சுதர்சன ஹோமம்: வரலாறும் பலன்களும்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
– Advertisement –Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்,
ஆசிரியர் கலைமகள்இன்று காலை மயிலாப்பூர் சித்திரக் குளம் அருகில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன ஹோமம் நடைபெற்றது. அந்த ஹோமத்தில் பங்கு பெற்றேன். ஸ்ரீ சுதர்சன சக்கரத்தின் வலிமையை எண்ணியபடி வீட்டை நோக்கி நடந்தேன்!

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் ஒருங்கிணைந்த ஆற்றலால் உருவாக்கப்பட்டது சுதர்சனம். இது ப்ருஹஸ்பதியால் விஷ்ணுவுக்கு வழங்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எல்லா தெய்வங்களிடமிருந்தும் இதனைப் பெற்றுக் கொண்டார்.

கிருஷ்ண பரமாத்மா மற்றும் அர்ஜுனன் ஆகியோர் காண்டவ வனத்தை எரிப்பதற்கு அக்னி பகவானுக்கு உதவினார்கள். பதிலுக்கு ஸ்ரீ அக்னி பகவான் கிருஷ்ணனுக்கு ஒரு சுதர்சன-சக்கரம் மற்றும் ஒரு கௌமோதகி தந்திரத்தை வழங்கினார் என்கின்றன புராணங்கள்.

மகாவிஷ்ணுவின் ஆயுதங்கள் எண்ணற்றவை. இருப்பினும் அவற்றுள் மிகவும் போற்றிச் சொல்லப்படுபவை ஐந்து ஆயுதங்கள். சங்கு, கதாயுதம், வாள், வில் மற்றும் சக்கரம். இதில் ஸ்ரீசுதர்சனச் சக்கரமே ஸ்ரீசக்கரத்தாழ்வார் என்னும் பெருமையை அடைகிறது.

கோளத்தின் சுருக்கமே வட்டம். இந்த பிரபஞ்சத்தின் சூட்சும ரகசியமே வட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. தர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் ‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது. எனவேதான் “ஸுதர்ன சக்கரம்” என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கிறார்கள்.

சாதாரணமாக சுதர்சன சக்கரம் கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும். ஆனால் விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எனவே தான் ஆள்காட்டி விரலை நீட்டி யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்கிறோம்! ஆள்காட்டி விரலை நீட்டிப் பேசினால் விவாதங்கள் வினையாக முடியலாம்.

ஒவ்வொரு அவதாரத்தின் போதும் இந்த சக்கரமானது முக்கிய இடத்தைப் பெறுகிறது. வராக அவதாரத்தின்போது ஹிரண்யாட்சன் என்னும் அசுரனை அழிக்க வராகத்தின் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்னர் இருந்தார். ஸ்ரீ பிரகலாதனைக் காப்பாற்ற, நரசிம்ம அவதாரம் எடுத்து, ஹிரண்யகசிபுவை அழித்தபோது, நரசிம்மரின் கைகளின் நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர்.

ஸ்ரீராம அவதாரம் எடுத்தபோது அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். பரதனாக வந்தவர் ஸ்ரீசுதர்சனர் என்றும் சில புராணங்கள் சொல்கின்றன. ஸ்ரீ பலராமர் அவதாரத்தின்போது அவர் சுமந்து இருக்கும் ஏர்க் கலப்பையின் சக்தியாக ஸ்ரீசுதர்சனர் எழுந்தருளி இருந்தார். ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து தர்மத்தை பூ உலகில் நிலைக்கப் பாடுபட்டார் ஸ்ரீசுதர்சனர்.

sudharsana

திருநெல்வேலி மாவட்டத்தில் அத்தாள நல்லூர் என்றொரு கிராமம் உள்ளது. கஜேந்திர மோட்சம் நடைபெற்ற இடம். கஜேந்திர மோட்சம் கதையில் ஒரு பக்த யானைக்கு முதலையிடம் இருந்து விடுபட உதவ வந்தது ஸ்ரீசுதர்சனர்தான்.

சுதர்சன ஹோமத்தின் நற்பலன் என்னவென்றால்
பயம், விரக்தி, கெட்ட கனவுகள் போன்ற, நம்மை பாதிக்கும் எதிர்மறைகளைப் போக்கும்! ஹோம புகையிலிருந்து உருவாகும் நேர்மறை சக்திகள், உங்கள் உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தும் சக்தி கொண்டவை. நேரடியாக உணர்ந்தால் தான் இது புரியும்!

உங்கள் அணுகுமுறையில் பெரிய, சிறந்த மாறுதல் உருவாகவும் தன்னம்பிக்கை பெருகவும் ஸ்ரீ சுதர்சன வழிபாடு ஸ்ரீ சுதர்சன ஹோமம் ஆகியவை கை கொடுக்கும்

சுதர்சன ஹோம மந்திரங்கள்

ஓம் க்லீம் சஹஸ்ரார ஹூம் பட் ஸ்வாஹா — என்பது பீஜ மந்த்ரம்.

ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹீ
தன்னோ சக்ர ப்ரசோதயாத் — என்பது சுதர்ஸன காயத்ரி.

மஹா சுதர்சன ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து, விரதம் இருந்து முறையாக நடத்தப்படுகிறது

விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாட்களான ஏகாதசியும், துவாதசியும் மற்றும் பௌர்ணமி தினங்களும் இந்த ஹோமம் செய்வதற்கு ஏற்ற நாட்களாகக் கருதப்படுகின்றன. எல்லா நல்ல பலன்களையும் அளிக்க வல்லது ஸ்ரீ சுதர்சன ஹோமம்.

சுதர்சன ஹோமத்தில் நாணயங்களை பூர்ணாஹுதிக்குப் பின்னர் போடும் பழக்கம் இருக்கிறது. பின்னர் இந்த நாணயத்தை ஹோமத்தில் இருந்து எடுத்து ரட்ஷையாகவும் பூஜைக்கு உரிய பொருளாகவும் பாவிக்கிறார்கள் மக்கள். வரலாற்றை நோக்கும்பொழுது இரண்டு மன்னர்கள் சுதர்சன நாணயங்களை வெளியிட்டு இருப்பதை அறிய முடிகிறது.

கிமு 180 தேதியிட்ட, வாசுதேவ-கிருஷ்ணரின் உருவம் கொண்ட ஒரு நாணயம், ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் உள்ள கிரேக்க-பாக்டிரிய நகரமான அய்-கானூமில் கண்டுபிடிக்கப்பட்டது . அந்தக் காலத்து ஹிந்து ராஜா வெளியிட்ட நாணயமாக இருக்கலாம்.நேபாளத்தில், காத்மாண்டுவைச் சேர்ந்த ஜெய சக்ரவர்திந்திர மல்லா மகராஜா சக்கரத்துடன் கூடிய நாணயத்தை வெளியிட்டார்.

விஷ்ணுவை சக்ர-புருஷனாக சித்திரிக்கப்பட்ட ஒரு தங்க நாணயம் கண்டுபிடிக்க ப்பட்டு உள்ளது. இரண்டாம் சந்திரகுப்தர் விக்ரமா என்ற அடைமொழியுடன் நாணயங்கள் வெளியாகியுள்ளன. முன்புறத்தில் சக்கரமும் பின்புறத்தில் கல்பவிருட்சம் இருக்கின்றன.

சுதர்சன ஹோமம் சக்தி நிறைந்தது. இந்த ஹோமம் செய்வதால் எதிரிகள் மீது இருந்த பயம் நீங்கும்; தீவினைகள் அகலும் நல்வினைகள் வந்து சேரும். இந்த ஹோமத்தின் போது, அறுகம்புல்லை பசும்பாலில் முக்கி எடுத்து அக்னியில் சேர்த்துச் செய்யப்படும் பிரார்த்தனையால் பரிபூரண ஆயுள் கிடைக்கும். ஸ்ரீ சுதர்சன பகவானை வணங்குவோம்!
Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply