புஷ்பவாகனன் கதை

கதைகள்!

வேண்டிய பொருள் வேண்டிய பொழுது கிடைத்து வந்தது. அவனைப் போலவே அவன் மனைவி லாவண்யவதியும் அறத்திலே பெரும் பற்றுக் கொண்டவளாயிருந்தாள். மக்களின் நலன் ஒன்றையே எப்பொழுதும் கருத்தில் கொண்டவர்களாயிருந்தனர் அந்த அரச தம்பதிகள். அத்தகைய அநுகூல தம்பதிகளைக் காண்பது அரிது.

புஷ்பவாகன மன்னன் ஒருமுறை கடுந்தவம் இயற்றினான். அதில் மகிழ்ந்த பிரும்மதேவர் அவன் முன் தோன்றிப் பொற்றாமரை மலர் ஒன்றைத் தந்தார். “மன்னவா! எப்பொழுதும் இப்படியே தர்மத்தில் ஈடுபாடு கொண்டவனாக நீ இருக்க வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன். உனது புகழ் மணம் பத்துத் திசைகளிலும் பரவட்டும். இந்தப் பொற்றாமரையைப் போற்றிப் பாதுகாத்துவா. நினைத்த மாத்திரத்திலேயே இது உன்னைச் சொர்க்கம், பூமி, பாதாளம் எங்கு வேண்டுமானாலும் இட்டுச் செல்லும்!” என்றார்.

எனவே, புஷ்பவாகனனின் நற்செய்கைகளும் நற்பணிகளும் மூவுலகிலும் மணம் பரப்பின. குடி மக்களோ இத்தகைய மன்னனை அடைந்ததில் பெரு மகிழ்ச்சி கொண்டனர். “இந்த மன்னன் காலத்தில் வாழ நாம் என்ன பாக்கியம் செய்தோம்!” என்று பூரித்தனர். நாளுக்கு நாள் மன்னன் புகழ் மாநிலம் முழுவதும் பரவிப் பொன்னுக்கு மணம் ஏற்றிய கதையாகத் திகழ்ந்தது.

ஒருநாள் மன்னன் அறிவாற்றல் மிகுந்த சான்றோரைக் கூட்டி ஞான சர்ச்சை செய்து கொண்டிருந்தான். அப்பொழுது வாயிற் காப்போன் வந்து, பிரசேத முனிவர் வந்திருக்கும் செய்தியைத் தெரிவித்தான். மன்னன் விரைந்து சென்று வணங்கி வரவேற்று அவரை அழைத்து வந்தான். உகந்த இருக்கை அளித்து, அவர் அமர்ந்த பின் மிகவும் அடக்கமான குரலில், “முனி சிரேஷ்டரே! என் இதயத்தில் அடிக்கடி ஓர் ஐயம் எழுகிறது. எனக்கு இத்தனை பெரும் புகழும் செல்வமும் சிறப்பும் கிடைக்கக் காரணம் என்ன? எத்தகைய புண்ணியத்தின் பயனாக மனிதனுக்கு இத்தகைய பேறுகள் கிட்டுகின்றன?” என்று கேட்டான்.

பிரசேத முனிவர் முறுவலித்தார். “மன்னவா! நான் உனக்கு ஒரு கதை சொல்லுகிறேன். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்தப் புவியில் ஒரு வேடன் இருந்தான். அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகற்றவன். அஷ்டக்கோணல் என்பார்களே, அப்படி அவன் அவயவங்கள் அத்தனையும் ஒரே கோணல். எல்லோரும் அவனை ஏளனமாகப் பார்த்தனர். பெற்ற தாய் தந்தையர், உடன் பிறந்த சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் எல்லோருமே அவனை அலட்சியப் படுத்தினர். யாரும் அவனிடம் கடுகளவு கூட அன்பு காட்டவில்லை.

வேடனுக்கு வாய்த்த மனைவியும் அவனைப்போலவே அழகற்றவளாயிருந்தாள். ஆனால் கணவனிடம் அபாரப் பற்று கொண்டிருந்தாள். அந்நியோந்நிய தாம்பத்தியம் என்பார்களே அதற்கு அவர்கள் இலக்கணமாயிருந்தார்கள். இருவரும் ஒருவர் நலனை ஒருவர் வேண்டி வாழ்க்கையை ஓட்டி வந்தனர்.

இப்படியிருக்கும் பொழுதுதான் ஒரு சமயம் நாட்டில் பயங்கரப் பஞ்சம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. பசிப்பிணி மக்களைப் பரிதவிக்க வைத்தது. எங்கும் ஓலக்குரல் அவலமாக ஒலிக்கலாயிற்று. வேடனும் அவன் மனைவியும் பசி பொறுக்க முடியாமற் போகவே, வீட்டைத் துறந்து உணவு தேடப் புறப்பட்டனர். நாள் முழுவதும் ஓடி ஆடிச் சுற்றியும் அவர்களுக்கு உணவோ, பழமோ, இறைச்சியோ எதுவுமே கிடைக்கவில்லை. கால் கடுத்ததுதான் மிச்சம்.

இனி நடக்க முடியாது என்ற நிலையில் அவர்கள் ஒரு குளக்கரையை அடைந்தார்கள். சிறிது இளைப்பாறிச் செல்லலாம் என்ற எண்ணத்தோடு அமர்ந்தனர்.

அது தாமரைக் குளம். அதில் மலர்ந்திருந்த தாமரை மலர்களைக் கண்ட வேடனின் மனத்தில் ஒரு எண்ணம் எழுந்தது. “இதில் சில மலர்களைப் பறித்துச் சென்று விற்று வயிற்றுப் பாட்டுக்கு ஏன் வழி செய்து கொள்ளக்கூடாது?’ என்று யோசித்தான். யோசனை செயலாக முகிழ்த்தது. கையில் தாமரை மலர்களுடன் மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். அருகிலிருந்த வைதிசம் என்னும் நகரை அடைந்தான். தெருத் தெருவாகச் சுற்றி எத்தனையோ விலைகூறியும் வேடனுக்கு வாங்குவோர் கிடைக்கவில்லை. பஞ்ச காலத்தில் எவர் காசு கொடுத்துத் தாமரை மலர்களை விலைக்கு வாங்கப் போகிறார்கள்?

பசியினால் கண்கள் இருட்டிக் கொண்டு வரவே, கணவனும் மனைவியும் அப்படியே உட்கார்ந்து விட்டனர். அவர்களுக்கிருந்த பசியிலும் களைப்பிலும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவும் தோன்றாமல் அமர்ந்திருந்தனர்.

இருட்டிச் சிறிது நேரத்துக்கெல்லாம் வானத்து வெளிச்சம் பூமியில் படிந்தது. குளிர் காற்று இலேசாக உடலைத் தடவிக் கொடுத்தது. கனவில் ஒலிக்கிறாற் போலச் சில மங்களச் சொற்கள் காதில் விழுந்தன. கண்களைக் கஷ்டப்பட்டுத் திறந்து பார்த்தான். எதிரே ஒரு பெரிய மாளிகை இருப்பது தெரிந்தது. அங்கே ஏதாவது உணவு கிடைக்கலாமோ என்ற நப்பாசையில் கணவனும் மனைவியும் இருந்த பலத்தையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு புறப்பட்டனர்.

அது அனங்கவதி என்னும் கணிகையின் மாளிகை. அவள் விபூதி துவாதசி விரதம் மேற்கொண்டிருந்தாள். அதையொட்டி விஷ்ணு வழிபாட்டுக்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. விஷ்ணு பகவானின் பாவம்போக்கும் அழகிய உருவச்சிலையையும் சூழ்நிலையில் ஒரு தூய்மையையும் கண்ட வேடனின் மனம், பற்றற்றான் பற்றினைப் பற்ற விழைந்தது. அதோடு “இந்தத் தாமரை மலர்களைக் கொண்டு பகவானுக்கு அலங்காரம் செய்தால் எப்படி இருக்கும்?” என்றும் எண்ணிப் பார்த்தது.

