திருப்புகழ் கதைகள்: ஆனாத பிருதிவி!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 265
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆனாத பிருதிவி – சுவாமி மலை

அருணகிரிநாதர் அருளிசெய்துள்ள இருநூற்றி மூன்றாவது திருப்புகழான “ஆனாத பிருதிவி” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமி நாதா, சிவத்துடன் ஒன்றுபடும் வாழ்வினை அருள்வாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
மாமாய விருளுமற் றேகி பவமென
வாகாச பரமசிற் சோதி பரையைய …… டைந்துளாமே

ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
யோகீச ரெவருமெட் டாத பரதுரி
யாதீத மகளமெப் போது முதயம …… நந்தமோகம்

வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
மாலீச ரெனுமவற் கேது விபுலம …… சங்கையால்நீள்

மாளாத தனிசமுற் றாய தரியநி
ராதார முலைவில்சற் சோதி நிருபமு
மாறாத சுகவெளத் தாணு வுடனினி …..தென்றுசேர்வேன்

நானாவி தகருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி….லங்கைசாய

நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
சீராமன் மருகமைக் காவில் பரிமள
நாவீசு வயலியக் கீசர் குமரக …… டம்பவேலா

கானாளு மெயினர்தற் சாதி வளர்குற
மானொடு மகிழ்கருத் தாகி மருடரு
காதாடு முனதுகட் பாண மெனதுடை …நெஞ்சுபாய்தல்

காணாது மமதைவிட் டாவி யுயவருள்
பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ
காவேரி வடகரைச் சாமி மலையுறை …… தம்பிரானே.

இத்திருப்புகழின் பொருளாவது – பலவகையான கத்தி, வில், தண்டு முதலிய ஆயுதங்களைத் தாங்கிய சேனைகள் விதம் விதமாகச் சூழ்ந்துவர, புகழ்பெற்ற வீரர்களுடன் பெரிய கப்பல்கள் செல்கின்ற சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து அக்கரை சென்று, இலங்கையின் உயர் நிலையைத் தொலைத்து, பத்து மணி மகுடங்களையுடைய பாவியாகிய, இராவணனை வதைத்த ஸ்ரீராமருடைய திருமருகரே;

இருண்ட சோலையில் நறுமணம் வீசுகின்ற வயலூரில் எழுந்தருளியுள்ள அக்கினீஸ்வரரின் திருக்குமாரரே; கடப்பமலர் தரித்த வேலாயுதரே; கானகத்தை ஆளும் வேடர் குலத்தில் வளர்ந்த குறமகளாகிய வள்ளிப் பிராட்டியுடன் மகிழ்கின்ற எண்ணம் உடையவராய், ‘மயக்கத்தைத் தருவதும், காது வரை நீண்டதுமான உன் கண்ணாகிய கணை என் மனத்தில் பாய்வதை நீ பார்க்க வில்லையா? செருக்கினை விடுத்து என் உயிர் உய்ய அருளுவாய்‘ என்று அம் மாதரசியிடம் பேசிய அன்புடைய இளம் பூரணரே; காவிரிக்கு வடகரையில் உள்ள சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள தனிப்பெருந் தலைவரே;

நீங்குதற்கு அரிய மண்ணாசையென்ற விலங்கும், பெரிய மயக்கத்தைச் செய்யும் ஆணவ இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட தன்மையென்று கூறுமாறு ஆகாயம்போல் பரந்து பெரிய ஞானசோதியான பராசக்தியை அடைந்து, நினைவு இன்றி நிலைத்து நின்று, முப்பத்தாறு தத்துவங்கட்கு அப்பாற்பட்டதாய், முற்பட்டதாய் என்றும் யோகீசர் எவரும் எட்டாததான பெரிய துரியங் கடந்ததாய், உருவமில்லாததாய், எப்போதும் தோற்றம் அளிப்பதாய், அளவற்ற அன்பைத் தருவதாய், விண் முதலிய சகல வாழ்வுப் பொருளாய், உலகத்தின் முதலும் முடிவுமாய், உண்மை அறிவாய், அயன் அரி அரன் என்ற மூவர்க்கும் மூலகாரணமாய், ஐயம் இன்றி நீண்டு அழிவின்றி தானே மெய்யாந் தன்மையதாய், அரியதாய் ஆதாரம் இன்றி நிற்பதாய், அழிவில்லாத சோதியாய், வடிவம் இன்றி மாறுதலின்றி நிற்பதாய் விளங்கும் இன்ப வெள்ளமாம் சிவத்துடன் அடியேன் இனிது என்று சேர்வேன்.

இப்பாடலில் அருணகிரியார் பல கடினாமான, பிற மொழிச் சொற்களைப் புனைந்துள்ளார். அவையென்ன, அவற்றால் பாடலின் சுவை எவ்வாறு கூடுகிறது என்பதை நாளை காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply