திருப்புகழ்க் கதைகள் 235
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
திமிர உததி– பழநி
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியறுபத்தியெட்டாவது திருப்புகழ், ‘திமிர உததி’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “திருப்பழநி ஆண்டவரே, அடியேனுக்கு மறுபிறப்பு இருந்தால், செவிடு, குருடு, அங்க ஈனம், வறுமை வேண்டாம்; சீரிய தேவசரீரம், சீரியகுலம், மெய்யறிவு, நிறைவு இவற்றைத் தந்தருள்வீர்” என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் …… விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு …… மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் …… வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் …… வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள …… மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை …… விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் …… மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – போர்முகத்தில் எதிர்த்தவரை வெல்லும் திறல் உடைய அசுரர்களுடைய தலைகளானது அறுபட்டு மண்ணில் கிடந்து உருளுமாறு மிகவும் பரந்துள்ள பெருங்கடல் ஓ என்று ஓலமிட்டுக் கதறவும், நீண்ட கிரௌஞ்ச மலை இடிந்து ஒழியுமாறும் வேற்படையை விட்டருளியவரே; வெம்மையுடன் கூடிய அரவணை மேல் இன்பமுடன் அறிதுயில் கொள்ளும் தாமரைக் கண்ணராம் தாமோதரரது மருகரே; அகிலாண்டங்களும் உய்யுமாறு ஆலமுண்ட நீலகண்டப் பெருமானது திருக்குமாரரே; பழநிமலையில் எழுந்தருளியுள்ள தேவர் தலைவரே; அடியேன் செய்த தீவினையின் பயனாக இருள் நிறைந்த கடலை ஒத்து ஒழியாது வந்துகொண்டிருக்கும், நரக துன்பத்தை நல்கும், பிறப்பில் பிறக்குமாறு அடியேனை விடுவதாயிருந்தால், செவிடு, குருடு, அங்கவீனம், தரித்திரம் சிறிதும் இல்லாமலருளி, தெய்வசரீரமும் சிறந்த குலமும், அறிவும் நிறைவும் உண்டாக அநுக்கிரகம் புரிந்து, அடியேனையும் என் மனத்தையும் அடிமை கொண்டு தடுத்தாட் கொள்ள தேவரீர் வந்தருள வேண்டும் – என்பதாகும்.
இறைவனின் அருளால் நற்பிறப்பு அடைய வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து. ஔவையாரின் பாடலொன்றும் இக்கருத்து வலியுறுத்தும்.
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே
ஒரு மனிதன் இறந்த பிறகு என்னவாகிறான்? ஒருவன் மனம்போனபடி வாழாமல் நல்லவனாக ஏன் வாழ வேண்டும்? ஒருவனுக்கு நோய் ஏன் வருகிறது? ஒரு சிலர் பிறக்கும்போதே உடற்குறையுடன் பிறக்கிறார்களே அது ஏன்? ஒருவன் ஆணாகவோ, பெண்ணாகவோ ஏன் பிறக்கவேண்டும்? ஒருவன் பணக்காரனாகவோ ஏழையாகவோ ஏன் பிறக்க வேண்டும்? இதைப் போன்ற சிக்கலான கேள்விகளுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லவே மதங்கள் பிறந்தன.
இந்து மதம், ஒருவனின் பிறப்பு அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நிகழ்கிறது எனச் சொல்கிறது. பிறக்கும்போது உடற்குறையோடு பிறந்தால் எத்தனை துன்பம் ஏற்படும்? இதனை நாம் உணரவேண்டுமானால் ஆண்டில் ஒருநாள் உங்கள் குடும்பத்துடன் ஒரு உடல் ஊனமுற்றோர் பள்ளியில் சென்று இருந்து பாருங்கள். பார்வையற்றோருக்கு ‘ஸ்க்ரைப்’ஆக இருந்து ஒரு தேர்வு எழுதிப் பாருங்கள். அவர்களின் வாழ்வு எத்தனை கொடுமையானது எனப் புரியும்.
அருணகிரியார் இத்திருப்புகழில், பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்றபடி பிறப்பிறப்பில்லா பெருந்தகையாகிய தேவரீரைச் சரண்புகுந்த அடியேனுக்கு மீண்டும் பிறவி வராது. ஒருகால் அடியேன் செய்த வினையின் காரணத்தால் மறுபிறப்பு உண்டாவதாயின், அப்பிறப்பு இத்தன்மைத்தாயமைதல் வேண்டும் என்று அருணகிரியார் அறுமுகனாரிடம் விண்ணப்பஞ் செய்கிறார்.
என்ன அந்த விண்ணப்பம்? – திருப்பழநி ஆண்டவா! அடியேனுக்கு மறுபிறப்பு உண்டாவதாயின் செவிடு, குருடு, அங்கவீனம், வறுமை இவை வேண்டாம்; சீரிய தேவசரீரம், சீரியகுலம், மெய்யறிவு, நிறைவு இவற்றைத் தந்தருள்வீர் – என்பதே அந்த விண்ணப்பமாகும். நாமும் அவ்வண்ணமே கோருவோம்.
முருகா
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்
தரிசனம் கண்ட சாதுவோ (டு) உடன்யான்
அருச்சனை செய்ய அனுக்ரகம் செய்வாய்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com