திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

செய்திகள்

நிகழாண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 22-ம் தேதி ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. 27-ம் தேதி முறைப்படி திருவிழா தொடங்கும் வகையில், கோயில் கொடிக் கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக, கம்பத்தில் ஏற்றப்படும் கொடி நான்கு வீதிகளின் வழியாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

கொடிக்கம்பத்துக்கு முன்னதாக கணபதி தாளம், ரிஷப தாளம் மற்றும் சூர்ணிகை மந்திரத்துடன் சிவாச்சாரியர்கள் கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றினர்.

தொடர்ந்து, கொடிக்கம்பத்தில் அருள்பாலிக்கும் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்திகளான ஸ்ரீ சொர்ணகணபதி, வள்ளி தெய்வானையுடன் சமேத சுப்பிரமணியர், பிராணாம்பிகை அம்பாள், ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், ஸ்ரீ சண்டிகேசுவரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்பட்டு, வீதியுலா நடைபெற்றது.

வீதியுலாவுக்கு முன்னர் 4 வீதிகளிலும் நவசந்தி பூஜை நடத்தப்பட்டது.

இக் கோயிலில் உள்ள மூலவரான ஸ்ரீ தர்பாரண்யேசுவரருக்கு தர்ப்பை புல் விசேஷமானது. இதனால், கொடிக்கம்பத்தைச் சுற்றி தர்ப்பை புல் கட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முக்கிய நிகழ்வுகள்: விழாவில் ஜூன் 3-ம் தேதி ஸ்ரீ அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும், ஜூன் 8-ம் தேதி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் மின்சார சப்பரப் படலில் வீதியுலாவும், ஜூன் 10-ம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளன.

ஜூன் 11-ம் தேதி ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்கக் காக வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறார். 12-ம் தேதி காலை 7 மணிக்கு பாரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

13-ம் தேதி விசாக தீர்த்தத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

Leave a Reply