இந்து மத சாத்திரங்கள் சொர்க்கம், நரகம், முக்தி என்ற மூன்று நிலைகளை ஜீவகோடிகளுக்குக் காட்டுகின்றன. “இறப்புக்குப் பின் புண்ணியவான்கள் சொர்க்கத்துக்கும், பாவிகள் நரகத்துக்கும், பாவ-புண்ணியமென்ற இரு வினைகளைக் கடந்த ஞானியர் முக்திக்கும் செல்வார்கள்’ என்று நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். ஆனால் இதில் நமது முனிவர்கள் போட்டுக் காட்டியுள்ள “தீர்மானக் கணக்கு’ வேறெந்த இடத்திலும் காண முடியாத நியாய பூர்வமான கணக்கு.
எந்த ஒரு மகாபாதகனும் பாவங்களை மட்டுமே செய்வதில்லை; சில புண்ணிய காரியங்களையும் செய்கின்றான். அதுபோல் புண்ணிய ஆத்மாக்களும் பாவக் கலப்பின்றி வாழ்ந்து மறைதல் கடினம். இது அனைவராலும் அறியப்பட்ட உண்மை. இந்நிலையில், பொத்தாம் பொதுவாக இன்னின்னார்க்கு நரகம், இவரிவர்க்கு சொர்க்கம் என்று பிரித்துத் தீர்ப்பிடுவது இயலாத காரியம். இந்தக் குழப்பத்துக்கு புராணங்கள் தெளிவான பதிலைத் தந்துள்ளன. “”பெரும்பாலான ஜீவன்கள் பாவ, புண்ணியங்களின் கலவையாகவே கர்மம் ஆற்றுகின்றன. இதற்கு “மிஸ்ர கர்மம்’ என்று பெயர். எனவே அனைத்து ஜீவன்களுமே தங்கள் பாவத்துக்கு ஏற்றபடி நரக தண்டனையையும், புண்ணிய பலன்களை சொர்க்கத்திலும் அனுபவித்தே ஆக வேண்டும். அதற்குப் பின் அவர்கள் தத்தமது வினைப் பயனுக்கேற்ப மறுபடியும் பிறவிச் சுழலில் தள்ளப்படுவார்கள்” என்கின்றன புராணங்கள்.
இங்கே ஒரு சந்தேகம் தோன்றலாம். “அதுதான் பாவத்தின் பலன்களை நரகத்திலும், புண்ணியத்துக்கான சுகங்களை சொர்க்கத்திலும் அனுபவித்தாயிற்றே? அப்போது இரண்டு வினைகளுமே தீர்ந்து போய்விடுமல்லவா? அந்த நிலையில் நரக, சொர்க்கங்களை அனுபவித்துவிட்ட ஜீவனை, முக்தி நிலைக்கு அனுப்புவதுதானே நியாயம்?’ என்ற கேள்வி புறப்படலாம்.
இதற்கும் நமது முனிவர்கள், ஏற்கத் தக்க பதிலை வைத்துள்ளனர். பாவம் என்பது வேறு! பாவம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் வேறு! அதேபோல் புண்ணியம் என்பதும் ஒரு செயலே! அதைச் செய்யத் தோன்றும் உந்துதல், உள்ளுணர்வினால் அமைவது. இதனை, “வாஸனை’ என்று வடமொழி கூறும். ஒரு மனிதன் உடலைத் துறக்கும்போது அவனது ஆத்மாவும்- அதனைப் பற்றியுள்ள “வாஸனை’யும் அழிவதில்லை. நரகத்திலோ, சொர்க்கத்திலோ ஆத்மாவோ, “வாஸனை’யின் இருப்பிடமான மனமோ அழிவதில்லை. அதனால் நரக – சொர்க்கங்களில் வினைகளுக்கேற்ப பிரத்யேக உடல் வழங்கப்பட்டு தண்டனையையோ சுகத்தையோ அனுபவிக்க வைக்கின்றனர் தேவர்கள். “வாஸனை’ தீராததால் மீண்டும் ஜீவகோடிகளை பூவுலகுக்கே திருப்பி அனுப்புகின்றனர்.
இந்த நியாயத்தை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். ஒரு திருடன் ஒரு குற்றத்தைச் செய்யும்போது, அதற்காக “இத்தனைக் காலம் சிறை வாசம்’ என்று நீதிபதி தீர்ப்பளிக்கின்றார். அந்தத் தண்டனைக் காலம் முடிவடைந்ததும் அந்தத் திருடன் விடுதலையாகின்றான். அவன் புத்திசாலியாக இருந்தால், “இனி மீண்டும் திருடி தண்டனை அனுபவிக்க மாட்டேன்’ என முடிவெடுப்பான். ஒரு வேளை அப்படிப்பட்ட புத்தி இல்லையென்றால் மீண்டும் திருடி மாட்டிக் கொள்வான். அதுபோலத்தான் நரக வாசமும். அங்கே செயலுக்கேற்ற தண்டனை மட்டுமே வழங்கப்படுமேயன்றி, மனதை மாற்றும் மந்திரங்கள் உபதேசிக்கப்படுவதில்லை. அவையெல்லாம் “கர்ம பூமி’யான பூவுலகில் மட்டுமே சாத்தியம். அதனால்தான் ஜீவகோடிகள் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் தள்ளப்படுகின்றன.
புண்ணியசாலிகள் விஷயமும் இதுவேதான். பல புண்ணியங்களைச் செய்தவரும், அயலறியாமல் சில பாவங்களைச் செய்திருக்கக்கூடும். இதுதான் இயற்கையின் நியதி. பின்னர் எப்போதுதான் முக்தி பெறுவது? அதற்கு ஒரே வழிதான் உண்டு.
“எப்போது ஒரு ஜீவன் புண்ணிய-பாவங்களைக் கடந்து ஞானத்தை அடைகின்றதோ, அப்போது அந்த ஜீவன் சொர்க்கமோ, நரகமோ செல்லாது! இறப்புக்குப் பின் முக்தி நிலையைப் பெற்றுவிடும்’ என்பதே முனிவர்களின் விளக்கம்.
“அது எப்படி̷ 0;? பாவம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் அவற்றை செய்யாதிருக்கலாம். புண்ணியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்?’ என்ற கேள்வி, இந்நிலையில் எல்லோர் மனதிலும் எழலாம். இதற்கான விடையும் எளிதில் விளங்கிக் கொள்ளத் தக்கதே!
இந்து மதம், புண்ணியங்களைச் செய்து குவிக்குமாறு தூண்டுகிறது. அதேநேரம், அந்தப் புண்ணிய பலன்களை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுமாறு உபதேசிக்கிறது. இதனால் பெறும் லாபங்கள் எவையெனில், நாம் செய்த சிறு புண்ணியங்களும் இறைவனுக்கு அர்ப்பணமாகும்போது பல மடங்காகப் பெருகுகின்றன. “நாம்தான் இதைச் செய்தோம்’ என்ற உணர்வு மக்கிப் போவதால், “ஆணவம்’ என்ற மாயை விலகுகிறது! (“தான சூரன்’ எனப் புகழ் பெற நினைத்த மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை வாமன அவதாரம் எடுத்து திருமால் அடக்கியது, அவனை ஆணவ மாயையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கருணையினால்தான்!) மேலும் புண்ணியங்களை, “ஈசுவரார்ப்பணம்’ என்று விட்டுவிடுவதால், அதன் பயனான சொர்க்கத்தை அனுபவிக்கும் நிலையைத் தாண்டி, பல கோடி சொர்க்க சுகத்தினும் மேம்பட்ட முக்தி நிலையும் கிடைத்துவிடும். இதுதான் சூட்சுமம்!
ஆனால், “புண்ணியங்கள் செய்தவர்களும், அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்திருக்க வாய்ப்புண்டே? அந்தப் பாவங்களை நரகம் புகாமல் எப்படித் தீர்த்துக் கொள்வது?’ என்ற ஐயம் எழலாம். அதற்கான விடையும் சுலபமே! எப்போது புண்ணிய கர்மாக்களை இறைவனுக்கு அர்ப்பணிக்க ஆரம்பிக்கின்றோமோ, அப்போதே பாவ கர்மங்களில் ஈடுபடும் உணர்வுகள் அழிய ஆரம்பித்துவிடும். அது மட்டுமின்றி, இறைவனின் மேல் பக்தி ஏற்பட்டு, அவனது திருநாமங்களை ஜபிப்பதிலும் -ஆலய தரிசனம் செய்வதிலும்- அடியார்களின் திருக்கூட்டத்தை நாடுவதிலும் மனம் ஈடுபட ஆரம்பித்துவிடும். “திரு நாம கீர்த்தனம்’ என ஒரு தர்மத்தை பற்றி நின்றுவிட்டாலே போதும்…. முந்தைய பல்லாயிரம் பிறவிகளில் செய்த பாவங்களே பொசுங்கிவிடும் என்றால், இந்தப் பிறவியில் செய்த பாவங்களா தீர்ந்துவிடாது? “பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே’ என்கிறார் அப்பர் சுவாமிகள். ஆக, விஷயம் எளிமையானது! புண்ணியச் செயல்களை இந்து மதம் வெகுவாக ஆதரிக்கிறது! ஆனால் அவற்றின் பயனை கடவுளுக்கு அர்ப்பணிக்கச் சொல்கிறது. இப்படிச் செய்தால் அந்த ஜீவனுக்கு பக்தியெனும் அழியாச் செல்வத்தை பகவான் அளிப்பான் என்றும் உபதேசிக்கிறது. இறைவனது திருநாம கீர்த்தனம் உள்ளிட்ட புண்ணியச் செயல்களால் பாவங்கள் நசித்துவிட, செய்த புண்ணியங்களும் இறைவனிடம் சேர்ந்துவிட, “இருவினை’ என்னும் மாயையினை அந்த ஜீவன் எளிதில் கடந்து, உடலை விட்டு உயிர் நீங்கும் கட்டத்தில் மோட்ச நிலையைப் பெற்றுவிடுகிறது.
இந்தப் பேரின்ப நிலையை அடையத்தான் பலவிதமான புண்ணியங்களை ஆற்றுமாறு நமது பெரியோர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் முக்கியமானது அன்னதானம். வறுமை நோயால் பீடிக்கப்பட்டு பசித்தவர்களுக்கும், உடலால் உழைத்து உண்ண முடியாதவர்களுக்கும், ஆதரவற்றோர்க்கும், குறிப்பாக இறையடியார்களுக்கும் செய்யப்படும் அன்னதானம் பெரும் புண்ணியச் செயலாகும். இதனால் ஏற்கெனவே நாம் செய்த பாவங்களும் தீரும். “அன்ன தானம்’ என்றால் நூற்றுக் கணக்கானவர்களுக்கோ, ஆயிரமாயிரம் பேருக்கோ சோறிட வேண்டுமென்பது இல்லை. உள்ளார்ந்த அன்போடு நமது வசதிக்கேற்ப ஒரு கைப்பிடி சோறோ- அரைக் குவளைக் கஞ்சியோ கொடுத்தாலும் அது உயர்ந்த தானமே! இதில் ஐயம் வேண்டாம்.
ஆனால் இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், “பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்பதைத்தான். “அன்ன தானம்’ என்று தம்பட்டம் அடித்து, தகுதியற்றவர்களுக்கு (மதுவருந்துபவர்கள், அங்கஹீனம் இல்லாதிருந்தும் உழைக்கப் பிடிக்காத சோம்பலுடையோர், சாப்பிட்ட தெம்பில் திருடப் போகிறவர்கள், இறைவனை ஏசுபவர்கள் போன்றோருக்கு) செய்கின்ற அன்னதானத்தினால் எந்தப் பயனும் இல்லை. தகுதியான மனிதர்களுக்கு பணிவோடு அன்னதானம் செய்தால் முழுப் பயனையும் பெறலாம். மனிதர்கள் என்றில்லை… எறும்புகளுக்கு சர்க்கரை இடுவது, காகம் உள்ளிட்ட பறவைகளுக்குச் சோறிடுவது, மாடுகளுக்கு தீவனம் அளிப்பது போன்றவையும் மனித குலத்துக்குச் செய்கின்ற அன்னதானத்துக்கு இணையானவையே!
புண்ணிய காரியங்களைச் செய்ய நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனினும் சில நற்காரியங்களைச் சில புண்ணிய தினங்களில் செய்வது சிறப்பென்று வகுத்துள்ளது இந்து தர்மம். அதற்கு சூட்சுமமான காரணத்தையும் வைத்துள்ளது. அவற்றிலொன்றுதான், சித்ரா பௌர்ணமியன்று அன்னதானம் செய்வது! (நாளது 17-ம் தேதி, சித்ரா பௌர்ணமி நன்னாள்).
அன்னதானத்துக்கு ஏன் “சித்ரா பௌர்ணமி’ திருநாளை தேர்ந்தெடுக்க வேண்டும்…? காரணம் உள்ளது. அது “சித்திரகுப்தன்’ என்ற தேவனின் பிறந்த நாள். “படங்களைச் சேகரிப்பவன்’ என்பது இப்பெயருக்கான நேரடிப் பொருள். விஷயம் என்னவெனில் நாம் செய்கிற பாவ, புண்ணியங்களைச் சித்திரங்கள்போல் மனதில் பதித்து வைத்துக் கொண்டு உடலை விட்டு உயிர் நீங்கிய பின் அவற்றை ஜீவனின் முன் பட்டியலிடும் பணியைச் செய்பவன் இந்தத் தேவன்.
சித்திரகுப்தன் வெளியிடும் தகவல்களுக்கேற்ப, அவனது தலைவனாகிய யமன், அந்த ஜீவனுக்கு தண்டனைகளை விதிப்பான்; ஏனைய யம கிங்கரர்கள் அவற்றை நிறைவேற்றுவார்கள். “சித்ரா பௌர்ணமி’ என்றாலே சித்திர குப்தனின் நினைவும், “பாவங்கள் செய்தால் நரக தண்டனை நிச்சயம்’ என்ற உணர்வும் அனைவர்க்கும் ஏற்பட்டுவிடும். அந்த நினைவில், பண்ணிய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக “அன்ன தானம்’ செய்ய வேண்டுமென்ற எண்ணமும் உருவாகும். அதற்காகத்தான் “சித்ரா பௌர்ணமி’ தினத்தை, “அன்ன தானத்துக்கு உகந்த நாள்’ என்று அறிவித்தனர் நமது மூதாதையர்கள்.
“ராஜ சேகரன்’ என்ற சோழ மன்னன், சித்ரா பௌர்ணமி தினத்தில் சிவனடியார்களுக்கு அன்னதானம் அளிக்க “பூதானம்’ செய்த விவரங்களை திருச்சி நெடுங்களத்திலும், மலைக்கோட்டையிலும் உள்ள கல்வெட்டுகளில் காணலாம். இது, அன்னதானத்துக்கும் சித்ரா பௌர்ணமிக்கும் உள்ள தொன்மைத் தொடர்பை உணர்த்துகின்ற சான்றுகளில் ஒன்றாகும்.
தனது குருவான பிரஹஸ்பதியை அவமதித்த பாவத்தை நீக்கிக்கொள்ள பூவுலகு வந்த தேவேந்திரன், சித்ரா பௌர்ணமி இரவில்தான் ஒரு கதம்ப வனத்தில் சொக்கலிங்க மூர்த்தியை தரிசனம் செய்தான். அந்தச் சிவலிங்கத்துக்கு பொற்றாமரையால் அர்ச்சனை செய்து, நிவேதனம் படைத்து, சிவ தியானத்தில் மூழ்கியிருந்ததால் அவனது பாவங்கள் நீங்கின; அவனது உடலும் முன்புபோல் பொன்னிறம் பெற்றது! இந்தத் தலமே தற்போது “மதுரை’ எனப்படுகிறது. ஆக அன்னதானத்தோடு, சிவ பூஜையையும் சித்ரா பௌர்ணமியன்று செய்வதால் மகா பாதகங்களும் தீரும் என்பது தெளிவாகிறது.
ஆனால் காலப் போக்கில் “சித்ரா பௌர்ணமி’ என்பது சுற்றமும் நட்பும் சேர்ந்து கொண்டு, விதம் விதமாகச் சமைத்து, கடற்கரை, ஆற்றங்கரையோரம், எதுவுமில்லையென்றால் வீட்டு மொட்டை மாடியில் “நமக்கு நாமே’ தின்று மகிழும்படி திரிந்துவிட்டது. இதையொட்டி புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு “சித்ரான்னம்’ என்று பெயரும் சூட்டிவிட்டோம்.
ஆனால் உண்மையான சித்ரா பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கும், அன்னதானத்துக்கும் உரியது. அதற்கான வாய்ப்பை நமக்கு உருவாக்கித் தருவதற்காகவே சித்ரா பௌர்ணமியை ஒட்டி பல ஆலயங்களில் திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. இப்புண்ணிய நாளின் பொருளை உணர்ந்து அன்னதானத்திலும், இறைவனது திருநாம கீர்த்தனத்திலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டால் சித்திரகுப்தன் முன் கை கட்டி நிற்கும் நிலைமையே நமக்கு ஏற்படாது. எதற்குக் கை கட்டுவானேன்? மாறாக, “சிவ, சிவ’ என்று கை தட்டிப் பாடிக்கொண்டே சிவலோகம் சேர வழி பார்ப்போமே! நாம் சிறிது முயற்சித்தாலும் போதும்! “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலவன்’ ஆதரவுக் கரம் நீட்டாமலா போய்விடுவான்?
கட்டுரை : தினமணி – வெள்ளிமணி