பல்வேறு விதமான வேண்டுதல்களோடுதான் திருமலைக்கு வரும் பக்தர்கள் மலையப்பசுவாமியை தரிசனம் செய்கின்றர். அவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாக பணத்துடன், தங்கம், வைரம், வெள்ளி நகைகளையும் நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இவர்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப ஆபரணங்களை வழங்கி வந்தனர். ஆனால், அண்மையில் திருமலை திருப்பதி கோயில் சிறப்பு அதிகாரக்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில் “கோயில் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்றே ஆபரணங்கள் நன்கொடை அளிக்கப்பட வேண்டும். எந்த விதமான ஆபரணங்கள் தேவை உள்ளது என்றும், எதைப் பெறுவது என்றும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதன்படி ஆபரணங்கள் பெறப்படும். அனுமதி பெறாமல் நகைகள் நன்கொடை வழங்கினால் அதை நிர்வாகம் பெற்றுக்கொள்ளாது. அதனை பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்தலாம்’ என்று முடிவெடுக்கப்பட்டது.
கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவு பற்றித் தெரியாத பக்தர்கள் தற்போதும் ஆபரண நன்கொடை அளிக்க வருவதும், அதைப் பெற்றுக்கொள்ளாமல் கோயில் நிர்வாகம் அலைக்கழிப்பதும் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் பக்தர் ஒருவர் சுமார் 6 லட்சம் மதிப்புள்ள 108 தங்க புஷ்பங்கள் செய்து அவற்றை நன்கொடையாக அளிக்க வந்தார். ஆனால் உரிய அனுமதி கிடைக்காததால் அதனை கோயில் உண்டியலில் செலுத்திவிட்டுச் சென்றாராம்.