வேடன் தனது இத்தனைநாள் வாழ்க்கையில் கடவுளை ஒருநாளும் வழிபட்டதில்லை. வழிபட வேண்டாம் என்பதில்லை. அப்படி ஒரு தருணம் அவனுக்கு வாய்த்ததில்லை, அவ்வளவுதான். நாள் முழுவதும் கடமையே கருத்தாக, பற்றற்ற பாவனையில் அவன் பணியாற்றி மட்டுமே வந்திருக்கிறான். ஆனால் அந்தக் கணம் அவன் மனத்தில் பக்தி உணர்வு எப்படியோ தலை எடுத்தது. அதன் உந்தலில் அனங்கவதியிடம் சென்று தன் ஆவலை வெளியிட்டான்.

கண்ணனான விஷ்ணு பகவானுக்கு மிகவும் உகந்த மலரைக் கண்டு அனங்கவதி பெரிதும் மகிழ்ந்தாள். வெகு அன்போடு வேடன் தந்த மலரைக்கொண்டு பகவானை அலங்கரித்தாள்.

ஆண்டவனின் அந்தத் திருக்கோலத்தைக் கண்ட மகிழ்ச்சியில் வேடனுக்கு அவள் மூவாயிரம் பொற்காசுகள் தந்தாள். ஆனால் வேடன் அதை ஏற்க மறுத்தான். வாய்க்கு இனிக்கும் வகைவகையான திண்பண்டங்களைத் தட்டுத்தட்டாகக் கொண்டு வரச் செய்தாள். வேடுவ தம்பதிகள் அதையும் ஏற்க மறுத்துத் தட்டிக் கழித்து விட்டார்கள்.

அவர்கள் உள்ளத்தில் அப்பொழுது பக்தி உணர்வு மேலிட்டிருந்தது. பசி உணர்வு அடங்கிப் போயிருந்தது. பசி, தாகம் அவர்களை வாட்டவில்லை. பக்தி சிரத்தையோடு அர்ப்பணித்த மலர்களுக்காக அவர்கள் எதையும் எந்தவிதத்திலும் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். பசிவந்திடப் பத்தும் பறந்திடும் என்பார்கள். ஆனால் பக்தி வந்திடப் பசி பறந்து போயிருந்தது.

அன்று இரவு அந்த வேட தம்பதிகள் அனங்கவதியோடு பட்டினியிருந்து, பச்சைத் தண்ணீர் பல்லில் ஊற்றாமல் இறைவனைப் பூஜித்தார்கள். வாழ்நாள் முழுவதும் எத்தனையோ எளிய பறவைகளை வேட்டையாடிக் கொன்றவர்கள்தான் என்றாலும், அந்த நேரம் உண்டான பக்தி உணர்வு அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையே மாற்றிவிட்டது. தூய்மையான உள்ளுணர்வோடு அவர்கள் புரிந்த மாசற்ற பக்தி அவர்கள் செய்த அத்தனை பாவங்களையும் வேர்அறுத்து மாய்த்து விட்டது.

பிரசேத முனிவர் கதையை முடித்தார். கதை முடிந்தது என்ற உணர்வு இல்லாமலே புஷ்பவாகன மன்னன் அவரை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

“இன்னும் என்ன பார்க்கிறாய், மன்னவா?” என்று கேட்ட முனிவர், முற்பிறவியில் நீதான் அந்த வேடனாக இருந்தாய். ராணி லாவண்யவதி உன் மனைவியாக இருந்தாள். பற்றற்ற உணர்வோடு நீ உன் கடமையைச் செய்து கொண்டிருந்தாய். அதனால் ஆண்டவன் மகிழ்ந்து உன் உள்ளத்தில் பக்தி உணர்வைப் பெருக்கினார். அந்த நல்வினையின் பயனாகத்தான் இப்பிறவியில் உனக்கு இவ்வளவும் கிடைத்திருக்கின்றன!

“புஷ்பவாகனா! கடமையே எல்லாவற்றுக்கும் மேலான புண்ணியம். கடமையே கீர்த்திக்கும் புகழுக்கும் உறைவிடம். அதனால்தான் மனிதன் பலா பலன்களைச் சிறிதும் எதிர்பாராமல் பற்றற்ற உணர்வோடு கடமைகளைச் செவ்வனே செய்து வரவேண்டும். அதுவே முக்கியம்” என்று முடித்தார்.

– அமரர் ரா. வீழிநாதன்

Leave a Reply