682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி அருகே மழை வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழ மாசி சிவராத்திரியை முன்னிட்டு வகுரணி காமாட்சியம்மன் கோவிலுக்கு 7 ஊர் மக்கள் ஒன்றிணைந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான காமாட்சியம்மன் திருக்கோவில் இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டின் மாசி சிவராத்திரி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
சிவராத்திரி திருநாளில் இந்த வகுரணி கிராமம் மட்டுள்ளாது அருகில் உள்ள 7 கிராம மக்களும், வீட்டிலிருந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து கோவிலின் முன்பு உள்ள தொட்டியில் நிரப்பினால், தொட்டி எவ்வளவு நிரம்புகிறதோ அதே அளவு மழை பெய்து அருகில் உள்ள வகுரணி கண்மாய் நிரம்பி செல்வ செழிப்பாகும் எனவும், இந்த மஞ்சள் நீரை வீட்டிற்கு எடுத்துச் சென்று தெளித்தால் நோய் நொடி அண்டாது என்பது இப்பகுதி மக்களின் ஐதீகமாக உள்ளது.
அவ்வாறு இந்த ஆண்டும் ஆதி வழக்கப்படி மாசி சிவராத்திரியை முன்னிட்டு வகுரணி, சந்தைப்பட்டி, நடுப்பட்டி, கணவாய்பட்டி, நாவார்பட்டி, குறுக்கம்பட்டி, அயோத்திபட்டி உள்ளிட்ட 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து வீட்டிலிருந்து மஞ்சள் நீரை ஊர்வலமாக எடுத்து வந்து காமாட்சியம்மனை வணங்கி கோவில் முன்பு இருந்த தொட்டியில் மஞ்சள் நீரை ஊற்றினர்.
தொடர்ந்து, வீடுகளுக்கு தெளிக்க மஞ்சள் நீரை எடுத்து சென்றதுடன், இந்த 7 கிராமத்திலும் உள்ள மாமன் மைத்துனர்கள் மீதும் மஞ்சள் நீர் தெளித்து மஞ்சள் நீராடினர்.
7 கிராம மக்களும் சாதிமத பேதமின்றி ஒற்றுமையாக நடத்தி வரும் இந்த மஞ்சள் நீராட்டு விழாவின் காரணமாக நல்ல மழை பெய்து வகுரணி கண்மாய்க்கு பாத்தியப்பட்ட 7 கிராமங்களும் செழிப்படைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.