அறப்பளீஸ்வர சதகம்: தசாவதாரம்..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

திருமால் அவதாரம்

சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்
சுருதிதந் ததுமச் சம்ஆம்;
சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்
சுருட்டிமா நிலம்எ டுத்தே
போமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;
பொல்லாத கனகன் உயிரைப்
போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியது
புனிதவா மனமூர்த் திஆம்;
ஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்;
இரவிகுலம் வேர றுத்தோன்
ஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன்
இப்புவி பயந்த விர்த்தோர்
ஆமினிய கற்கிஇனி மேல்வருவ திவைபத்தும்
அரிவடிவம்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அருமை தேவனே!, முற்காலத்தில் சோமுகன் என்னும் அசுரனைக் கொன்று வானவர் துன்பங் கெடும்படி செய்து
மறைகளைக் கொண்டு வந்தது மீன் தோற்றம் ஆகும், வானவர்க்கு அமுதளிக்கக் கொண்ட தோற்றம் ஆமை
ஆகும், பெரிய நிலத்தைப் பாயைப் போற் சுருட்டி எடுத்துச் செல்லும் இரணியாக்கன் உயிரைப் பருகியது பன்றி ஆகும், கொடிய இரணியன் உயிரை ஒழித்தது நரசிங்கம் ஆகும், உலகத்தை (மாவலியிடம் தானம் பெற்று) அளக்க நெடிய உருக்கொண்டது வாமன வடிவம் ஆகும், கதிரவன் மரபை அடியுடன் ஒழித்தவன் அழகிய கோடரி
ஏந்திய பரசுராமன் ஆவான், செருக்கு அடைந்திருந்த இராவணனை வெற்றிகொண்டவன் இரகுமரபிற்
பிறந்த இராமன் ஆவான், இவ்வுலகின் அச்சத்தை நீக்கப் பிறந்துவந்தோர் பலராமனும் கண்ணனும் ஆவர், இனிமேல் தோன்றக்கூடியது
இனிய கற்கி ஆகும், இவை பத்தும் திருமாலின் உருவங்கள்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply