திருப்பங்கள் தந்திடும் திருப்பாம்பரம் கோயிலில் இராகு, கேது பெயர்ச்சி!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

thiruppampuram raghu ketu

அஷ்டமா நாகர்களும் தனித்தனியாக வழிபாடு செய்துள்ள வெவ்வேறு பழம்பெருமை வாய்ந்த தலங்கள் பல இருப்பினும் இந்த எட்டு நாகங்களும் ஆதிசேஷனுடன் சிவபெருமானை வழிபட்ட தொன்மையான தலமாக திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள திருபாம்புரம் திருத்தலம் விளங்குகின்றது.

இங்கு ஸ்ரீ வண்டுசேர்குழலி உடனாய ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தலம் “தென் காளஹஸ்தி” எனப்பெறும் சிறப்புடையது.
அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் நான்கையும் மக்கள் பெற்று உய்யும் வண்ணம் சிவபெருமான் திருவருளே திருமேனியாகக் கொண்டு இராகுவும், கேதுவும் ஏக சரீராமாக இருந்து ஈசனைப் பூஜித்து வழிபட்டதால் இராகு – கேது ஸ்தலம் என்றழைக்கப்படுகிறது. இங்கு வீற்றுள்ள பாம்பரசனான ஆதிசேஷனைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் அஷ்டமா நாகங்களும் தாங்கிக் கொண்டிருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.எனவே இத்தலத்தில் ஒன்றறை ஆண்டுகளுக்கு ஒருமுறை இராகு – கேது பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் அத்துணை நாகங்களும் ஒருசேர வழிபட்டமைக்கு பின்னணியில் ஒரு சுவையான புராணக் கதையும் உண்டு.

” ஒருசமயம் கைலாயத்தில் முழுமுதற் கடவுள் உள்ளிட்ட சகல தேவர்களும் சிவபெருமானைத் தொழுது பணிந்து நின்றிருந்தனர். பெருமானின் கழுத்திலிருந்த பாம்பு ‘தன்னையும் சேர்த்துத்தானே வணங்குகிறார்கள்’என்று சிலநொடிகள் கர்வம் கொண்டது. அதையுணர்ந்து சினம் கொண்ட பெருமான் “நாகர் இனம் முழுவதுமே சக்தி இழந்து போகட்டும்” என சபித்தார்.

இதனால் வலிவு குறைந்த நாகர்களால் பூமியைத் தாங்கும் பணியில் குறைவுபடுதல் ஏற்பட்டது. அல்லலுற்ற நாகர்கள் சிவபெருமானிடமே முறையிட, “சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் பூலோகத்திலுள்ள நான்கு தலங்களில் தம்மை வழிபட விமோசனம் கிடைத்திடும்” என திருவாய் மலர்ந்தருளினார்.

அதன்படி, ஆண்டுதோறும் சிவராத்திரி நன்னாளில் முதல் காலத்தில் குடந்தையிலும் (நாகேஸ்வரர்),இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும் (நாகநாதர்),மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரத்திலும் (சேஷபுரீஸ்வரர்), நான்காவது காலத்தில் நாகூரிலும் (நாகநாதர்) வழிபட்டு நாகர்கள் சாபவிமோசனம் பெற்றனர் என்பது தலவரலாறு.

பாம்புகள் வழிபட்டதால் பாம்புரநாதர் என்றும்,ஆதிசேஷன் வழிபட்டதால் சேஷபுரீஸ்வரர் என்றும் இத்தலத்து பெருமானுக்கு திருநாமங்கள் உண்டாயின. தேவாரப் பாடல்பெற்ற இவ்வூரில் பாம்புகள் தீண்டி இதுநாள்வரை யாரும் மரணித்ததில்லை என்பதும், ஆலம் விழுதுகள் பூமியை தொடுவதில்லை வியப்பூட்டும் உண்மைகளாகும்.

புராணத்தகவலின்படி, ராகு கேது என்பன நிழல் கிரகங்கள். பாம்பினுடைய தலை உடைய கிரகம் ராகு என்றும்,எஞ்சிய உடல் பகுதி உடைய கிரகம் கேது என்றும் நம்பிக்கை உள்ளது. ராகுவிற்கு உரிய‌ தலமாக திருநாகேஸ்வரமும்,
கேதுவிற்கு உரிய தலமாகக் கீழ்பபெரும்பள்ளமும் சிறப்பாகப் பேசப்படுகின்றன.

ஆனால் இராகு – கேது இரண்டிற்குமே உரித்தான ஒரே பரிகாரத் தலமாக விளங்கிடுவது திருப்பாம்புரம்தான் என்பது சிறப்பு.

ஜெனனகால ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள், களத்திர தோஷம், புத்திர தோஷம், ஆகியன இருப்பவர்களும்,இராகு – கேது தசாபுத்தி நடப்பு உடையவர்களும் இத்தலத்தில் வழிபட்டு பரிகார நிவர்த்தி பெறுகிறார்கள்.

அதுபோல, விஷக்கடிகளால் அல்லல் படுபவர்கள், கனவில் பாம்புகளைக் கண்டு துன்புறுபவர்களும் இத்தலத்தில் தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்து பலனடைகின்றனர்.

ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடியும்,வன்னிமரத்தடியில் கல்நாகர்களை பிரதிஷ்டை செய்தும் தோஷ நிவர்த்தி பெறுவது பக்தர்களால் பின்பற்றப்படுகிறது.

இத்தலத்தில் ஆதிசேஷனுக்கு மூல விக்கிரகமும், உற்சவர் விக்கிரகமும் உள்ளது தனிச்சிறப்பு. நாகர்கள் தவிர அம்பிகை, பிரமன்,சூரியன், சந்திரன்,அகத்தியர், தட்சன்,இந்திரன், கங்கை ஆகியோர்கள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றிருக்கின்றனர்

பாம்புகளுக்குரிய தலம் ஆதலால் இன்றளவும் கோயிலில் பாம்புகளின் நடமாட்டம் உள்ளது கண்கூடு.
குறிப்பிட்ட சில தினங்களில் தாழம்பூ அல்லது மல்லிகைப்பூ மணம் வீசுவது போல உணர்ந்தால், கோயில் பகுதியில் பாம்பு நடமாட்டம் உள்ளது என்று இன்றளவும் நம்பப்படுகிறது.

இத்தகைய பெருமைவாய்ந்த இத்தலத்தில் எதிர்வரும் புரட்டாசி மாதம் 21 – ம் தேதி (08.10.2023) ஞாயிற்றுக் கிழமை மதியம் 3.40 மணிக்கு, இராகு பகவான் …மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேது பகவான்… துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.

எனவே இத்தலத்திற்கு வந்து தரிசித்து பரிகாரம் செய்ய வேண்டியவர்கள், மேஷம், ரிஷபம், சிம்மம்,கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்கார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடெங்கிலிமிருந்து ஏராளமான பக்தர்கள் அன்றைய தினம் கூடுவார்கள் என்பதால் குடிநீர், கழிவறைகள், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன் ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Leave a Reply