திருப்புகழ் கதைகள்: பல காதல் பெற்றிடவும்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி 312
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பல காதல் பெற்றிடவும் – சுவாமி மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி இருபத்தி ஏழாவது திருப்புகழான “பல காதல் பெற்றிடவும்” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, மாதர் பொய் இன்பம் ஆகாது. எனவே உன் திருவடி இன்பத்தை அருள்வாய்” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு

     பலனேபெ றப்பரவு …… கயவாலே

பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்

     பதறாமல் வெட்கமறு …… வகைகூறி

விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்

     வினையேமி குத்தவர்கள் …… தொழிலாலே

விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்

     விலைமாதர் பொய்க்கலவி …… யினிதாமோ

மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்

     வடமேரெ னத்தரையில் …… விழவேதான்

வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு

     மருகாக டப்பமல …… ரணிமார்பா

சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்

     செவியார வைத்தருளு …… முருகோனே

சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்

     திருவேர கத்தில்வரு …… பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – கயிலாய மலையை எடுத்தவனும், ஒப்பற்ற வாளை ஏந்தியவனவனுமான இராவணனுடைய உடல் வட மேருமலை போல் மண்ணில் விழும்படி, தக்க வகையில் விடுத்த கணையையுடைய ஸ்ரீராமர் உள்ளம் மகிழும் திருமருகரே; கடப்ப மலர் மாலை புனைந்த திருமார்பினரே; சில நூல்களே கற்றுணர்ந்த புலவர்கள் பாடிய பாடலைச் செவியாரக் கேட்டு அருள்புரியும் முருகக்கடவுளே;          சிவபெருமானுக்கு உரியதான உபதேசப் பொருளாம் பிரணவ மந்திரத்தையருளிய திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே; விலைமகளிரது பொய்யான இன்பம் இனிமையாகுமோ? ஆகாது. உன் திருவடி இன்பமே பேரின்பமாகும் – என்பதாகும்.

     இத்திருப்புகழில் இடம்பெறும் மலையே எடுத்தருளும் ஒரு வாள் அரக்கன் என்ற வரியில் தசக்ரீவன் எனப்படும் இராவணன் கயிலை மலையைத் தூக்க முயன்ற கதையை அருணகிரியார் கூறுகிறார். தசக்ரீவன் ஒருநாள் புஷ்பக விமானத்தில் ஏறி வடதிசை நோக்கிச் சென்றான். திருக்கயிலாய மலைக்கு நேரே சென்றபோது அவனது விமானம் தடைபட்டு நின்றது. தசக்ரீவன் விமானத்தைப் பலமுறை செலுத்தினான். அது அசையவில்லை.

     கயிலைமலைக் காவல் பூண்டுள்ள திரு நந்திதேவர், “அடே தசக்ரீவா, இது நெற்றிக் கண் கொண்ட எம்பெருமான் எழுந்தருளியுள்ள கயிலாயமலை. இதனை நவகோள்களும் வலம் வருகின்றன. இதற்குமேல் செல்வது பாவம். ஆகவே நீ வலமாகப் போ” என்று கூறினார். இளமைச் செருக்குடைய இராவணன் “குரங்கு போல் முகமுடைய மாடே! நீ எனக்குப் புத்தி புகல்கின்றனையா? உன்னையும் இம்மலையையும் பேர்த்து எறிவேன்” என்று கூறினான்.

     திருநந்திதேவர், “மூடனே, உனக்கு அறிவுரை கூறினால் என்னைக் குரங்கு முகம் என்று இகழ்கின்றாயா? குரங்கினால் உன் நாடு நகரம் அழியக் கடவது” என்று சாபம் இட்டார். இதனைக் கேட்ட தசக்ரீவன் வெகுண்டு, விமானத்தைவிட்டு இறங்கி, கைலாய மலையைப் பெயர்த்துத் தோள் மீது வைத்துக் குலுக்கினான்.

     அது சமயம் மலைக்குமேல் அமர்ந்துள்ள சுவாமியை அம்பிகை,

“சுவாமி, அகில உலகங்களும் சக்தியால் தானே நடைபெறுகின்றது?” என்று கேட்டார்கள். சுவாமி, “ஆம்” என்றார். அம்பிகை, “எம்பெருமானே! எல்லாம் சிவமயம் என்றுதான் வேதம் புகல்கிறது. ஆனால் நீங்கள் மட்டும் இப்படி என்னை உயர்த்திக் கூறுகின்றீர்” என்று சிறிது ஊடினார்கள். இவ்வாறு உமாதேவியார் ஊடல் கொண்டிருக்கும் அதே சமயம் மலை குலுங்கியது. ஊடலால் சற்று விலகியிருந்த தேவி மலை குலுங்குவதால் மனம் கலங்கி இறைவனைத் தழுவிக்கொண்டார். இராவணன் மலையெடுத்த செயல் இறைவனுக்கு உமையவள் ஊடல் தீர்த்து நன்மை செய்தது.

     “தேவி, அஞ்சற்க” என்று கூறி இறைவர் ஊன்றிய திருவடியின் பெருவிரலின் நக நுனியை ஊன்றிச் சிறிது அழுத்தினார். மலைக்கடியில் அகப்பட்டு உடம்பு நெரிந்து, தோள் முறிந்து, “ஓ” என்று தசக்ரீவன் கதறினான். ஆயிரம் ஆண்டுகள் கதறியழுதான். அதனால் இராவணன் என்ற பெயர் உண்டாயிற்று. இராவணன் என்ற சொல்லுக்கு ரோதனம் புரிந்தவன் என்று பொருள்.

     பின்னர் இராவணன் இறைவனை இன்னிசையால், சாம கானத்தால், காம்போதி இராகத்தால் இனிது பாடினான். பாடலைக் கேட்டுப் பெருமான் அவனுக்கு அருள்புரிந்து, சந்திரஹாசம் என்ற வாளும் வாழ்நாளும் வழங்கியனுப்பினார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply