திருப்புகழ் கதைகள்: மூலமந்திரம் (பழநி)

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் – பகுதி- 261
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

மூலமந்திரம் – பழநி – சரவணபவ

அருணகிரியார் மூலமந்திரம் ஓதல் இங்கு இலை என்ற வரியில் முருகப் பெருமானுடைய மந்திரங்களுள் மூலமந்திரமாகிய ஆறெழுத்தை உரைப்பவர்களுடைய வல்வினை மாயும்; தொல்லை வினை தேயும்; பிறவிப் பெரும்பிணி நீங்கும்; இம்மை நலமும் மறுமையின்பமும் உண்டாகும். ஆனால் நான் அதனை உரைப்பதில்லை எனச் சொல்லுகிறார். அவரே வசனமிக ஏற்றி எனத் தொடங்கும் வேறு ஒரு திருப்புகழில்

இசைபயில் சடாட்ச ரம்அதாலே
இகபர சௌபாக்யம் அருள்வாயே

எனப்பாடுவார். இதே கருத்தை வள்ளலார் அவர்கள் திருவருட்பாவில்

பெருமை நிதியே, மால்விடைகொள்
பெம்மான் வருந்திப் பெறும் பேறே,
அருமைமணியே, தணிகைமலை
அமுதே,உனதன் ஆறெழுத்தை
ஒருமை மனத்தின் உச்சரித்துஇங்கு
உயர்ந்த திருவெண்ணீ றிட்டால்,
இருமை வளனும் எய்தும்,இடர்
என்பது ஒன்றும் எய்தாதே.

எனப்பாடுவார். அதாவது ஆறெழுத்தையோதி திருவெண்ணீற்றை அணிந்து கொண்டால் இம்மை – மறுமை நலன் எய்தும், துன்பம் ஒருபோதும் உண்டாகாது என்பது இதன் கருத்தாகும். சரவணபவ என்ற மந்திரச் சொல் நீராலும் நெருப்பாலும் பூமியினாலும் காற்றாலும் ஆகாயத்தாலும் இரவிலும் பகலிலும் உண்டாகும் சங்கடங்களைத் தீர்த்து அடியார்க்கு அருள்பாலிக்கும் என பாம்பன் சுவாமிகள் பின்வரும் பாடலில் சொல்லுகிறார்.

பொங்கிடு புனலிலும் பூவில்வெங் கனலில்
எங்கணும் உள வெளியில் வளி பகலில்
கங்குலில் அடியவர் கருத்து நன்காகச்
சங்கடந் தீர்ப்பது சரவண பவவே.

அகத்தியர் எழுதியுள்ள ஆறெழுத்தந்தாதியில் சரவணபவ என்ற மூலமந்திரத்தின் பெருமையைச் சிறப்பாகச் சொல்லுகிறார்.

ஆறெழுத்து உண்மை அறியார்கள் கன்மம் அறுக்க,அப்பால்
வேறுஎழுத்து இல்லை, வெண் நீறில்லை மால்சிவ வேடமில்லை
தேறு எழுத்து ஏது? அயன் கையும் கருங்குழிச் சேறலும், பின்
மாறு எழுத்து அந்தகன் தென்புலத்தே என்றும் வௌவுவதே.

இத்தகைய வேதத்தின் இருதயமாகிய எம்பெருமானுடைய ஆறெழுத்தை முறைப்படி குருமூர்த்தியிடம் உபதேச வழியாகப் பெறுதல் வேண்டும். பெற்று, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுதல் வேண்டும். முருகப் பெருமானின் திருநாமம் மட்டுமல்ல, திருமாலின் பெயரை ஓதினால் என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
– நாராயணா என்னும் நாமம்

(நாலாயிர திவ்ய பிரபந்தம், இரண்டாம் ஆயிரம், திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, பெரிய திருமந்திரத்தின் மகிமை)

முருகன், திருமால் இவர்களின் திருநாமத்தை ஓதினால் மட்டுமே இன்பம் கிட்டுமா? இல்லையில்லை, சிவபெருமானின் திருநாமத்தை ஓதினால் எம்மான் நம்மை எல்லாத் துன்பத்திலிருந்தும் காப்பார். எப்படி? திருநாவுக்கரசர் கதை இதனை நமக்கு நன்கு உணர்த்தும். திருநாவுக்கரசரின் கதையை நாளை காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply