திருப்புகழ் கதைகள்: கடிமாமலர்க்குள்!

ஆன்மிக கட்டுரைகள்

திருப்புகழ்க் கதைகள் 284
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கடி மாமலர்க்குள் – சுவாமி மலை

            கடம்ப மரம் என்றதுமே முருகன் நினைவு தான் வரும். கடம்ப மாலை, கடப்ப மாலை அணிந்திருப்பவன் முருகன் என்பது பழைய இலக்கியங்களிலும் அண்மைக்கால இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. கடம்ப மரம் அம்பிகையோடும் தொடர்புடையது என்பது அபிராமி அந்தாதியில் பல இடங்களில் அன்னை கடம்பு அணிந்தவளாகப் புகழப்படுகிறாள். நான்மாடக்கூடலாம் மதுரையம்பதிக்கு இருக்கும் பல பெயர்களில் கடம்பவனம் என்பதும் ஒரு பெயர். அந்தப் பெயர் கொண்டு மீனாட்சி அம்மையைப் போற்றும் பாடல்களும் இருக்கின்றன.

            திரு. முத்துக் கறுப்பண்ணன் எழுதிய பழனியாண்டவன் காவடிச் சிந்து என்ற நூலில் கந்தனைக் கடம்பன் என்று அழைக்கிறார். கந்தா, கடம்பா, கதிர்வேலா என்று அவனை வணங்குவது பொது மக்கள் நடுவிலும் பெரும்பான்மையாக உள்ளது.

படியெழும் புகழ் இடும்பன் – தினம்

பணியும் மலர்க் கடம்பன்

அடியார் வினை பொடி – செய்திடும்

மானப் புகழ் குமரன்

என எளிய தமிழில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

            ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தர் அலங்காரம், வேல் – மயில் – சேவல் விருத்தம் போன்ற நூற்களிலும் பல இடங்களில் கந்தனைக் கடம்பனைப் பாடியிருக்கிறார். எடுத்துக்காட்டாக கந்தர் அலங்காரம், 19ஆம் பாடலில்

சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்

மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மௌனத்தையுற்று

நின்னை உணர்ந்து உணர எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு

என்னை மறந்திருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே.

என அருணகிரியார் பாடுகிறார். கந்தர் அலங்காரம், 38ஆவது பாடலில்

நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த

கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு

தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்

தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

குமரேசரின் இரு திருவடிகளும் அவற்றில் அணிந்த சிலம்பும் சதங்கையும் தண்டையும், ஆறுமுகங்களும், பன்னிரு தோள்களும் அவற்றில் அணிந்த கடம்பமாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றிவிட்டால் – நல்ல நாள் கெட்ட நாள் தான் என்னை என்ன செய்யும்? நான் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் தான் என்னை என்ன செய்யும்? வினைப்பயன்களை அளிக்க எனை நாடி வந்த ஒன்பது கோள்களும் என்ன செய்யும்? என் உயிரை எடுக்க வரும் கொடிய கூற்றும் என்ன செய்யும்? அவன் அருளால் இவற்றை எல்லாம் வெல்லுவேன் என்று அவர் பாடுவார். இங்கேயும் கடப்ப மலர் இடம் பெறுகிறது.

            கந்தர் அலங்காரம் 40ஆவது பாடலைப் படிக்கும்போது உங்களுக்கு கர்ணன் திரைப்படத்தில் வரும் நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் என்ற விருத்தம் (திருச்சி லோகநாதன் பாடியது) நினைவுக்கு வரும்.

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்

மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்

வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.

திருச்செந்தூர் அருகில் இருக்கும் வயல்களில் நீர்வளம் மிகுந்து இருப்பதால் வயல்களில் நிறைய மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அந்த மீன்கள் துள்ளித் துள்ளி விளையாடுவதால் செந்தூர் வயற்பொழில்கள் சேறாகிவிட்டன. முருகனின் தோளில் இருக்கும் தேனைச் சொரியும் கடம்ப மாலையின் மயக்கத்தில் (அவன் தோளைத் தழுவி அந்த மாலைகளின் மணத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில்) பூங்கொடியார் மனம் துவண்டது. மாமயில் ஊர்தியைக் கொண்டவன் வேலால் கடலும் கடல் நடுவே மாமரமாய் நின்ற சூரனும் கிரௌஞ்ச மலையும் அழிந்தார்கள். அவனுடைய திருவடிகள் பட்டதால் என் தலை மேல் பிரமன் எழுதிய தலையெழுத்து அழிந்தது.

            கந்தர் அலங்காரத்தின் 62ஆம் பாடல் எந்தெந்தக் கடவுளருக்கு என்ன மாலை பிடிக்கும் என்று அருணகிரியார் கூறுகிறார்.

ஆலுக்கு அணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட

மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய் மயில் ஏறும் ஐயன்

காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும் கையில்

வேலுக்கு அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே.

ஆலமுண்ட சிவபெருமானுக்கு அணிகலம் வெண் தலை மாலை. உலகங்களை எல்லாம் உண்ட திருமாலுக்கு அணிகலம் குளிர்ந்த துளசி. மயில் ஏறும் எங்கள் ஐயனின் காலுக்கு அணிகலன் வானவர்கள் திருமுடியும் கடம்ப மாலையும். அவன் கையில் இருக்கும் வேலுக்கு அணிகலம் அந்த வேல் அழித்த கடலும் சூரனும் கிரௌஞ்ச மலையுமே.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply