திருப்புகழ் கதைகள்: இருப்பவல் திருப்புகழ் – திருத்தணிகை!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 355
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இருப்பவல் திருப்புகழ் – திருத்தணிகை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி ஐம்பத்தைந்தாவது திருப்புகழான “இருப்பவல் திருப்புகழ்” எனத் தொடங்கும் திருப்புகழ் திருத்தணிகை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருத்தணிகை வேலா, மயக்கும் மாதரைப் போற்றாமல், திருப்புகழ் ஓதும் அடியாரைப் போற்ற அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்

     இடுக்கினை யறுத்திடு …… மெனவோதும்

இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட

     னிலக்கண இலக்கிய …… கவிநாலுந்

தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக

     தலத்தினில் நவிற்றுத …… லறியாதே

தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு

     சமர்த்திகள் மயக்கினில் …… விழலாமோ

கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்

     களிப்புட னொளித்தெய்த …… மதவேளைக்

கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு

     கனற்கணி லெரித்தவர் …… கயிலாயப்

பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு

     புறத்தினை யளித்தவர் …… தருசேயே 

புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி

     பொருப்பினில் விருப்புறு …… பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – கரும்பு வில்லை வளைத்து அழகிய மலர்க் கணைகளைத் தொடுத்து இயல்பாகவுள்ள செருக்குடன் ஒளிந்திருந்து எய்த வலிய மன்மதனை நெற்றியில் உள்ள நெருப்புக் கண்களால் நினைத்த மாத்திரத்தில் நெருப்பினால் வேகுமாறு எரித்தவரும், கயிலாய மலையில் வீற்றிருப்பவரும், இமாசலத்தில் வளர்ந்த உமாதேவியாருக்கு இடப்பாகந் தந்தவருமாகிய சிவபெருமான் பெற்ற இளம் பாலகரே; மேகந் தவழும் சோலைகளும், வயல்களும், ஊர்களும் இனிது செழித்துள்ள திருத்தணிகை மலை மீது விருப்புடன் உறையும் பெருமிதம் உடையவரே;

     இருப்பாக இருந்து உதவுகின்ற அவல் போன்ற திருப்புகழானது அன்புடன் ஓதுகின்ற அடியார்களது துன்பங்களை நீக்குகின்றது என்ற உண்மையை எடுத்துக் கூறுகின்ற இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ்களை இலக்கண இலக்கியத்துடன் நான்கு கவிகளால் அன்புடன் உள்ளத்தில் தரிப்பவர்களும், வாக்கால் பாடுபவர்களும், மனத்தால் நினைப்பவர்களுமாகிய அன்பர்களை இவ்வுலகில் பாராட்டிப் புகழ்வதை அறியாதபடி, தனத்தாலும் முகத்தாலும் மயக்கி உள்ளத்தை உருக்குகின்ற ஆற்றல் படைத்த பொதுமாதர்களின் மயக்கமாகிய படுகுழியில் அடியேன் விழலாமோ? (விழக்கூடாது) – என்பதாகும்.

     இத்திருப்புகழின் முதல் வரியில் வரும் இருப்பவல் திருப்புகழ் அவல் போல திருப்புகழ் உதவும் எனக் கூறுகிறது. பயணம் செல்பவர்கள் கையோடு அவல் கொண்டு செல்வார்கள். அதனால் அதற்கு யாத்திரைத் தர்ப்பணம் என்று பேர் அமைந்தது. பசி வந்தபோது அவலை நனைத்து, பாலும் சீனியும் கலந்து, அல்லது சிறிது உப்பும் எலுமிச்சம் பழ ரசமும் கலந்தும் பல்வேறு வகையில் பக்குவம் செய்தும் உண்டு பசி ஆறலாம். வழிக்கு மிக மிகப் பயனுடையதாக இருந்து உதவுவது அவல். இதுபோல் திருப்புகழ் ஆவி பிரிந்து போகும் அத்தொலையாத தனி வழிக்குத் துணையாக இருந்து உதவும். அதனால் இருப்பவல் திருப்புகழ் என்று அருளிச் செய்தார்.

     இது தவிர மன்மதனை சிவபெருமான் எரித்த கதையும், பார்வதி தேவிக்கு சிவபிரான் இடப்பாகம் அளித்துச் சிறப்பித்த கதையும், முத்தமிழ் இலக்கணம், ஆசு முடல் நாற்கவி பற்றிய குறிப்புகள் இத்திருப்புகழில் உள்ளன. நாற்கவி என்பது பாடப்படும் முறைமையால் நான்கு வகைப்படும் கவிதைகள். பகழிக்கூத்தர் இவற்றை முருகன் தனக்குத் தந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்த நான்கு வகையிலும் பாடவல்ல கவிஞரை இவர் ‘பெரும்பனுவர்’ என்று குறிப்பிடுகிறார். பனுவல் என்னும் சொல் நூலைக் குறிக்கும்.

     ஆசுகவி என்பது மற்றவர் சொல்லும் ஆசுகளை வைத்துக்கொண்டு உடனே பாடும் கவிதை. 15ஆம் நூற்றாண்டில் காளமேகப்புலவர் இவ்வாறு பாடும் திறமை பெற்றிருந்தார். மதுரகவி என்பது காதுக்கும் கருத்துக்கும் இனிமையாகப் பாடப்படும் கவிதை. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிமதுர கவிராயர் இந்தக் கவிதை பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். சித்திரக் கவி என்பது ஓவியத்துக்குள் உள்ளடக்கிப் பாடும் கவிதை. வித்தார கவி என்பது மெய்யைப் பொய்யாக்கியும், பொய்யை மெய்யாக்கியும் பாடும் பாடல்.

     நம்பியகப்பொருள் என்னும் இலக்கணநூல் செய்த நாற்கவிராச நம்பி, நாலுகவிப் பெருமாள் எனப் போற்றப்படும் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் நான்கு வகையான கவிகள் பாடுவதில் வல்லவர்கள். ஆசுகவி பாடவல்ல புலவர்கள் வெளியே பொதுப்பணி நிமித்தமாகச் செல்லும்போது திண்டிமம் என்னும் பறையை முழக்கிக்கொண்டு செல்லும் உரிமை பெற்றிருந்தார்கள்.      இந்த நாற்கவிகள் பற்றி விவரமாக நாளை காணலாம்.  

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply