வடக்கு வாழ்கிறது; தெற்கு தோய்கிறது!

கட்டுரைகள்

ரஸகான் தில்லியைச் சார்ந்த பதான். அவர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் சொல்லுகிறார்கள். அவர் ஒரு சாதாரண வணிகப் பிள்ளை மீது மிக்க அன்பு வைத்திருந்தார். அவனுடைய எச்சிலைக் கூட சாப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது. ஒருசமயம் பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது நான்கு வைணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பது ரஸகான் காதில் விழுந்தது.

அதாவது “ரஸகான் எப்படி வணிகப் பிள்ளை மீது ப்ரேமை வைத்திருக்கிறானோ, அவ்வாறு பகவானிடம் அன்பு செலுத்த வேண்டும்” என்று! இதைக் கேட்டு அவர், “பகவானுடைய உருவம் எப்படி இருக்கும்’ என்று அவர்களைக் கேட்டார். அவர்கள் ஸ்ரீநாத் பகவானுடைய படத்தைக் காட்டினார்கள். அதுமுதல் அவர் அன்பு வணிகப் பையனை விட்டு விலகியது. அவர் ஸ்ரீநாத்தைத் தேடித் தேடி அலைந்தார். பகவானிடத்தில் உள்ள அவரது உண்மையான பக்தி ப்ரேமையைக் கண்டு, விட்டலநாத்ஜி அவரை வேற்று மதத்தினர் என்றும் பாராமல் தன் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்.

ஒருநாள் ரஸகான், பார்ஸி மொழியில் ஸ்ரீமத் பாகவதத்தின் மொழி பெயர்ப்பைப் படித்துக் கொண்டிருந்தார். அதில் கோபிமார்களுடைய விரஹ தாப வர்ணனை வந்தது. அந்தக் கட்டத்தைப் படித்ததும், “எந்த நந்தகோபனுடைய பிள்ளை ஸ்ரீ கிருஷ்ணன் மீது ஆயிரக்கணக்கான கோபஸ்திரீகள் உயிரை விடுகிறார்களோ, அந்த கிருஷ்ணன் மீது நாம் ஏன் ப்ரேமை செலுத்தக் கூடாது’ என்ற எண்ணம் உதித்தது:

அவர் வ்ரஜபூமியை (கோகுலம்) நோக்கிச் சென்றார். கிருஷ்ணனுடைய பிரிவால் கோபியர்கள் விரஹ வேதனையால் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

“எந்த பகவானை அடைய, நாரத முனி முதல் சுகர் வியாசர் வரை அவரைத் துதிபாடினார்களோ, (ஆனால் தோற்று விட்டார்கள், கரை தேறவில்லை) அந்த பகவானை இடைப் பெண்கள் உள்ளங்கை மோரில் ஆட்டிப் படைத்தார்கள்.”

ஒரு இடத்தில் சொல்லுகிறார்- “காகத்தின் பாக்கியத்தை என்னவென்று சொல்வது, ஹரியினுடைய கையிலிருந்து ரொட்டி வெண்ணெயை எடுத்துக் கொண்டு போய்விட்டது. அந்த பாக்கியம் கூட எனக்குக் கிட்டவில்லையே” என்று வருந்துகிறார்.

முஸல்மானாக இருந்து வ்ரஜபாஷையில் அநேகம் கவிதைகள் செய்து இருக்கிறார். மேலும் சொல்லுகிறார்: மனிதனாகப் பிறந்தால், அதே கோகுல கிராமத்தில் பிறக்க வேண்டும். பசுவாகப் பிறந்தால், கிருஷ்ணனுடைய அதே பசுக்களின் மத்தியில் இருந்து மேய வேண்டும். கல்லாய்ப் பிறந்தால், கிருஷ்ணன் குடையாகப் பிடித்த கோவர்தன மலையில் ஒரு கல்லாக இருக்க வேண்டும். பறவையாகப் பிறந்தால், அந்தக் காளிந்தி நதிக்கரையில் உள்ள கதம்ப மரத்தின் கிளையில் வசிக்க வேண்டும்.”

இவ்வாறு அநேகக் கவிதைகள் செய்திருக்கிறார்.

கிருஷ்ணனிடத்தில் ஒரேயடியாக ஐக்யமாகி விட்டார் ரஸகான். அவர் சொல்கிறார்: “அந்த மாடு மேய்க்கும் கிருஷ்ணனுடைய தடி – கம்பிணினியில் (இடையர்கள் உடை) மூவுலகத்தையும், எட்டு சித்தி ஒன்பது நிதியையும் தியாகம் செய்வேன்” என்கிறார்.

ஆழ்வார்களில் குலசேகராழ்வார் அரச பதவியைத் துறந்து ராம பக்தனாகி கவி பாடுகிறார். அவர் தல யாத்திரை செய்து திருவேங்கடம் வந்து அடைகிறார்.

“திருவேங்கட மலையில் சுவாமி புஷ்கரிணியில் வாழும் நாரையாகவாவது, மலைச்சாரலில் இருக்கும் மீனாகவாவது, மலைச்சாரலில் இருக்கும் சண்பகமரமாகவாவது இருக்கும் பாக்கியம் கிடைக்குமோ” என்று       வேண்டுகிறார்.

கடைசியில் தாமாக, குறிப்பிட்ட ஒரு பிறவியையும் வேண்டாமல் “வேங்கடத்தான் தன் பொன்னியலுஞ் சேவடிகள் காண்பான்” – எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனுமிலேனே’ திருவேங்கட மலையில் ஒரு பிறவியும் தனக்கு வாய்க்காவிடில் “நின் கோயிலின் வாசல் – படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே’ என்று திருமாலை வேண்டுகிறார். ஆகையால்தான் விஷ்ணுவாலய சன்னிதிகளின் உள் வாசற்படியை “குலசேகரன் படி’ என்று சொல்லுகிறார்கள்.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராயிருந்தும் ரஸகான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் ஆழ்ந்த பக்தியையும், ப்ரேமையையும், தன் கவிதைகள் மூலம் காட்டுகிறார்.

கிருஷ்ண பக்தி என்று வந்துவிட்டால் வடக்குக்கும் தெற்குக்கும் பேதமில்லை. பக்தியில் மீராவின் முன்னோடி ஆண்டாள். கவிதை எண்ணத்தில் ரஸகானின் முன்னோடி குலசேகராழ்வார்.

எனவே…

வடக்கு வாழ்கிறது – தென்னகத்து பக்தி மார்க்கத்தில்!

தெற்கு தோய்கிறது – வடக்கே உதித்த ராம, கிருஷ்ண பக்தியில்!

Leave a Reply