ஸ்ரீ ராஜாதி ராஜ கோபாலன்

செய்திகள்

 

தோளின் திண்மையால், வாளின் வலிமையால் பல்வேறு நாடுகளுடன் போரிட்டு எல்லைகளை விரிவாக்கி நாடு பிடிக்கும் ஆசையில் வெற்றிகளைக் குவித்த மன்னர்கள், கடைசியில் மண்ணோடு மண்ணாக மடிந்து போனார்கள்! பிடி சாம்பல்தான் மிச்சம்.

 

 

அந்த அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகள் இன்றில்லை. ஆனால் அவர்கள் கட்டிய ஆலயங்கள் காலங்கடந்து அவர்களது பெருமையை பறைசாற்றுகின்றன. அந்த மன்னர்களும் இதையே விரும்பினார்கள்.

 

தஞ்சையை ஆண்ட மன்னர்களது வரிசையில், விஜயராகவ நாயக்கர் என்பவர், கி.பி. 163 1 முதல் கி.பி. 1657 வரை அரசாட்சி செய்தார். இவர் எழுப்பிய பல்வேறு கவினுறு ஆலயங்களில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயிலும் ஒன்று.

 

 

விஜயராகவ நாயக்கர் மறைந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இப்போதும்கூட மன்னார்குடி கோயிலில் அந்த மாமன்னனை நினைவு கூர்கிறார்கள். “மன்னர்க்கெல்லாம் மன்னர் ராஜகோபால சுவாமியே’ என்பதை எடுத்துக் காட்டும் வகையில், ஸ்ரீராஜ கோபால சுவாமிக்கு செய்யப்படும் அலங்காரம்தான் ராஜ அலங்காரம்.

 

 

இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடத்தப்படும் பகல் பத்து உற்சவத்தின் ஆறாம் நாளன்று விஜய ராகவ நாயக்கருக்கு மரியாதை செய்யும் விதத்தில் ஸ்ரீராஜகோபாலனை சிறப்புடன் அலங்கரிப்பார்கள். நாயக்கர் காலத்து வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

 

மேலும் நாயக்க மன்னர்கள் தொடர்ந்து இக்கோயில்களுக்குச் செய்து வந்த திருப்பணிகளை நினைவூட்டும் விதத்தில் இந்தக் கோயிலின் திருப்பள்ளியறையின் முன்னால் உள்ள தூண்களின் அடிப் பாகத்தில் மன்னர் அச்சுதப்ப நாயக்கர், மன்னர் விஜயராகவ நாயக்கர், அவர் தேவி ராணி செண்பக லெட்சுமி ஆகியோர் கூப்பிய கரங்களுடன் அழகிய சிற்பமாக விளங்குகிறார்கள்.

 

 

ஸ்ரீராஜகோபால சுவாமி, தனது சந்நிதியை விட்டு வெளியே வரும்போதும், திரும்ப உள்ளே செல்லும்போதும் இச்சிலைகளின் அருகே எழுந்தருளும்போது இக்கோயில் தீட்சிதர்கள், “”அனைத்துலகும் ஆண்ட அச்சுத விஜயராகவ மன்னார் தாசனுக்கு அருளிப்பாடி” என்று வாழ்த்துச் சொல்லி, மறைந்த அரச குடும்பத்துக்கு கோயில் மரியாதைகளை செலுத்துவர்.

 

 

மன்னர்கள் மரபுகள் மடிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் செய்த தர்மங்கள், கட்டளைகள் ஓரளவாவது ஆங்காங்கே நிலை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. “வையம் உள்ளவரை நாங்கள் செய்துள்ள தர்மங்கள் நிலைக்கட்டும்’ என்ற பெரு விருப்பத்தை மாமன்னர்கள் தாங்கள் வடித்துள்ள கல்வெட்டுகளில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் விருப்பம் முழுமையாக நிறைவேற, ராஜாதி ராஜனாகிய ஸ்ரீராஜ கோபால சுவாமியேவழிகாட்டி அருளட்டும்.