திருப்புகழ் கதைகள்: கறுத்த தலை – திருவேங்கடம்

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பாகம் 335
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கறுத்த தலை – திருவேங்கடம்
மத்ஸ்யாவதாரம் 2

வைவஸ்வத மனு, என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் 14 மனுக்களில் ஏழவாது மனு ஆவார். தற்போது இவருடைய மன்வந்தரம் நடைபெறுகிறது. இவர் இந்துத் தொன்மவியலின் படி, பிரளத்தின் போது பெருங்கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த வைவஸ்வத மனுவையும், சப்தரிஷிகளையும் விஷ்ணு மச்ச அவதாரம் காத்து, மீண்டும் பூமியில் மனித குலம் தழைக்க உதவினார். விஷ்ணு வரப்போகும் பிரளயம் குறித்து சப்தரிஷிகளுக்கு எச்சரித்தார். எனவே அத்ரி, வசிட்டர், காசிபர், கௌதமர், பரத்துவாசர், விசுவாமித்திரர் மற்றும் ஜமதக்கினி எனும் சப்தரிஷிகள் தங்களது குடும்பத்துடன், வைவஸ்வத மனுவின் குடும்பத்தினருடன் ஒரு பெரும் படகில் ஏறி கடலில் பாதுகாப்பாகச் சென்று, ஒரு பெரும் மலையின் உச்சிக்குச் சென்றனர். அங்கு தத்தளித்துக் கொண்டிருந்த வைவஸ்வத மனு மற்றும் சப்த ரிஷிகளையும், விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்துக் காத்தார். புராணங்களின் படி வைவஸ்தமனுவின் முன்னோர்கள் வருமாறு: (1) பிரம்மா, (2) சுவாயம்பு மனு, 14 மனுக்களில் முதலாமவர், (3) மரீசி, பிரம்மாவால் படைக்கப்பட்ட 10 பிரஜாபதிகளில் ஒருவர், (4) காசிபர், மரீசியின் மகன், (5) விவஸ்வான், காசிபர் - அதிதி இணையரின் மகன், (6) வைவஸ்தமனு, விவஸ்வான் – சரண்யு இணையரின் மகன். வைவஸ்தமனுவை சத்தியவிரதன் அல்லது சிரத்தாதேவன் என்றும் அழைப்பர். மத்ஸ்ய புராணத்தின் படி, வைவஸ்தமனு திராவிட நாட்டு மன்னராக இருந்தார். ஒரு முறை மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆற்றில் வைவஸ்தமனு எனும் சிரத்தாதேவன் (சிரத்தை உள்ளவன்) கைகளை ஆற்று நீரில் கழுவும் போது, திருமால் சிறு மீன் வடிவில் காட்சியளித்தார். அச்சிறு மீன் தன்னை வளர்த்துக் காக்கக் கோரியது. வைவஸ்தமனுவும், அச்சிறு மீனை சிறு தொட்டியில் வளர்த்தார். மீன் பெரிதாக வளர, வளர அதை கிணற்றிலும், பின் குளத்திலும் வளர்த்தார். பின்னர் மேலும் பெரியதாக மீன் வளர அதை ஒரு பெரும் ஏரியில் வளர்த்தார். அம்மீன் மேலும் பெரிதாக வளர பெரிய ஆற்றிலும், பின்னர் பெருங் கடலில் விட்டார். அப்பெரும் மீன் வடிவில் இருந்த திருமால், தன்னை வைவஸ்தமனுவிற்கு வெளிப்படுத்தி, பூலகின் அனைத்து சீவராசிகளையும் அழிக்கும்படியான பெரும் பிரளயம் வரப்போவதைக் குறித்து எச்சரிக்கை செய்தார். பிரளயத்திற்கு பின்னர் சீவராசிகளின் வழித்தோன்றல்களை தொடர்ந்து காப்பதற்கு, மன்னர் வைவஸ்தமனு பெரும் படகினை கட்டி, அதில் தனது குடும்பத்தினர், சப்த ரிஷிகளின் குடும்பத்தினர், ஒன்பது வகையான விதைகள், மற்றும் விலங்குகளை படகில் ஏற்றினார். மீன் அவதாரம் எடுத்த திருமால் ஆதிசேஷனை கயிறாகக் கொண்டு, படகினை கட்டி இழுத்துக் கொண்டு மலையாள மலையின் உச்சிக்கு இழுத்துக் கொண்டு சென்று பிரளய நீரிலிருந்து காத்தார். பிரளயத்தின் முடிவில், வைவஸ்தமனுவின் குடும்பத்தினர், சப்த ரிஷிகளின் குடும்பத்தினர், மரம், செடி, கொடிகளின் விதைகள் மற்றும் விலங்குகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, பூவுலகில் தங்கள் தங்கள் இனத்தைப் பெருக்கியது. இப்பிரளய நிகழ்வு தற்போதைய 7வது மன்வந்திரத்தின் 28 சதுர்யுகத்தின் முன்னர் (120 மில்லியன் ஆண்டுகள்) நடைபெற்றதாக இந்து சமய தொன்ம சாத்திரங்களான புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வைவஸ்வதமனு – சிரத்தாதேவி இணையருக்கு பத்து குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒரே பெண் குழந்தை இலா ஆவார். வைவஸ்தமனுவின் மூலம் சூரிய வம்சத்தினர் மற்றும் சந்திர வம்சத்தினர் எனும் பல அரச குலங்களாகக் கிளைத்தது. மகாபாரத இதிகாசத்தின் படி, வைவஸ்தமனுவே பூவலகின் அனைத்து மானிட சமூகங்களுக்கு மூதாதையாவர். எனவே மனுவின் பெயரால் ஆண்களை மனுசன் என்றும், பெண்களை மனுஷி என்றும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் வைவஸ்தமனு நால்வகை வர்ண தர்மங்களைத் தோற்றுவித்தார். மனுவிற்கு பிறந்த பத்து குழந்தைகளில் வேணன், திருஷ்னு, நரிஷியன், நபாகன், இச்வாகு, கருஷன், சர்யாதி, பிருஷாத்திரு, நபாகரிஷ்டன் எனும் ஒன்பது ஆண்களும் மற்றும் இலா எனும் ஒரு பெண்னும் ஆவார். ஆண் குழுந்தைகள் அனைவரும் சத்திரியர்களாக இருந்து பூவலகினை ஆண்டனர். இலா, சந்திர தேவரின் மகனான புதனை மணந்து கொண்டார். பின்னர் மனுவிற்கு பிறந்த ஐம்பது குழந்தைகள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு வாழ்ந்தனர். வைவஸ்தமனு பூவுலகின் அனைத்து வகை சமூக மக்கள் வாழும் நெறிகள் குறித்து சாத்திரம் ஒன்றை தொகுத்து வழங்கினார். பெருமாளின் பத்து அவதாரங்களில் இந்த முதல் அவதாரமான மச்ச அவதாரமாக இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலம், ஆந்திராவில் உள்ள நாகலாபுரம் தலமாகும். இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் பற்றி நாளை காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply