திருப்புகழ் கதைகள்: துன்பங்களை வெல்ல அறிவருளிய கணபதி!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0aea4e0af81e0aea9e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 26
விடமடைசுவேலை திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

உக்ரசேன மன்னனுடைய புதல்வியாகிய தேவகி தேவி நிகழ இருக்கும் உண்மையை உணராமல் உள்ளம் மிகவும் வருந்தி “பிள்ளைப் பெருமானே! கணபதியே” என்று அவர் திருநாமங்களைக் கூறித் துதி செய்து முறையிட்டதனால் கண்ண பிரானுக்கு எல்லாத் துன்பங்களையும் வெல்கின்ற அறிவை அருளுகின்ற ஆனைமுகக் கடவுள் பற்றிய திருப்புகழ். இப்போது பாடலைப் பார்க்கலாம்.

விடமடைசு வேலை அமரர்படை சூலம்
     விசையன்விடு பாண …… மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
     வினையின்விளை வேதும் …… அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
     கலவிதனில் மூழ்கி …… வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
     கழலிணைகள் சேர …… அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக
     இறைவன்மகள் வாய்மை …… அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
     கணபதியெ னாம …… முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
     அசலுமறி யாமல் …… அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
     அறிவருளும் ஆனை …… முகவோனே.

உக்ரசேனரின் புதல்வியாகிய தேவகி தேவி, கம்சன் தனது மகன் கிருஷ்ணனைக் கொல்ல அரக்கர்களை அனுப்புகிறான் என்ற செய்தி கேட்டு, அந்த அரக்கர்கள் அனைவரும் கிருஷ்ணனால் கொல்லப் படுவார்கள் என்ற உண்மையை உணராமல் உள்ளம் மிகவும் வருந்தி கணபதியை துதித்ததால் கண்ணபிரானுக்கு விநாயகர் அருள் செய்தார்.

அத்தகைய விநாயகர் மாதர் மீது அருணகிரியாருக்கு இருந்த மயக்கத்தைப் போக்கி காத்தருள வேண்டும் என்பது இப்படலின் வழி அருணகிரியாரின் கோரிக்கை.

தேவகி கணபதியை வணங்குதல்

மதுராவின் அரசன் உக்ரசேனன். யதுகுல மன்னன். இவன் கம்சனுக்குத் தந்தை. இவனுடைய மகள் தேவகி.தேவகி விநாயகரை உபாசித்தவள். இவளுடையபுதல்வராகிய கண்ணபிரான் ஆயர்பாடியிலே யசோதை வீட்டிலே வளர்ந்தார். கம்சன், பூதகி, த்ருணாவர்த்தன், சகடாசுரன் முதலிய அரக்கர்கள் பலரைக் கண்ணனைக் கொல்லுமாறு ஏவினான். அதனையறிந்த தேவகி நிகழ இருக்கும் உண்மையை உணர மாட்டாதவளாய் (கண்ணனால் அவ்வரக்கர்கள் மாண்டொழிவார்கள் என்பதை யறியாதவளாய்) புத்திர பாசத்தினால் தன் மகனுக்கு இடர் வருமோ என்று கருதி அஞ்சினாள். அஞ்சிய அவள் தனது உபாசனா மூர்த்தியாகிய விநாயகரைத் துதித்தாள்.

கண்ணன் செய்த லீலைகள் 

கண்ணபிரான் கோகுலத்தில் செய்த லீலைகள் பற்றி அடுத்து வரும் வரிகள் சொல்லுகின்றன. கண்ணபிரான் யாதவர்கள் வீட்டில் உள்ள பாலையும் வெண்ணையையும் திருடினார் என்று சொல்லுகிறார். அதாவது அவர் யாதவர்களுடைய, கோபிகை களுடைய தூய உள்ளத்தைக் கவர்ந்தார் என்பதாகும்.

அடையலவர் ஆவி வெருவ என்ற வரியில் கண்ணனைக் கொல்ல வந்த அரக்கர்கள் ஆவியஞ்சி நின்றார்கள் என்ற செய்தியைச் சொல்லுகிறார். அடிகூர என்ற சொல்லில் உத்தவர் முதலிய அடியவர்கள் கண்ணனுடைய திருவடியிடத்து அன்பு வைத்தார்கள் என்ற செய்தியையும் சொல்லி, தேவகி செய்த பிரார்த்தனையால் விநாயகர் கண்ணபிரானுக்கு அறிவுக்கு அறிவாகி நின்று அவரைக் கொல்லுமாறு வேடம் புனைந்து வரும் அரக்கரின் மாயத்தை உணர்த்தி அருள் புரிந்தார் என்பதைச் சொல்லி இருக்கிறார். ஆதலால் இறை வழிபாட்டினால் எல்லா நலன்களும் எய்துவர்.

திருப்புகழ் கதைகள்: துன்பங்களை வெல்ல அறிவருளிய கணபதி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply