அடிப்படை வசதிகளின்றி பரிதவிக்கும் திருவரங்கம் பெருமாள் கோயில்

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

திருக்கோவிலூரை அடுத்த திருவரங்கம் கிராமத்தில் நடுநாடு என்று சொல்லப்பட்ட திவ்யஸ்தலம் உள்ளது. பழம்பெரும் கோயிலாக விளங்கும் இங்கு தமிழ் இலக்கிய முறைப்படி காடும் காடு சார்ந்த இடமுமான இங்கு முழுமுதற் கடவுள் கண்ணனுக்காக ஒரு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் தென் திசையில் மேடான பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின் தோற்றமும், பெண்ணையாற்றின் அழகும் கண்கொள்ளாக் காட்சியாய் இன்பமளிக்கிறது.

மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலில் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, வரதர் சன்னதி, நவராத்திரி மண்டபம், வேதாந்த தேசிகன் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஊஞ்சல் மண்டபம், வாகன மண்டபம் ஆகியன உள்ளன.

மேலும் பெருமாளாகிய ராமர் இருக்குமிடத்தில் ஆஞ்சநேயர் எப்போதும் வாசம் செய்வார் என்பதற்கு ஏற்றதுபோல் இக்கோயிலுக்கு கிழக்கே சிறிய திருவடி ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவதோடு, தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இக்கோயிலைக் காண வட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, குளியலறை வசதிகளின்றி பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் வேறுவழியின்றி இவர்கள் தென்பெண்ணை ஆற்றிலேயே சிறுநீர் மற்றும் இயற்கை உபாதை கழித்து இயற்கை தந்த அழகை பாழ்படுத்தி வருகின்றனர்.

எனவே பக்தர்களின் நலன்கருதி மேற்கண்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஆட்சியரின் விருப்ப நிதியின் மூலமாகவோ அல்லது இந்து சமய அறநிலையத்துறை மூலமாகவோ நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.

 

https://www.dinamani.com/edition/story.aspx?artid=359180

Leave a Reply