திருப்புகழ் கதைகள்: ஒருபதும் இருபதும் – திருமலை!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி 332
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஒருபதும் இருபதும் – திருமலை

அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி நாற்பத்தி ஐந்தாவது திருப்புகழான “ஒருபதும் இருபதும்” எனத் தொடங்கும் திருப்புகழ் திருமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருப்பருப்பத முருகா, உன் திருவடி அருள்வாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

ஒருபது மிருபது மறுபது முடனறு
முணர்வுற இருபத …… முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
வெளியொடு வொளிபெற …… விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
திரிதொழி லவமது …… புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் …… புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை …… பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி …… யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
பிணிகெட அருள்தரு …… குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை …… பெருமாளே.

இதிருப்புகழின் பொருளாவது – அன்புடன் இனிய பழங்கள், கடலை, தேன், பயறு சிலவகையான பணியாரங்கள் இவைகளை உண்ணுகின்ற பெருவயிற்றினை உடையவரும், பழமொழியான மகாபாரதத்தை எழுதியவருமாகிய கணபதியின் தம்பியே; பெரிய கிரவுஞ்சமலை ஊடுருவவும், அடியார்கள் உள்ளம் உருகவும், அவர்கள் பிறவிப் பிணி நீங்கவும் அருள் செய்கின்ற குமாரக் கடவுளே; பெண் யானையுடன் ஆண் யானைகள் உலாவவும், ஆண் மான்களுடன் பெண்மான்கள் விரும்பவும் விளங்குகின்ற, திருப்பருப்பதத்தில் வாழும் பெருமிதம் உடையவரே; தொண்ணூற்றாறு தத்துவங்களின் உண்மையை யுணர்ந்து, தேவரீருடைய திருவடியை உள்ளத்தில் தியானித்து உள்ளம் உருகவும், முழு நிலாவின் ஒளிபோல் திகழும் பரவெளியின் அருள் ஒளியைப் பெறவும் விரும்பாமல், வீதியில் மரம்போல் நின்றும் கண்டவருடன் பேசித் திரியும் பயனற்ற தொழிலைச் செய்யாமல் இலக்குமி தேவியின் புதல்வியாகிய வள்ளிபிராட்டி தழுவுகின்ற திரண்ட புயாசலங்களையுடையவரே; ஆறுமுகப் பெருமானே, உமது தரிசனத்தை அடியேன் பெறுமாறு திருவருள் புரியவேணும் – என்பதாகும்.

இத்திருப்புகழில் அருணகிரிநாதர், ஒருபதும் இருபதுமு அறுபதும் உடனுஅறும் உணர்வுற என்ற வரியில் ஒருபது, இருபது, அறுபது, ஆறு (10+20+60+6), அதாவது 96 தத்துவங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். 96 தத்துவங்களாவன – ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. ஆக 36. மண் நீர் தீ காற்று வெளி என்ற ஐம்பூதங்களின் தன்மைகள் ஐயைந்து 25, வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4 ஆக 60 ஆக மொத்தம் 96. பழமொழி எழுதிய கணபதி என்ற வரியில் அருணகிரியார் மகாபாரதம் பற்றிய குறிப்பு ஒன்றினைத் தருகிறார். இங்கே பழமொழி என்பது மகாபாரதம் ஆகும். .

வியாச முனிவர் பாட உலகம் உய்யும் பொருட்டு விநாயகமூர்த்தி வடமேருகிரியில் தமது கோட்டினால் இதனை எழுதியருளினார். முத்தமிழ் அடைவினை முற்பட கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே என முதல் திருப்புகழான கைத்தலநிறைகனி பாடலில் அருணகிரியார் குறிப்பிட்டிருக்கிறார். இதனை மகாபாரதம் எனக் கொள்வாரும் உள்ளனர். மற்றொரு திருப்புகழில்,

இலகுகடலைகற் கண்டு தேனொடும்
இரதமுறு நினைப் பிண்டி பாகுடன்
இனிமையி னுகருற் றெம்பிரா னொரு கொம்பினலே
எழுதென மொழியப் பண்டுபாரதம்
வடகன சிகரச் சொம்பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று

எனவும் அருணகிரியார் பாடியுள்ளார். வியாச பகவான் சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதினார் என்பது புராணக் கதை. இதனை எழுதுவதற்கு விநாயகர் வியாசருக்கு ஒரு நிபந்தனை விதித்தார். வியாசரும் விநாயகருக்கு ஒரு நிபந்தனை விதித்தார். என்ன அந்த நிபந்தனைகள்? நாளை காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply