
இவையே போதும்
பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்
பூவலம் செயவேண் டுமோ?
பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்
புகழ்அறம் செயவேண் டுமோ?
நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்
நல்லறம் செயவேண் டுமோ?
நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒரு
நதிபடிந் திடவேண் டுமோ?
மெய்யாநின் அடியரைப் பரவுவோர் உன்பதம்
விரும்பிவழி படவேண் டுமோ?
வேதியர் தமைப்பூசை பண்ணுவோர் வானவரை
வேண்டி அர்ச் சனைசெய் வரோ?
ஐயா றுடன்கமலை சோணா சலந்தில்லை
அதிபனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
திருவையாறு, திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய நகரங்களின்
தலைவனே!, அருமை தேவனே!, அழியாத உண்மையும் ஒழுக்கமும் உடையவர்கள் உலகை வலம் வரல்வேண்டுமோ?,
தீய கொலையும் களவும் அற்ற நல்லொழுக்கமுடையவர் புகழத்தக்க
அறங்களைச் செய்தல் வேண்டுமோ?, மெலியாத ஆசையையும்
ஈயாமையையும் விட்டவர்கள் வேறு நல்ல அறத்தை நாடல்வேண்டுமோ?,
நல்ல உளத்தூய்மை பெற்றவர்கள் வேறாக ஒரு தூய ஆற்றில் முழுகுதல்
வேண்டுமோ?, உன் தொண்டரை உண்மையாக வணங்குவோர் நின்
திருவடியைப் போற்றுதலும் வேண்டுமோ?, மறையவரை வணங்குவோர் வானவரை விரும்பி மலரிட்டு வழிபடல் வேண்டுமோ?
பூவலம் செய்வதால் உண்டாகும் நற்பண்புகள் இயல்பாகக் கைவரப்பெற்றோர் மேலும் பூவலம் செய்தல் வேண்டத் தகுவது அற்றென்பார் .
திருவண்ணாமலையின் புராணம் இவ்வாறு கூறுவகை உணர்க. தில்லை
மரங்கள் நிறைந்த இடமான தில்லைவனம் ‘தில்லை’ என மருவி வழங்கியது.
நன்னெறியில் நிற்போர் வேறு அறங்கள் செய்ய வேண்டியதில்லை.