திருப்புகழ் கதைகள்: 2. பழம் நீ அப்பா

ஆன்மிக கட்டுரைகள்

திருப்புகழ் கதைகள்
திருப்புகழ் கதைகள்
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 02

பழம் ‘நீ’ அப்பா : விநாயகப் பெருமானின் கைத்தல நிறைகனி யின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர். ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காணச் சென்றார். பழத்தைக் கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார்.

     பின்னர் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி விட்டு, முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று பழனி மலையில் வந்து தங்கிவிட்டார்.

     சிவனும் பார்வதியும் பழனிக்குவந்து முருகனை சமாதானபடுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை “பழம் நீ” என்றதால் இந்த இடம் பழநி என பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாகக் கருதப்படுகிறது.

இக்கதையின் உட்பொருள்

     ஒரு கனியை இருவரும் விரும்பினால் சிவனார்கனியைப் பகிர்ந்து தரலாகாதோ? அகில உலகங்களையும் ஒரு கணத்தில் ஆக்கியும் அளித்தும், நீக்கியும் ஆடல் புரிகின்ற எல்லாம் வல்ல இறைவர் மற்றொரு கனியை உண்டாக்கித் தரலாகாதோ? காரைக்காலம்மையாருக்கு ஒரு கனிக்கு இரு கனிகளையே வழங்கிய வள்ளல் அவர் அல்லவா.  

“தம்பியே கனி பெறுக” என்று தமையனாரும், “தமையனே கனி பெறுக” என்று மகன்கள்இருவரும் ஒற்றுமையாக இருந்து இருக்கக்கூடாதா?   ஒரு கனி காரணமாக அகில உலகங்களையும் ஒரு நொடியில் வலம் வருவது முயற்சிக்குத் தக்க ஊதியமாகுமா? சகல வல்லமையும்உடைய கணபதிக்கு உலகை வலம் வரும் வண்மை இல்லையா? சிவத்தை வலம் வருவதே உலகை வலம் வருவதாகும் என்பது அறிவின் வடிவாகஉள்ள அறுமுகன்அறியாததா?என்றுபலகேள்விகள்நம்மனதுள்எழலாம்.

     சிவம் என்ற ஒன்றினுள் எல்லாவற்றையுங் காணும் தன்மை ஒன்று. எல்லாவற்றினுள் சிவத்தைக் காணும் தன்மை மற்றொன்று.இதனைத் தான் ஆனைமுகன் ஆறுமுகன் என்ற இருவடிவங்களாக நின்றுபரம்பொருள் நமக்கு உணர்த்தியது.

     அரும்புஎன்பது சரியை; அதுமலரும்போதுஅதுவேகிரியை; அதுமேலும்வளர்ந்துகாயாகும்போதுஅதுயோகம், இறுதியில்கனியாகும்போதுஅதுஞானம். எனவே, சிவத்தின் கண் இருந்தது ஞானம் என அறிக. ஞானத்தில் விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதைத் தெரிவிக்க விநாயகரும் வேலவரும் அக்கனியை விரும்பினார்கள். ஞானத்தைச் சிதைக்க முடியாதென்பதைத் தெளிவாக்குகின்றது அக்கனியை அரனார் சிதைத்துத் தராமை. சிவத்திற்கு அந்நியமாக வேறு இன்மையைத் தெரிவிக்க விநாயகர் அப்பனைவலம் வந்து ஞானமாகியக் கனியைப் பெற்றார். “எல்லாம் அவனே” என்பதைத் தெரிவிக்க வடிவேற் பரமன் உலகை வலம் வந்து தாமே ஞானக் கனியாக நின்றனர்.

     ஞானமே அவர்; ஞான பண்டிதன்; ஞானாநந்தானுருவாகிய நாயகன். ஞானமாகிய கனியைத் தாங்கும் விநாயகர் ஞானாகரர்.விநாயகர் வேறு, முருகர் வேறு என்று எண்ணவேண்டாம். ஐங்கரனும் அறுமுகனும் ஒன்றே.. பாலும் சுவையும் போல் என்று அறிக. பால் விநாயகர்; பாலின் சுவை கந்தவேள். சுவையைப் பால் தாங்கி நிற்கின்றது. அதுபோல் ஞானக் கனியை விநாயகர் தாங்கி நிற்கின்றனர்.

கைத்தல நிறை கனிக்குள் இத்தனை தத்துவம்; இவ்வளவு பெரிய கதை.

அடுத்த கதை நாளை.

திருப்புகழ் கதைகள்: 2. பழம் நீ அப்பா முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply