style="text-align: center;">10ஆம் பத்து 10ஆம் திருமொழி
வெண்டுறை
1942
திருத்தாய் செம்போத்தே,
திருமாமகள் தன்கணவன்,
மருத்தார் தொல்புகழ் மாதவ னைவரத்
திருத்தாய் செம்போத்தே. 10.10.1
1943
கரையாய் காக்கைப்பிள்ளாய்,
கருமாமுகில் போல்நிறத்தன்,
உரையார் தொல்புக ழுத்தம னைவரக்,
கரையாய் காக்கைப்பிள்ளாய். 10.10.2
1944
கூவாய் பூங்குயிலே,
குளிர்மாரி தடுத்துகந்த,
மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக்,
கூவாய் பூங்குயிலே. 10.10.3
1945
கொட்டாய் பல்லிக்குட்டி,
குடமாடி யுலகளந்த,
மட்டார் பூங்குழல் மாதவ னைவரக்,
கொட்டாய் பல்லிக்குட்டி. 10.10.4
1946
சொல்லாய் பைங்கிளியே,
சுடராழி வலனுயர்த்த,
மல்லார் தோள்வட வேங்கட வன்வர,
சொல்லாய் பைங்கிளியே. 10.10.5
1947
கோழி கூவென்னுமால்,
தோழி. நானென்செய்கேன்,
ஆழி வண்ணர் வரும்பொழு தாயிற்று
கோழி கூவென்னுமால். 10.10.6
1948
காமற் கென்கடவேன்,
கருமாமுகில் வண்ணற்கல்லால்,
பூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக்,
காமற் கென்கடவேன். 10.10.7
1949
இங்கே போதுங்கொலோ,
இனவேல்நெடுங் கண்களிப்ப,
கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால்,
இங்கே போதுங்கொலோ. 10.10.8
1950
இன்னா ரென்றறியேன்,
அன்னே. ஆழியொடும்,
பொன்னார் சார்ங்க முடைய அடிகளை,
இன்னா ரென்றறியேன். 10.10.9
1951
தொண்டீர். பாடுமினோ,
சுரும்பார்ப்பொழில் மங்கையர்கோன்,
ஒண்டார் வேல்கலி யனொலி மாலைகள்,
தொண்டீர். பாடுமினோ (2) 10.10.10