷ்ணவன் யாரென்று அப்பாடலில் நர்சி மேத்தா சொல்லுகிறார்.
வைணவன் எவனென விளம்புவன் நர்சி:
கருணை வடிவாய்க் காண்பவன் எவனோ
துன்பப் படுவோர் துயர் தீப்பவனோ
அதிலோர் பெருமை தேடான் எவனோ
தரணி மாந்தரைத் தாழ்ந்து வணங்குவோன்
எவரையும் இகழும் இயல்பற் றவனாய்
சிந்தனை சொல்லும் செயலனைத் திலுமே
தூய்மை; அவன்தன் அன்னைக்கு அணிகலன்.
விருப்பம் வேட்கை விடுபட் டவனாய்
பெண்களைத் தாயாய்ப் பேணும் உளத்தோன்
பொய்மை பேசான் பொறாமை அகன்றான்
பேராசை வஞ்சம் பேணா நெஞ்சினன்
பற்றுதல் அற்றான் தெய்வப் பற்றுளான்
அவனை அறிந்த அன்பர் குலமெலாம்
நற்கதி பெற்றிடும் நர்சியின் வாக்கிது.
இறைவன் இல்லாத இடம் இல்லை, எல்லாம் அவனே, அவனன்றி வேறில்லை என்பதை உணர்ந்து விட்டால், நிச்சயமாக இறைவனை அடையலாம் என்று உறுதியளிக்கிறார் நர்சி.
ஆயிர மாயிரம் வடிவங்கள் கொண்டாய்
ஆயினும் உன்னை யன்றி வேறில்லை.
உடலில் உறையும் ஆன்மா நீயே
உயரே உலவும் கதிரவன் நீயே
ஓமென வேதம் உரைப்பதும் நீயே.
நீயே நிலமும் நீரும் நீயே
கடுகிச் செல்லும் நீரும் நீயே
மலைகள் மரங்கள் மற்றுள எல்லாம்
நீயே ஆனாய்; பின்னர் நீயும்
படைத்த இன்பம் பலவும் துய்த்திட
மனிதனாக மண்ணில் பிறந்தாய்.
பொன்னும் பொன்அணி கலன்களும் ஒன்றே
பற்பல பெயர்களில் பார்த்திட் டாலும்
அனைத்தும் பொன்னே அன்றி வேறில்லை
என்றே உரைக்கும் எண்ணரும் வேதம்.
மரத்தில் விதைநீ விதையில்மரம்நீ
பார்ப்பதில் உள்ளதே பலவேற் றுமையும்.
உளத்தின் கற்பனை இவையென உணர்ந்து
அன்பெனும் துணையை அகத்தில் நிறுத்தி
உன்னைக் காண்பது உறுதியாம் என்றே
உரைத்தேன் நர்சி உண்மை வாக்கிது.
(பாடல்களில் தமிழ் வடிவம்: மு.ஸ்ரீ){jcomments on}