e0af8d-e0ae89e0aeaee0af8de0aeaa.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 25
உம்பர் தருத்தேனு மணி திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்தத் திருப்புகழும் விநாயகப் பெருமான் மீது அருணகிரியார் பாடிய திருப்புகழாகும். முழுப்பாடலும் இதோ –
உம்பர்தருத் தேநுமணிக் …… கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் …… துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் …… பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் …… றருள்வாயே
தம்பிதனக் காகவனத் …… தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் …… கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் …… பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் …… பெருமாளே.
விண்ணுலகிலுள்ள கற்பக மரம் போலவும், காமதேனுவைப் போலவும், சிந்தாமணியைப் போலவும், என் மனமானது கசிந்து அன்பு உடையதாகியும், ஒளிபெற்ற பாற்கடலில் பிறந்த இனிய அமுதம்போன்ற ஞான உணர்ச்சி என் உள்ளத்தில் ஊற்றெடுத்தும், சிவபோகமாகிய பேரின்ப வெள்ளத்தை அடியேன் பலகாலும் பருகியும் மகிழுமாறு அடியேனுடைய உயிருக்கு ஆதரவு வைத்து திருவருள் புரிவீராக.
உம்பர் தருஎன்பதுதேவலோகமரம். தேவலோகத்தில் ஐந்து மரங்கள் இருக்கின்றன. அவை, கற்பகம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம்(சந்தனமாம்இருக்கவேண்டும்) என்பவையாம். இவைகளில் நினைத்ததைத் தரும் ஆற்றல் உடையது கற்பகம். கற்பகம் போல் நினைத்த மாத்திரத்தில் குறிப்பறிந்து கொடுக்கும் இயல்பு நம்மிடம் வேண்டும்.தேனு என்பதுகாமதேனுஎனப்படும்தேவலோகத்துப்பசு. இது அமிர்தத்துடன் பிறந்தது. கேட்டதைத் தரும் இயல்பு உடையது. வசிட்டாதி மகரிஷிகட்கு உதவுவது. இதுபோல், வறியவர்க்கு வழங்கும் இயல்பும் நம்பால் அமையவேண்டும்.மணி எனஇங்கேகுறிப்பிடப்படுவதுசிந்தாமணி. இது சிந்தித்ததைத் தரும் சிறப்பு உடையது. இதுபோல் நாமும் மற்றவர்கள் சிந்தித்ததை அறிவின் நுட்பத்தால் அறிந்து கூடுமானவரை கரவாமல் கொடுக்கவேண்டும்.
தம்பி தனக்காக வனத்து அணைவோனே என்ற வரியில் முருகப் பெருமான் வள்ளியை மணந்த கதை சொல்லப்படுகிறது. வள்ளி நாயகிக்கு அருள் புரியும் பொருட்டு முருகப் பெருமான் வள்ளிமலைக்குச் சென்றார்.
அந்த ஆன்மாவுக்குப் பக்குவம் விளைவிக்கும் பொருட்டு, வேடனாகவும், வேங்கை மரமாகவும், வேந்தன் மகனாகவும், கிழவேதியனாகவும் பல அற்புதத் திருவிளையாடல்கள் புரிந்தார். வள்ளநாயகியின் பால் இருந்த பந்தபாசம் விலகும் பொருட்டு விநாயகரை யானை வடிவாக வருமாறு நினைந்தார்.
தம்பியின் வேண்டுகோளுக்கு இணங்கி விநாயகர் ஓங்கார யானையாக வடிவெடுத்து அவ் வனத்தில் சென்றார்.யானையக் கண்டவுடன் வள்ளி பிராட்டியார், உயிருக்கு இறுதி வரும்போது உறுதியளிப்பார் யாரும் இல்லை. தாய் தந்தை உடன் பிறந்தார் என்ற அனைவரும் உதவி செய்கிலர் என்று எண்ணி, பற்றற்று, பற்றற்ற பரமனைப் பணிந்தாள்.
தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே என்ற வரியில் சிவபெருமானை வலம் வந்து விநாயகர் கனி பெற்ற கதை கூறப்பட்டுள்ளது.
ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே கணபதியின் ஐந்து கரங்களின் தொழில்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கணபதி, ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களை ஐந்து திருக்கரங்களால் புரிகின்றார். இதனை தணிகைப் புராணப் பாடல்ஒன்று,
பண்ணியம் ஏந்தும் கரம் தனக்கு ஆக்கி,
பனிநிலா மருப்பு அமர் திருக்கை
விண்ணவர்க்கு ஆக்கி, அரதனக் கலச
வியன்கரம் தந்தையர்க்கு ஆக்கி,
கண்ணில் ஆணவ வெங்கரி பிடித்து அடக்கிக்
கரிசினேற்கு இருகையும் ஆக்கும்
அண்ணலை தணிகை வரைவளர் ஆபச்
சகாயனை அகம்தழீஇக் களிப்பாம்.
எனப் பாடுகிறது.
மோதகத்தைத் தாங்கிய திருக்கரத்தைத் தம் பொருட்டு ஆக்கியும், பிறைச்சந்திரன் போலும் கொம்பு பொருந்திய திருக்கரத்தைத் தேவர்கள் பொருட்டாக்கியும், இரத்தின கும்பம் வைத்திருக்கும் பெரிய திருக்கரத்தை அம்மையப்பரை வழிபடுதற்கு ஆக்கியும், சிறிதுங் கண்ணோட்டமில்லாத ஆணவமலமாகிய கொடிய யானையைப் பிடித்தடக்கும் பொருட்டு அம்மலக் குற்றத்தையுடைய அடியேனுக்கு இரண்டு திருக்கரங்களையும் ஆக்குந் தலைவராகிய, தணிகாசலத்தின்கண் நித்திய வாசஞ்செய்யும் ஆபத்சகாயன் என்னுந் திருப்பெயரையுடைய விநாயகப் பெருமானை மனத்தால் தழுவிக் களிப்படைவாம்.
திருப்புகழ் கதைகள்: உம்பர் தருத்தேனுமணி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.